44
விரும்பியதை அடைய முடியாமற் போவதும் விரும்பாததை அடைந்து விடுவதும் தான் துர்ப்பாக்கியசாலிகளின் வாழ்க்கையாக இருக்கிறது. இந்திர நீலப் பூக்களைப் போன்ற அந்தக் கருநீல விழிகளில் தானே இமையால் பார்க்கப்படும் ஒரே பொருளாகிவிட்டதை எண்ணி அதற்காகவே பெருமைப்படலாம் போலவும் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. அந்தப் பெருமையால் ஏற்பட்ட மகிழ்ச்சியை அவளுடைய துயரம் நிறைந்த வேண்டுகோள் நினைவு வந்து அழ வைத்தது. மை தீட்டாமல் மை தீட்டினாற் போல் கரியதாயிருந்த அந்த நீலக் கருவிழிகளில் நினைத்தபடி வாழ முடியாமல் போய்விட்ட நிராசைகள் தெரிந்தன. தேர்ந்து பழகிய நாட்டியராணியாகிய அந்தக் கலையரசியின் நிராசையிலும் கூட ஓர் அழகிய பாவம் இருந்தது. அவளுடைய அந்த வனப்பு வாய்ந்த மூக்கினி நுனியில் அழகு நிறைகிற இடம் இதுவே என்று ஒரு முற்றுப்புள்ளி வைத்த மாதிரியும், அழகு இங்கே தான் தனது பரிபூர்ணத் தன்மையை அடைகிறது என்று தீர்மானமாக முடிந்த முடிவு மாதிரியும் ஓர் எழில் கொஞ்சித் தெரிந்தது. முதல் முதலாக அவளை இப்போதுதான் பார்க்கிற புதுமையாய்க் கருதிப் பார்க்கலானான் சத்தியமூர்த்தி. இந்த எழில் வெள்ளம் இதற்குரியவளாலேயே தனக்கு ஆத்ம சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது என்ற நினைப்பில் அவன் மனம் கர்வப்பட்டது. மாலையினிடையே ஓடும் நார்த்தொடுப்பைப் போல் தன்னுடைய எல்லா எண்ணங்களுக்கும் நடுவே ஓர் இன்றியமையாத உறவாக அவளும் இணைந்திருப்பதை அவனால் உணர முடிந்தது. மூலமாக நடுநிற்கும் அந்த நினைவு தன்னைப் பிணித்திருந்ததன் காரணமாக அதிலிருந்து விடுபட முடியாமலும் விடுபட விரும்பாமலும் கட்டுண்டிருந்தான் அவன். பொன் கிண்ணத்தில் ஒளி நிழல் படிவது போல் மோகினியின் அழகிய சிவந்த முகத்தில் தெரியும் அந்த நேரத்து உணர்வுகளை மதித்து அவள் கேட்ட வாக்குறுதியை அவளுக்குக் கொடுத்தான் சத்தியமூர்த்தி. "உன்னை நன்றாக வாழ வைக்க வேண்டும் மோகினீ! ஆனால் இப்போது நானும் ஒருவிதத்தில் அதைச் செய்ய முடியாத பலவீனனாயிருக்கிறேன். உண்மைதான் என்னுடைய பெரிய பலம். உண்மையை நம்புவதும் தொழுவதுமே என்னுடைய மதம். ஆனால் இன்றைய சமூக வாழ்வின் குழப்பங்களிடையே அதுவே என்னுடைய பலவீனமாகவும் இருக்கிறது. ஜமீந்தாரிடமும், கண்ணாயிரத்திடமும் பணபலமும், ஆள் பலமும் இருக்கின்றன. என்னுடைய மனோ பலத்தினால் நான் வெற்றி பெற அதிக நாள் ஆகும். அதுவரை உனக்குப் பொறுமையும் தைரியமும் இருக்குமானால், இந்தப் பரந்த உலகில் நீயும் நானும் எங்காவது என்றாவது கணவன் மனைவியாக ஊரறிந்து மணந்து வாழலாம்" என்று சத்தியமூர்த்தி கூறிக் கொண்டே வந்த போது அவள் தன் கண்களில் மறுபடியும் நீர் மல்கக் குறிக்கிட்டுப் பேசினாள்: "இப்போதே நான் உங்களை மணந்து உங்களோடு தான் வாழ்கிறேன். நீங்களே என் இதயத்தில் தெய்வமாக இருக்கிறீர்கள். உங்களை நினைத்து வாழ்வதாகப் பாவித்தபடியே இறந்து போய்விட்டாலும் கூட என்னால் திருப்தி