24

     ஆள விரும்புகிற அன்பைக் காட்டிலும் ஆட்படுகிற அன்பு மிகவும் பக்குவமானது. ஆள விரும்புகிற அன்பில் சுயநலமும் அகங்காரமும் உண்டு. ஆட்பட விரும்புகிற அன்பிலோ தியாகத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை.

     தன்னைப் பொருட்படுத்த வேண்டுமென்றும், தனக்காக ஏங்கித் தவிக்க வேண்டுமென்றும் பிறரிடம் எதிர்பார்ப்பதில் பெண்களுக்கு இணையேயில்லை. பெண்ணின் மனத்தில் பெரிய அந்தரங்கமும் ஆசையும் இதுதான். அவளுடைய இரகசியமும் இதைத் தவிர வேறில்லை. அவளுடைய பகிரங்கமும் இதைத் தவிர வேறில்லை. இப்படி எதிர்பார்ப்பதன் விளைவு எதுவோ அதைப் பொறுத்தே அவள் வெற்றியாக ஏற்றுக் கொள்வதும், தோல்வியாகப் பாவிப்பதுமாகிய முடிவுகள் நேர்கின்றன. படகைத் திரும்பிக் கொண்டு போய்ச் சத்தியமூர்த்திக்கு அருகே நின்று அவனை அழைத்தபோது, அவன் பாராமுகமாக இருந்துவிட்டதைக் கண்ட பாரதி அதைத் தன்னுடைய தோல்வியாகவே பாவிக்கத் தொடங்கினாள். எதிர்பார்க்கிற இடத்தில் எதிர்பார்த்துத் தவிக்கின்ற அன்பு இல்லாமையை உணரும்போது பெண்ணைப் போல் வாடி ஒடுங்குகிற மெல்லிய மனம் மனிதச் சாதியில் வேறொருவருக்கும் இருக்க முடியாது என்பதை உலகில் நேற்று வரை பிறந்து வழங்கும் காவியங்களின் பரம்பரையெல்லாம் நிரூபிக்கின்றன. ஏமாற்றத்தில் பிறக்கும் ஒரு வகைக் கோபத்தோடு பாரதி படகை வேகமாக வலித்துக் கொண்டு போய் விட்டாள். ஆனாலும் அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. படகில் இருட்டுகிற வரை சுற்ற நினைத்திருந்தவள், பாதியிலேயே கரையேறி, "எனக்குத் தலைவலி... வீட்டுக்குப் போகிறேன்" என்று தோழிகளிடம் சொல்லித் தப்பித்துக் கொண்டாள். எந்த அறை பெண்ணின் அகங்காரத்தின் மேல் ஓங்கி விழுகிறதோ அந்த அறைக்கு வலி அதிகம். பெண்ணுக்கு ஏற்படுகிற அகங்காரங்களில் எல்லாம் மிகப்பெரிய அகங்காரம் அன்பு காரணமாக ஏற்படுவதாகத்தான் இருக்க முடியும். அப்படி ஓர் அகங்காரம் தன்னிடம் இருப்பது சில சமயங்களில் பெண்ணுக்கே தெரியாமற் போகலாம். ஆனால், அன்பு காரணமாக ஏமாறும் போதும், பிரியும்போதும், இப்படி ஓர் அகங்காரம் தன்னிடம் இருந்தது என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர முடியும். சத்தியமூர்த்தி, தான் ஆர்வத்தோடு அழைத்த குரலுக்குப் பதிலே சொல்லாமல் பாராமுகமாக இருந்ததை எண்ணி எண்ணி வேதனைப்பட்டாள் பாரதி. வீட்டுக்குத் திரும்பியிருந்தாலும் அங்கு அவளுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை.

     நாலைந்து மாணவர்கள் புடைசூழ்ந்து அமர்ந்து உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்த வேளையில், அவள் குறுக்கிட்டு அழைத்ததை விரும்பாததனால் தான் சத்தியமூர்த்தி கவனிக்காதது போல் இருந்து விட்டான். மாணவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பிய பின் உணவு விடுதிக்குப் போய் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, அறைக்குத் திரும்பிய பின் அவனும் இதைப் பற்றித்தான் சிந்திக்கத் தொடங்கியிருந்தான். பாரதியிடம் வேண்டுமென்றே தான் பாராமுகமாக இருந்ததாகத்தான் அவனும் உணர்ந்திருந்தான். அந்த வேளையில் அப்படிப் பாராமுகமாக இருக்க வேண்டுமென்ற பிடிவாத உணர்ச்சி தனக்கு எதற்காக ஏற்பட்டதென்று நினைத்த போதும் அதன் காரணம் இப்போது அவனுக்கு புரியாததாக இருந்தது. ஏதோ அந்த வேளையில் அப்படித்தான் செய்துவிட வேண்டுமென்று தோன்றியது, 'செய்துவிட்டோம்' என்ற ஞாபகம் மட்டும் நினைக்க மீதமிருந்ததே தவிரக் காரணம் மீதமில்லை.

