60

     மனத்தின் எல்லா நோய்களுக்கும் அன்புதான் மருந்து. அதே அன்பு பொய்யாயிருந்து விட்டாலோ அதை விடப் பெரிய நோய் வேறெதுவும் இல்லை.

     தந்தியைப் பற்றிக் கூறியதும் உடனே கல்லூரிக்கு லீவு எழுதிக் கொடுத்துவிட்டு மறுக்காமல் மதுரைக்குப் புறப்பட்டிருந்தாலும் பிரயாணத்தின் போது சத்தியமூர்த்தி சிறிதும் உற்சாகமின்றி ஏதோ ஆழ்ந்த மனப்போராட்டங்களாலே தாக்கப்பட்டவனைப் போல் தளர்ந்து உடன் வருவதைக் குமரப்பன் உணர்ந்து கொண்டான். எனவே நண்பனோடு அதிகம் பேச்சுக் கொடுக்காமலும் அவனுடைய மனப்போரட்டத்துக்குக் காரணத்தை அவனிடமே தூண்டித் தூண்டிக் கேட்காமலும் பஸ்ஸுக்கு வெளியே ஓடும் காட்சிகளில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தலானான் குமரப்பன்.

     சரியாக அதே நேரத்திலே லேக் அவின்யூவில் சத்தியமூர்த்தியின் அறையைத் தேடி மோகினியின் கடிதத்தோடு வந்த மகேசுவரி தங்கரத்தினத்துக்கு, "அவரு ஊருக்குப் போயிருக்காரு! ஏதோ அவசரமாகத் தந்தி வந்தது. ஒரு வாரம் காலேஜுக்கு லீவு போட்டு விட்டுக் கிளம்பிட்டாரு" என்று கீழேயிருந்த ரொட்டிக் கடை வேலைக்காரன் பதில் கூறினான். ஏமாற்றத்தோடு திரும்பிய மகேசுவரி கடிதத்தைத் திருப்பிக் கொடுத்து, 'அவர் ஊரில் இல்லை' என்ற விவரத்தையும் தெரிவித்தாள். 'சத்தியமூர்த்தி ஊரில் இல்லை' என்ற விவரத்தைப் பாரதியிடமிருந்து கேள்விப்பட்ட போது, "நீ ஏன் வீணாக மனம் கலங்குகிறாய் பெண்ணே! என் பாக்கியம் அவ்வளவுதான். இந்த உலகத்தில் என்னைப் போல் துரதிர்ஷ்டசாலி வேறு யாரும் கிடையாது" என்று அழுகைக்கிடையே பாரதியைப் பார்த்துக் கூறினாள் மோகினி. "கவலைப்படாமல் இருங்கள் அக்கா! சந்தேகங்களும் தடைகளும் குறுக்கிடாத காதல் தேவர்களின் இதிகாசங்களில் கூட இல்லை. உங்களுடைய புண்ணியம் வீண் போகாது. சத்தியமூர்த்தி சார் எவ்வளவோ நல்லவர். முன் கோபமும், பொறாமையும் அவரிடம் என்றுமே இருந்ததில்லை. இன்று ஏதோ சந்தர்ப்பக் கோளாறுகளால் இப்படி ஆகிவிட்டது! நீங்கள் ஜமீந்தாருக்குக் காப்பி கொடுத்துக் கொண்டிருந்ததையும், உங்களை அவரிடமிருந்து பிரிக்க வேண்டுமென்றே இந்தப் பாவிகள் தந்திரமாகத் தயார் செய்து மாட்டிய படத்தையும் பார்த்துத் திடசித்தமுள்ளவராகிய சத்தியமூர்த்தியே மனம் வேறுபட்டு ஆத்திரம் கொண்டுவிட்டார். எல்லாம் விஷக்கடி வேளை" என்று வருந்திய பாரதி மோகினியைச் சமாதானப்படுத்தி அமைதியடையச் செய்ய மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

     "நீங்கள் நிம்மதியாக இருக்கணும் அக்கா! சத்தியமூர்த்தி சார் மதுரைக்குத்தான் போயிருக்கிறார் என்று தெரிகிறது. உங்களுடைய இந்தக் கடிதத்தைப் படித்தால் எப்படியும் அவருடைய மனம் இளகும். அவருடைய மதுரை வீட்டு விலாசம் எனக்குத் தெரியும். உங்கள் கடிதத்தை நாளைப் பகலில் மதுரைக்குத் தபாலில் அனுப்பி வைக்கிறேன். கடிதம் அவருக்குக் கிடைத்து அதை அவர் படித்த பின்பு மறுபடி இங்கு திரும்பி வரும் போது உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டதற்காக மனம் வருந்தியபடி வருவார். எல்லாம் சரியாகி நல்லபடி முடியும். வீணாக மனம் கலங்காதீர்கள்" என்று மோகினிக்கு ஆறுதல் கூறிவிட்டு அவள் சத்தியமூர்த்திக்கு எழுதிய கடிதத்தை மறுநாள் பகலில் அவருடைய மதுரை முகவரி எழுதிய உறையிலிட்டு ஒட்டி ரிஜிஸ்தர் தபாலில் அனுப்பிவிடச் சொல்லி மகேசுவரி தங்கரத்தினத்திடம் கொடுத்தனுப்பினாள். டிரைவர் முத்தையாவிடம் கொடுத்தனுப்பலாமென்றால், அவன் கண்ணாயிரத்தையும் கணக்குப்பிள்ளைக் கிழவரையும் அழைத்துக் கொண்டு காரில் நேரே மஞ்சள்பட்டி போய் அங்கு ஏதோ காரியங்களை முடித்துக் கொண்டு அப்புறம் மதுரை போய் விட்டுத் திரும்புவதற்காக மறுநாள் காலையில் புறப்படுவதாகச் சொல்லியிருந்தான். 'சத்தியமூர்த்தியின் தந்தையாகிய அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவரிடமே உறையிலிட்டு ஒட்டிய இந்தக் கடிதத்தைக் கொடுத்து மதுரையில் அவருடைய மகனிடம் சேர்க்கச் சொன்னால் என்ன?' ஒரு கணம் பாரதிக்கு யோசனை தோன்றியது. அடுத்த கணமே, அந்த யோசனை பைத்தியக்காரத்தனமாகவும், நம்பிக்கையற்றதாகவும் படவே, அவள் அதைச் செய்வதில்லை என்ற முடிவுடன் தன் தோழி மகேசுவரி மூலம் தபாலுக்குக் கொடுத்தனுப்பினாள். 'கணக்குப்பிள்ளைக் கிழவர் தம் மகனை என்ன காரணத்தினாலோ வெறுக்கிறார். தவிரவும் அவர் நேரே மதுரைக்குப் போகாமல் காரில் முதலில் மஞ்சள்பட்டி போய் அங்கு ஒருநாளோ இரு நாட்களோ தங்கிக் காரியங்களைப் பார்த்துவிட்டு அப்புறம் கண்ணாயிரத்தோடு அங்கிருந்து புறப்பட்டு மதுரைப் போகப் போகிறார். கண்ணாயிரமும் உடன் போகிற போது கணக்குப்பிள்ளைக் கிழவரை நம்பி இதைக் கொடுத்தனுப்புவது பைத்தியக்காரத்தனம்! பணத்துக்காகச் சேரத் தகாதவர்களோடு சேர்ந்து சொந்த மகனையே வெறுக்கிறவரை எப்படி நம்புவது?' என்று சிந்தித்த பின்பு கடிதத்தைச் சத்தியமூர்த்தியின் பேருக்கே பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தாள் பாரதி.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.