அடைய முடியும். ஆனால், என்னுடைய அந்த வேண்டுகோளை நீங்கள் எப்படியும் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நம்பிக்கையோடுதான் நான் என்னுடைய கடைசி மூச்சைக் காற்றில் கலக்க விடுவேன்." "அசடே! உன்னுடைய இந்த அமங்கலமான பேச்சை முதலில் விட்டுவிடு. சாவைப் பற்றிப் பேசாவிட்டால் உனக்குப் பொழுது போகாதோ?" "சில பேருக்கு வாழ்வே மகிழ்ச்சி நிறைந்த பொழுது போக்கு உள்ளதாயிருக்கிறது! அது போல எனக்குத் துயரமும் துயரச் சொற்களும் பொழுது போக்காயிருக்கின்றன" என்றாள் அவள். இந்தச் சமயத்தில் தனக்குப் பின்னால் யாரோ வந்து நின்று கொண்டு அப்படி நிற்பதை உணர்த்துகிறாற் போல் கனைப்புக் குரல் கொடுக்கவே சத்தியமூர்த்தி திரும்பிப் பார்த்தான். அவன் தந்தை அங்கே வந்து நின்று கொண்டிருந்தார்.
கை நிறைய ஒரு கட்டு பைல்களோடும், கணக்குப் புத்தகங்களோடும் சத்தியமூர்த்தி அப்போது அங்கு வந்து நின்று மோகினியோடு பேசிக் கொண்டிருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் முகம் நிறைய ஆத்திரத்தோடும் நின்றார் அவன் தந்தை. 'புத்தி கெட்டவனே! நீ ஏன் இங்கு வந்து இவளைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கிறாய்?' என்று அவனைக் கடுமையான சீற்றத்தோடு கேட்பது போல் இருந்தது அவருடைய பார்வை. சத்தியமூர்த்தியின் மேல் அப்போது அவருக்கு எவ்வளவு வெறுப்பும், ஆத்திரமும் இருந்தன என்பதை நிரூபிப்பவர் போல் - வராந்தாவின் சுவர் ஓரத்தில் வேகமாக நடந்து போய்த் தோட்டத்தில் காறித் துப்பினார் அவர். அப்புறம் அவனோடு பேசினால் எவ்வளவு ஆத்திரத்தைக் கொட்டியிருக்க முடியுமோ - அதை விட அதிக ஆத்திரத்தோடு அவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே போனார். அவர் உள்ளே போன சிறிது நேரத்துக்கெல்லாம் யாரோ வேலைக்காரனைப் போலத் தோன்றிய முரட்டு ஆள் ஒருவன் சத்தியமூர்த்தியிடம் வந்து, "நீங்கள் என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள்? யாரைப் பார்க்க வேண்டும்?" என்று ஆளைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாகக் கேள்விகளைக் கேட்டான். அதோடு உள்ளேயிருந்து யாரோ சொல்லியனுப்பியதற்காக அந்தக் காரியத்தைச் செய்கிறவன் போல் மோகினி நின்று அவனோடு பேசிக் கொண்டிருந்த ஜன்னல் கதவையும் மூடுவதற்குத் தயாரானான் வேலையாள். அப்போது தான் அங்கிருந்து புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதைச் சத்தியமூர்த்தி புரிந்து கொண்டான்.
"கடைசியில் என்னை இந்த நரகத்திலேயே விட்டுவிட்டுப் புறப்படுகிறீர்களே?" என்று கேட்பது போல் நீர் மல்கும் கண்களால் மோகினி அவனை நிமிர்ந்து பார்த்தாள். எதிரே தெரியும் தோற்றத்தை நன்றாகக் காண முடியாமல் மறைக்கும் ஜன்னல் கம்பிகளின் மறுபுறத்தில் இருந்து அவளைப் போல் தானும் வாய்விட்டு அழமுடியாமல் இதயத்தினால் அழுதுகொண்டு நின்றான் சத்தியமூர்த்தி. "தைரியமாயிரு! உன்னுடைய