21

     வாழைக்காய்க் குலை முற்றியவுடன் தாறு வெட்டிக் காய்களைச் சுற்றி வேப்பிலைக் கொத்துக்களால் மூடிக் களிமண்ணால் மூட்டம் போட்டுச் சூடும் வெம்மையும் உண்டாக்கிப் பழுக்கச் செய்வார்கள். அதைப் போல் அந்த வீட்டின் கசப்பினாலும் வெம்மையினாலுமே அவள் மனம் பழுத்து இனிமை கண்டிருந்தது.

     நாலைந்து நாட்களாகத் தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததைப் போலவே அன்றும் பலமான இடிகளோடும், மின்னலோடும் கோடை மழை பெய்து ஓய்ந்திருந்தது. அந்த முன் மாலை நேரத்தில் மழை பெய்து நின்ற நிலையில் கோபுரங்களும், தானுமாக வார்த்தைகளால் இன்னதென வருணிக்க முடியாத தொரு பேரழகில் குளித்தெழுந்து ஈரம் புலராத பச்சை வனப்போடு இலங்குவது போல் தோன்றிக் கொண்டிருந்தது மதுரை நகரம். இசை வேளாளர்கள் நிறைந்த சங்கீத விநாயகர் கோயில் தெருவில் ஏதோ ஒரு வீட்டில் யாரோ ஓர் இளம் பருவத்து நாதஸ்வரக் கலைஞர் இந்த உலகத்தின் சகலவிதமான அழகுகளையும் ஒலி வடிவமான ஒரே ஓர் இராகத்தில் சொல்லிவிட விரும்புவதுபோல் தோடியை வாசித்துக் கொண்டிருந்தார். இன்னொரு வீட்டிலிருந்து தேர்ந்த விரல்கள் நல்ல வீணையின் நரம்புகளில் மிக மென்மையானதோர் இனிமையைப் பேசிக் கொண்டிருந்தன. தெருவைத் தழுவினாற் போல் நீண்டு செல்லும் மின்சார 'வயரிலும்' தந்திக் கம்பிகளிலும் முத்து முத்தாக மழை நீர் நிற்கவும் மாட்டாமல், சிந்தவும் மாட்டாமல் மனிதனுடைய ஆசைகளைப் போல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. யாரும் வராத தெருக்கோடியை வெறித்துப் பார்த்தபடி அங்கு யாரோ வேண்டியவர்கள் வரப்போவது போல் கற்பித்துக் கொண்ட ஆர்வத்தோடு வீட்டு வாசலிலிருந்து கவனித்த வண்ணம் இருந்தாள் மோகினி.

     அங்கிருந்து விடுபட்டு எங்கோ உடனடியாகப் பறந்து போய்விட வேண்டும் போலத் தவித்துக் கொண்டிருந்தது அவள் மனம். உள்ளே அம்மாவும், கண்ணாயிரமும் கண்ணாயிரத்தோடு வந்திருந்த வேறொரு மனிதரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சிரிப்பும் அரட்டையுமாகக் கண்ணாயிரம் பேசிய விதத்தைப் பார்த்தால் இந்த உலகத்தையே தாம் வம்பளப்பதற்கென்று சாசனம் செய்து கொடுத்துவிட்டது போல் பாவிப்பதாகத் தோன்றியது. அந்த நிலையில் உள்ளே உட்காருவதற்குப் பிடிக்காமல் தான் வாசலுக்கு எழுந்து வந்திருந்தாள் மோகினி.

     'அந்த வீட்டில் அந்தச் சூழ்நிலையில் தன் உடம்பையும் மனத்தையும் எப்படிப் பரிசுத்தமாகப் பாதுகாத்துக் கொண்டு வாழ்வதற்கும் முடியப்போகிறது?' என்று எண்ணித் தவித்த போது எதிர்காலம் இருண்டு தெரிந்தது. 'கேளாதே வந்து கிளைகளாய்த் தோன்றி' என்று ஒரு பழைய பாட்டு ஆரம்பமாகும். 'இந்த வீட்டைத் தேடி வந்து இந்த அம்மாவுக்குப் பெண்ணாய்ப் பிறந்து இந்தப் பூமியில் இப்படி அவதிப்பட வேண்டும் என்று யார் தவம் இருந்தார்கள்?' என்று எண்ணும் போது அவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. செந்தாமரைப் பூக்களாய் மலர்ந்த கைகளும், கால்களும் ஒளிரச் சத்தியமூர்த்தி அந்த வீட்டின் வாயிற்படிகளில் ஏறி வந்த இனிய நாட்கள் அவளுக்கு நினைவு வந்தன. கையில் அவனளித்த மோதிரத்தையும் இதயத்தில் அவனைப் பற்றிய நினைவுகளையும் அணிந்து கொண்டு நேரம் போவது தெரியாமல் தெருக்கோடியை வெறித்துப் பார்த்தபடி நின்றாள் அவள். 'இந்த வழியாகத்தான் அவர் கம்பீரமாக நிமிர்ந்து நடந்து வந்தார்! இந்த வழியாகத்தான் திரும்பிப் போனார்' என்று வந்த வழியும் போன வழியும் ஞாபகத்தில் இருந்தன. தெருவில் எங்கிருந்தோ நாத வெள்ளமான மதுர அலைகளோடு பொங்கிய நாதஸ்வரக்காரரின் தோடியும், மழை பெய்து நின்றிருந்த சூழ்நிலையும், இசை வண்டு முரல்வது போல் வீணையின் பக்குவமான ஒலியும், அவளை வேறு உலகத்தில் வேறு ஞாபகத்துக்குக் கொண்டு போயிருந்த போது அம்மா வந்து காதருகில் முணுமுணுத்து இந்த உலகத்தை ஞாபகப் படுத்தினாள்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.