     உறக்கம் வராத காரணத்தினால் அறைக்கு வெளிப்புறம் மாடி வராந்தாவில் உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. பேச்சுத் துணைக்குத் தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் ஊரில் இல்லை. பின் பக்கத்தில் சண்பக மரத்துக் கிளைகளும் இலைகளும் காற்றோடு பேசிக் கொண்டிருந்தன. முன் பக்கம் பாதரசம் வழிந்து நிறைந்து பரந்தாற் போல் ஏரியும், வெண்நீல மின் விளக்குகளுக்கும் அப்பால் இருளோடு இருளாக இனந்தெரியாமற் கலந்து போய்விட்ட மரக் கூட்டங்களும், மலைகளும், லேக் அவென்யூவும் அமைதியாகத் தெரிந்தன. நீண்டு பரந்த சோக இருளில் அங்கங்கே மின்னி மறையும் சின்னஞ்சிறு மகிழ்ச்சி மின்னல்களைப் போல் எங்கோ சில பகுதிகளிலிருந்து வானொலி இசைக் காற்றில் முறிந்து முறிந்து வந்து ஒலித்துக் கொண்டிருந்தது. எதிர்ப்புறம் ஏரியின் மறுகரையில் 'நியான்ஸைன்' நீலக்குழல் விளக்குகளில் எழுதப்பட்டிருந்த 'லேக் வியூ ஹோட்டல்' என்ற ஒளி எழுத்துக்கள் அணைந்து அணைந்து எரிவதன் மூலம் 'பெயரும் மின்னி மின்னி மறையக் கூடிய இயல்புடைய ஒன்றுதான்' என்பதை நாகரிகமாக நிரூபித்துக் கொண்டிருந்தது. தன் மனத்தில் இடைவிடாத இன்பக் கனவாக நிறைந்திருந்த மல்லிகைப் பந்தல் என்னும் அந்த ஊருக்கே தான் வந்து வசிக்கத் தொடங்கி வாரங்கள் சில ஓடி விட்டதையும் தன் ம்னம் விரும்பி வேலை பார்க்க வந்த அந்த ஊர் கலைக் கல்லூரியின் சுக துக்க அனுபவங்களும், புகழ் பொறாமை நிகழ்ச்சிகளும், போதுமான அளவு தன்னைச் சூழ்ந்து விட்டதையும் நினைத்துப் பார்த்துத் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. சாயங்காலம் ஏரிக்கரையில் பாரதியிடம் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டாமென்று தான் இப்போது அவன் நினைத்தான். அதில் அவளுடைய மனத்தை அதிகமாகப் புண்படுத்தியிருக்க முடியும் என்பதும் அவனுக்குப் புரிந்தது. ஆனாலும் அவன் பாரதியிடம் அளவாகவும், கண்டிப்பாகவும் பழக வேண்டுமென்றே தன் மனத்திற்கு அடிக்கடி எச்சரித்துக் கொண்டிருந்தான். அந்தக் கல்லூரியின் சூழ்நிலையும், வம்பு பேசும் மனப்பான்மையும், கோள் சொல்லும் குணம் உள்ளவர்கள் அங்கு நிறைந்திருப்பதும் தெரிந்து அவன் எச்சரிக்கையாக இருக்க விரும்பினான்.

     கல்லூரி வகுப்பு நேரங்களிலும், வெளியேயும் பாரதி அடிக்கடி தன்னைச் சந்திக்க விரும்புவதைத் தவிர்த்துத் தான் அவளிடமிருந்து விலகி நிற்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. ஆர்வத்தோடு ஓடி வந்து அவள் தன் எதிரே நின்று சிரித்துப் பேசுவதையும் பாராட்டுவதையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளச் செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தான் அவன். அந்த நினைப்பைச் செயலாக்கத் தொடங்கும் போது மாலையில் நிகழ்ந்தது போல் பாரதியின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதும் அவனுக்குத் தெரியாமல் இல்லை. உலகில் எல்லா விதமாகவும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இரண்டு வகையான அன்பு உண்டு. யார் மேல் அன்பு செய்ய விரும்புகிறோமோ அவரையே ஆள விரும்புகிற அன்பு ஒன்று. யார் மேல் அன்பு செய்ய விரும்புகிறோமோ அவருகே ஆட்படுகிற அன்பு ஒன்று. ஆள விரும்புகிற அன்பைக் காட்டிலும், ஆட்படுகிற அன்பு மிகவும் பக்குவமானது. ஆள விரும்புகிற அன்பில் சுயநலமும் அகங்காரமும் உண்டு. ஆட்பட விரும்புகிற அன்பில் தியாகத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை. ஆள விரும்புகிற அன்புக்கு உலகில் காதல் என்றும், பிரேமை என்றும் விதம்விதமாகப் பெயர் சொல்லுகிறார்கள். ஆட்படுகிற அன்புக்குப் பக்தி என்று பெயர் சொல்லுகிறார்கள்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.