தூய்மையைக் காப்பாற்றிக் கொள். உடம்பைத்தான் மனிதர்களால் சிறைப்படுத்த முடியும். இதயத்தையும், எண்ணங்களையும் சிறைப்படுத்த முடியாது. விரும்பியதை அடைய முடியாமற் போவதும், விரும்பாததை அடைந்துவிடுவதும் தான் துர்ப்பாக்கியசாலிகளின் வாழ்க்கையாக இருக்கிறது. ஆனால் நீயும் நானும் துர்ப்பாக்கியசாலிகள் இல்லை. மாலையில் மலர்களைப் போல் நம்முடைய எண்ணங்கள் ஒன்றாகத் தொடுக்கப்பட்டிருக்கின்றன." "அந்த மாலையிலும் நீங்கள் தான் பூ! நான் வெறும் நார்...!" "இருக்கலாம் மோகினி! ஆனால் பூவைக் கட்டிப் பிணைப்பது நார் தானே?" அவர்கள் இருவரும் மேலே பேசிக் கொண்டிருந்தவற்றைப் பேசிக் கொள்ள முடியாமல் ஜன்னல் கதவுகள் அடைக்கப்பட்டன. 'இன்னும் அதிகமான மரியாதைக் குறைவு எதுவும் நிகழ்வதற்குள் இங்கிருந்து வெளியேறி விடுவது நல்லதென்று' சத்தியமூர்த்தி அங்கிருந்து மெல்ல நடந்தான். அப்பால் இருப்பதைத் தெரியவிடாத அந்த ஜன்னலின் மூடிய கண்ணாடிக் கதவுகளைத் திரும்பிப் பார்த்த போது உள்ளே சிறைப்பட்டிருக்கும் சோகங்களை அவை அவனுடைய கண் பார்வையிலிருந்து மறைத்தன. விமான விபத்தில் பூபதி மரணம் அடைந்துவிட்டதைத் தெரிந்து கொண்டதும் தாங்க முடியாத சோகத்தோடு அவன் அந்த மாளிகைக்கு வந்தான். திரும்பும் பொழுதோ பூபதியைப் பறிகொடுத்த சோகத்தை விட மோகினியைச் சந்தித்த சூழ்நிலையின் சோகங்களில் அவன் மனம் அழுந்திப் போயிருந்தது. 'அவளைப் பின் தங்கி விட்டுவிட்டுத் தான் மேலே நடந்து போகிறோம்' என்ற நினைவினாலே அவனுடைய நடை தளர்ந்திருந்தது. ஜமீந்தாரின் நேர்மையற்ற வாழ்க்கையையும் ஒழுக்க நியாயங்களை மதிக்காத உன்மத்தம் பிடித்த போக்கையும் கண்டு ஒரு சாதாரணத் தோட்டக்காரனிடம் இருக்கிற குமுறலும் கொதிப்பும் கூடத் தன் தந்தையிடம் இல்லாமல் போயிற்றே என்று சத்தியமூர்த்தி வருந்தினான். என்ன மடமையான சமூக வாழ்க்கை இது? 'கோவிலில் அரை மணி நேரம் தெய்வத்தைத் தொழுகிறவர்கள் - அதே கோவிலுக்கு வெளியே வந்து இருபத்து நான்கு மணி நேரமும் ஒழுக்கமோ நற்குணமோ இல்லாத வெறும் பணக்காரர்களைத் தொழுது வயிற்றைக் கழுவ வேண்டியிருக்கிறது. துர்த்தேவதைகளை வழிபடுகிறவர்களுக்கு உடனடியாகப் பலிக்கிற சில மந்திர தந்திர சாதனைகள் கிடைப்பது போல், இந்தக் குணக்கேடான, வெறும் பணக்காரர்களைத் தொழுகிறவர்களுக்கும் சில நிலையில்லாத சௌகரியங்கள் கிடைக்கின்றன என்று மனம் வெறுத்த நிலையில் சிந்தித்துக் கொண்டே சென்றான் அவன். இரயில்வே மேற்பாலத்து இறக்கத்தில் பஸ் நிலையத்தருகே ஒரு சிறுவன் செய்தித்தாள் மாலைப் பதிப்பை விற்றுக் கொண்டே எதிரே வந்தான். விமான விபத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காகச் சத்தியமூர்த்தி அவனிடம் ஒரு செய்தித்தாளை விலைக்கு வாங்கினான். விமான விபத்தைப் பற்றிய செய்திகள் விவரமாக வெளியாகி இருந்தன. விபத்தில் மரணமடைந்தவர்களின் பிரேதங்களை அடையாளம் கண்டுபிடித்து எடுக்கவும் முடியாத அளவுக்குச் சேதம் நேர்ந்திருப்பதாகச் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. விமானத்தில் சென்று அகால மரணமடைந்தவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புக்களும் புகைப்படங்களும் - அவர்களில் மிக முக்கியமானவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளும் கூட அந்தச் செய்தித்தாளில் வெளியிடப்பட்டிருந்தன. தொழிலதிபரும், கல்வித் துறைக்கு எண்ணற்ற நிறுவனங்கள் மூலமாகவும், தம்முடைய கல்லூரி மூலமாகவும் பணி புரிந்திருப்பவருமாகிய பூபதி - பத்மஸ்ரீ விருது பெறுவதற்கு டில்லி போய்க் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி இறந்து விட்டதைப் பற்றிப் பத்திரிகை ஆசிரியர் விமான விபத்தைப் பற்றித் தனியே எழுதியிருந்த தலையங்கத்தில் வருத்தப்பட்டிருந்தார். விபத்து நடந்த இடத்துக்குப் பூபதியின் மகள் பாரதியும், மஞ்சள்பட்டி ஜமீந்தாரும், கண்ணாயிரமும் புறப்பட்டுப் போகிறார்கள் என்ற செய்தி கூடப் பத்திரிகையில் வந்திருந்தது. மறுநாள் மல்லிகைப் பந்தலுக்குப் போய் ஸ்தாபகர் தின விழாவுக்கு ஏற்பாடு செய்வதற்குப் பதில் தானே அநுதாப கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதை நினைத்து விதியின் கொடுமைக்கு மனம் கலங்கினான் சத்தியமூர்த்தி. இரவு வீட்டுக்குப் போய் தன் தந்தையைச் சந்தித்த போது அந்தச் சந்திப்பையே வெறுக்கும் மனநிலையோடு இருந்தான் அவன். தந்தையோ அவனிடம் நேரில் பேச விரும்பாமல் தாயிடம் அவனைப் பற்றிக் குறை சொல்லிக் கோபித்துக் கொண்டிருந்தார். பாரதியை மதுரையிலே சந்தித்து அவளுடைய தந்தையின் மரணத்துக்குத் துக்கம் விசாரித்து அநுதாபம் தெரிவிக்க சென்றால், அவளோ விபத்து நடந்த இடத்துக்குக் கண்ணாயிரத்தோடும், ஜமீந்தாரோடும் புறப்பட்டுப் போய்விட்டதாகத் தெரிந்ததனால் அவன் தன்னுடைய தீர்மானத்தை மாற்றிக் கொண்டு மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட வேண்டியிருந்தது. சரசுவதி பூஜையன்றைக்கு மாலை இரயிலில் அவன் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டு விட்டான். இரயிலில் அவன் இருந்த பகுதியில் உடன் வந்தவர்கள் கூட அந்தப் பயங்கரமான விமான விபத்தைப் பற்றியே பேசிக் கொண்டு வந்தார்கள். மோகினியின் துயரங்கள், பூபதியின் அகால மரணம், தன் தந்தையின் போக்கு, எல்லாவற்றையும் நினைத்து நினைத்து உற்சாகம் இழந்த நிலையில் பயணம் செய்தான் அவன். மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்தில் பஸ் மாறி மலைக்குப் போய்ச் சேர்ந்த போது மழை பிடித்துக் கொண்டது. மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் முழங்கால் நனைகிற அளவு தண்ணீர் பெருகியிருந்தது. மழை சிறிது நின்றதும் ஒரு ரிக்ஷாவைப் பிடித்து 'லேக் அவென்யூ'வுக்குப் போய்ச் சேரும் போது இரவு பதினொரு மணியாகிவிட்டது. குமரப்பன் அறையில் விழித்துக் கொண்டுதான் இருந்தான். உறங்கிக் கொண்டிருந்த தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனுக்கு இடையூறில்லாமல் மேஜை விளக்கை மட்டும் போட்டுக் கொண்டு பம்பாயிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழ் ஒன்றிற்குத் தான் வழக்கமாக வரைந்து அனுப்பும் 'கார்ட்டூனை' வரைந்து கொண்டிருந்தான் குமரப்பன். சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் குமரப்பன் முதல் கேள்வியாகப் பூபதியின் மரணத்தைப் பற்றித்தான் விசாரித்தான். "பெரிய மனிதர்களிலும், பணக்காரர்களிலும் கொஞ்சம் விதிவிலக்காயிருந்த ஒரே நல்ல மனிதனும் போய்ச் சேர்ந்து விட்டானடா சத்தியம்!" என்று குமரப்பன் வருத்தப்பட்டான். "பூபதி இறந்து போய்விட்டார் என்பதை நினைத்துக் கொண்டு அந்த வேதனையோடு இந்த அழகிய மலைநாட்டு நகரத்தையும் இதன் தெருக்களையும் பார்த்தால் இந்த ஊரே இருந்தாற்போல் இருந்து மங்கலம் இழந்து விதவையாகி விட்டார் போலத் தோன்றுகிறது குமரப்பன்! பஸ்ஸிலிருந்து கீழே இறங்கும் போதே மிகவும் வேண்டியவர் யாரையோ இழந்து விட்டதுபோல் மனம் தவித்தது" என்று சத்தியமூர்த்தி நண்பனிடம் கூறினான். நண்பர்கள் இருவரும் சிறிது நேரம் பூபதியின் பெருந்தன்மையைப் பற்றியும் விமான விபத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு சத்தியமூர்த்தி உறங்கச் சென்றான். 'குத்து விளக்கு' வேலையை உதறித் தள்ளிய பின்பு சில வடநாட்டு ஆங்கில இதழ்களுக்குத் தன் விருப்பத்துக்கிசைந்த கருத்தினைத் தன்னுடைய அபிப்பிராய சுதந்திரத்துக்குப் பங்கமில்லாத முறையில் கார்ட்டூன்களாக வரைந்து அனுப்பி அதற்கு மட்டும் சன்மானத் தொகையைப் பெறும் வழக்கத்தைக் குமரப்பன் கடைப்பிடித்து வந்தான். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் குமரப்பனை அந்த வாரத்தின் முந்திய ஐந்து ஆறு தினங்களில் வெளியான தினப் பத்திரிகைகளின் குவியல்களுக்கு நடுவேதான் பார்க்க முடியும். அவற்றைப் படித்துக் கார்ட்டூன்களுக்குக் கருத்தைத் தேடி எடுப்பான் அவன். பகலில் 'குமரப்பன் ஆர்ட்ஸ்' என்ற விளம்பரக் கலைக் கடையைக் கவனிக்க வேண்டியிருந்ததனால் இரவில் தான் அவனுக்குக் கேலிச் சித்திரங்கள் வரைய நேரம் கிடைக்கும். அவன் ஒரு பிறவிக் கலைஞன். இந்த உலகத்தைக் குறும்புத் தனமான கார்ட்டூன் கண்களால் பார்த்துப் பார்த்து இரசிக்கிற சுகத்தை அவனால் ஒரு போதும் இழக்கவே முடியாது. அதனால் 'குமரப்பன் ஆர்ட்ஸ்' கடையில் போர்டுகளும், டிசைன்களும், ஸ்லைடுகளும் எழுதிக் கொடுப்பதன் மூலம் வருமானம் வந்தாலும் கூட அவனால் கார்ட்டூன் வரையாமல் சும்மா இருக்கவே முடியாது. போர்டுகளும் டிசைன்களும் வரைந்து சம்பாதிப்பதனால் அவன் திருப்திப்பட முடியும். ஆனால், கார்ட்டூன்களை வரையாவிட்டாலோ அவனால் சந்தோஷப்படவே முடியாது. அவனுடைய பிறவிக் கலைக்குணம் பண வருமானத்தினால் மட்டும் சந்தோஷப்படாத கலைப் பேராசை வாய்ந்தது. சத்தியமூர்த்திக்கும் குமரப்பனின் பல குணங்கள் பிடிக்கும். அவற்றில் மிக முக்கியமானது குமரப்பனுடைய இந்தக் கலை மனம் தான். இரவு பன்னிரண்டு மணிக்கு மேலும் கண் விழித்துக் காகிதத்தையும், மையையும், சிந்தனையையும் முதலாக வைத்துக் கொண்டு, 'அந்த அகாலத்திலும் இந்த உலகத்தில் கேலி செய்வதற்கு ஏதாவது விஷயம் இருக்கிறதா?' என்று சிந்தித்துத் தவிக்கிற நண்பனை நினைத்து பெருமைப்பட்டான் சத்தியமூர்த்தி. பூபதியின் மரணம் மல்லிகைப் பந்தல் நகரத்தையே அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது என்பது மறுநாள் பொழுது விடிந்ததிலிருந்து தெரிந்தது. பூபதியின் தொழில் நிறுவனங்களாலும், கல்வி நிலையத்தினாலும், எஸ்டேட்டுகள் கம்பெனிகளாலும்தான் அந்த ஊரே இத்தனை பெரிதாக வளர்ந்தது. அதனால் எங்கு திரும்பினாலும் விமான விபத்தைப் பற்றியும், அவருடைய மரணத்தைப் பற்றியுமே பேசிக் கொண்டிருந்தார்கள். ஊரே களையிழந்து போய்விட்டாற் போலத் தோன்றியது. யாரைச் சந்தித்தாலும் இந்த மரணத்தைப் பற்றியே ஒருவருக்கொருவர் துக்கம் விசாரித்துக் கொண்டு தயங்கி நின்றார்கள். விஜயதசமிக்கு அடுத்த நாள் கல்லூரி திறப்பதாக இருந்தது. ஆனால் அன்று காலையில் கல்லூரி திறந்தவுடனேயே கல்லூரியை நிறுவியவராகிய பூபதியின் அகால மரணத்துக்கு அநுதாபம் தெரிவிக்கும் முறையில் மூடி விடுமுறை விட்டுவிட்டார்கள். ஆசிரியர்களும், மாணவர்களும், மாணவிகளும் கருப்புத் துணி பாட்ஜ் அணிந்து மல்லிகைப் பந்தல் வீதிகளில் துக்க ஊர்வலம் நடத்திய பின் கல்லூரி மைதானத்தில் ஓர் அநுதாபக் கூட்டமும் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் மாணவர்கள் எல்லாம் பூபதி அவர்களின் பெருந்தன்மையையும் கொடைப் பண்பையும் பற்றிப் பேசிக் கொண்டே சென்றார்கள். ஆனால் ஆசிரியர்களோ, பூபதிக்குப் பின்னர்க் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராக யார் வர இடமிருக்கிறது என்பது பற்றிய வாதப் பிரதிவாதங்களுடன் சென்றார்கள். அநுதாபக் கூட்டத்துக்குக் கல்லூரி முதல்வர் தலைமை வகித்தார். பூபதியின் சிறப்புக்கள், தொண்டு, பெருந்தன்மை, இவற்றைப் பற்றியோ, அவருடைய மரணத்தினால் ஏற்பட்டிருக்கும் பெரிய தேசிய நஷ்டத்தைப் பற்றியோ ஒன்றுமே கூறாமல் தமக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்த சில சொந்த நிகழ்ச்சிகளை மட்டுமே பேசி மாணவர்களைச் சலிப்படையச் செய்து கொண்டிருந்தார் முதல்வர். "என் மேல் அவருக்கு மிகவும் பிரியம் உண்டு. ஒரு முறை மாணவர் ஒருவர் ஆத்திரப்பட்டு என்னைக் கத்தியால் குத்த முயன்று நான் தோள்பட்டையில் கத்திக் குத்து காயத்தோடு ஆஸ்பத்திரியில் கிடந்தேன். அப்போது என்னைத் தேடிக் கொண்டு தம் மகளோடு ஆஸ்பத்திரிக்கே வந்து விட்டார் நம்முடைய கரஸ்பாண்டெண்டு" என்று இப்படித் தம்மைப் பற்றியே பேசி முடித்தார் முதல்வர். மற்ற ஆசிரியர்களில் சிலரும் இதே விதமாகத் தான் பேசினார்கள். மாணவர்களில் இரண்டொருவர் மிக நன்றாகப் பூபதியின் கல்விப் பணியைப் பற்றியும் அவருடைய மரணத்தினால் தேசத்துக்கு ஏற்பட்டவிட்ட பேரிழப்பைப் பற்றியும் உணர்ந்து பேசினார்கள். கடைசியாகச் சத்தியமூர்த்தி பேச எழுந்திருந்தான். "இந்த மலைகளும் இங்கு நம்மைச் சூழ்ந்திருக்கும் வானளாவிய கல்லூரிக் கட்டிடங்களும், கடந்த சில தினங்களாகக் களையிழந்து போயிருக்கின்றன. நம்மைப் பார்ப்பவர்கள் கேட்பவர்கள் எல்லாரும் ஓர் உண்மையான பெருந்தன்மையாளரின் மரணத்தைப் பற்றி விசாரிக்கிறார்கள். நாம் கண்ணில் நீர் நெகிழ நம்மிடம் விசாரிப்பவர்களுக்கு மறுமொழி கூறவும் முடியாமல் தயங்கி நின்று விடுகிறோம். ஒல்லையூர்ப் பெருஞ்சாத்தன் இறந்த பின்பு அந்த வள்ளலின் வீட்டு வாயிலிலிருந்த முல்லைக் கொடியைப் பார்த்து, 'வல்லேற் சாத்தன்மாந்த பின்றை - முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?' என்று குடவாயில் கீர்த்தனார் புறநானூற்றில் கேட்பது போல் இந்த அழகிய மலை நகரத்தில் உள்ள பூஞ்செடிகளையும், கட்டிடங்களையும், அருவிகளையும், ஏரிகளையும் பார்த்து உங்களுக்கு வளம் தந்த பெருமகன் மறைந்துவிட்டானே தெரியுமா? என்று கேட்கத் தோன்றுகிறது நமக்கு. நம்மைக் கண் கலங்க செய்துவிட்டு அவர் போய் விட்டார். இந்த உலகில் நல்லவர்களும், நல்லெண்ணமும் விரைவில் அழிந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்து நமக்குக் கவலையாக இருக்கிறது" என்று உருக்கமாகப் பேசத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. அவன் பேசிக் கொண்டிருந்த போது கூட்டம் எழுதி வைத்த பாடம் போல அமைதியாயிருந்தது. உணர்ச்சி மிக்க அந்தச் சொற்பொழிவில் மனம் நெகிழ்ந்து சில மாணவர்கள் கண்கலங்கி விட்டார்கள். சத்தியமூர்த்தி, தனக்கும் பூபதிக்கும் உள்ள நேரடிப் பழக்க வழக்கங்களைப் பற்றியோ, தன் மேல் அவருக்கு அதிகப் பிரியம் உண்டு என்பதைப் பற்றியோ - எதுவுமே பேசவில்லை. அப்படியிருந்தும் கூட்டம் முடிந்து, அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது "இவனிடம் அவருக்குக் கொள்ளைப் பிரியம்! இவனைத் திடீரென்று உதவி வார்டனாக்கினார். அடிக்கடி கூப்பிட்டுப் பிரியமாகப் பேசினார்... இவனுடைய விரிவுரை ஒன்றைக் கேட்டுவிட்டு 'ஆகா ஊகூ' என்று கொண்டாடினார். அப்படி எல்லாம் தன்னைத் தனி அக்கறையோடு கவனித்தவரை இவன் ஏன் புகழமாட்டான்?" என்று புறம் பேசிக் கொண்டு போன சில ஆசிரியர்களின் வம்புப் பேச்சைச் சத்தியமூர்த்தி தானே கேட்டு மனம் வருந்தினான். பாரதியும் ஜமீந்தாரும், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிடலாம் என்றும், பாரதி திரும்பி வந்த பின் எல்லா ஆசிரியர்களும் ஒரு முறைக்காக அவளை வீடு தேடிப் போய்த் துக்கம் கேட்டுவிட்டு வரவேண்டுமென்றும் முதல்வர் கூறியிருந்தார். அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கல்லூரி நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டத்தில் காலேஜ் போர்டின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதைப் பற்றியும் ஆசிரியர்கள் தங்களுக்குள் பரவலாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|