34

     உடம்பினால் மட்டும் முதுமையடைகிறவர்களையாவது மன்னிக்கலாம்; மனத்தினாலும் முதுமை அடைந்து தளர்ந்து விடுகிறவர்களை மன்னிக்கவே முடியாது.

     பளீரென்று புதிய வர்ணம் மின்னும் 'குமரப்பன் ஆர்ட்ஸ்' என்ற விளம்பரப் பலகையை அருகில் சென்று நிமிர்ந்து பார்த்துவிட்டு "இதெல்லாம் என்ன குமரப்பன்! இந்த இடத்தை வாடகைக்குப் பேசி அட்வான்ஸ் வேறு கொடுத்திருக்கிறாயாமே? ரொட்டிக் கடைக்காரர் இப்போதுதான் சொன்னார்" என்று சத்தியமூர்த்தி சிரித்துக் கொண்டே நண்பனைக் கேட்டான். சத்தியமூர்த்தி இந்தக் கேள்வியைக் கேட்கும் போது சிரித்துக் கொண்டே கேட்டது குமரப்பனுக்குப் பிடிக்கவில்லை.

     "ஏன் சிரிக்கிறாய், சத்தியம்? இந்த மல்லிகைப் பந்தல் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் எத்தனை கம்பெனிகளும், வியாபார நிறுவனங்களும், தேயிலை, காப்பி எஸ்டேட்களும், பழத்தோட்டங்களும் இருக்கின்றன? ஒரு பெரிய கல்லூரியும் இருக்கிறது. இவ்வளவிற்கும் தேவையான போர்டுகள், டிசைன்கள், விளம்பர எழுத்துக்கள் எழுதிக் கொடுப்பதற்கு என்னைப் போல் ஒரு நாணயமான தொழிலாளி இப்படி ஒரு கடை வைத்தால் தோற்றுப் போய்விடுவேன் என்றா நினைக்கிறாய்? தொழில் தெரிந்தவன் சும்மா இருக்கக் கூடாது; சும்மா இருக்கவும் முடியாது. எண்ணி இன்னும் பதினைந்தே நாட்களில் இந்தக் கடையைப் பார்; இங்கே மாதம் முந்நூறு ரூபாயிலிருந்து ஐந்நூறு ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்படி தொழில் நடத்தவில்லையானால் என்னை ஏன் என்று கேள்" என்று சத்தியமூர்த்திக்கு மறுமொழி கூறிக்கொண்டே 'இவ்விடம் சகலவிதமான விளம்பரப் பலகைகளும், டிஸைன்களும் எழுதிக் கொடுக்கப்படும்' என எழுதப்பட்டிருந்த மற்றொரு சிறிய விளம்பரப் பலகையை முன்பு மாட்டப்பட்டிருந்த பெரிய விளம்பரப் பலகைக்குக் கீழே வைத்து ஆணிகளை அடிக்கத் தொடங்கினான் குமரப்பன். 'நம்பிக்கையையும் தைரியத்தையும் முதலாக வைத்து என்னால் எந்தத் தொழிலையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்' என்ற கர்வத்தோடு அவன் காரியங்களைச் செய்வதாகத் தோன்றியது. குமரப்பனை அவன் போக்கில் விடுவதே நல்லதென்று சத்தியமூர்த்தி பேசாமலிருந்து விட்டான். காலாண்டுத் தேர்வு நவராத்திரி விடுமுறையும் அருகில் நெருங்கிவிட்டதனால் சத்தியமூர்த்திக்கும் கல்லூரி வேலை அதிகமாக இருந்தது. இரவில் மாணவர்கள் விடுதி அறைகளில் ஒழுங்காகத் தங்கிப் படிக்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டியிருந்தது. மாணவர்களை விடுமுறையில் வெளியூருக்கு அழைத்துச் சென்று சமூகச் சேவையில் பழக்கப்படுத்துவதற்காகவும் ஓர் ஏற்பாட்டைச் செய்ய வேண்டியிருந்தது. கல்லூரி மாணவ, மாணவிகளிடையே 'சோஷியல் சர்வீஸ் லீக்' என்று ஒரு சங்கம் இருந்தது. அதில் உள்ள மாணவ மாணவிகளை அக்கம் பக்கத்துச் சிற்றூர்களுக்கு அழைத்துச் சென்று சாலைகள் போடுதல், வைத்திய உதவி செய்தல், சமூக நலம், கிராம முன்னேற்றம் போன்றவற்றைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லுதல் ஆகிய காரியங்களைச் செய்வதற்காக 'ஒர்க் காம்ப் - பணி முகாம்' - ஒன்றை ஏற்பாடு பண்ண வேண்டியிருந்தது. நவராத்திரி விடுமுறை பன்னிரண்டு நாட்களுக்குக் குறையாமல் இருந்ததென்றால், அதன் தொடக்கத்தில் ஒரு வாரம் சமூகச் சேவைக்காக ஓர் 'ஒர்க் காம்ப்' போக வேண்டியிருந்தது. 'ஒர்க் காம்ப்' போகும் போது, கிராமத்துக் குழந்தைகளுக்குக் கரைத்துக் கொடுப்பதற்காக வந்திருந்த 'பால் பவுடர்' டின்கள் சத்தியமூர்த்தியின் உதவி வார்டன் அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கல்லூரி 'சோஷியல் சர்வீஸ் லீக்' தலைவராக வேறொரு முதிய பேராசிரியர் இருந்தார். மாணவர்களின் சமூகச் சேவை முகாமை விடுமுறையின் போது எந்தக் கிராமத்தில் அமைக்கலாம், எத்தனை நாட்கள் அமைக்கலாம் என்று கலந்து பேசுவதற்காக அன்று மாலை அந்தப் பேராசிரியருடைய வீட்டிற்குப் போயிருந்தான் சத்தியமூர்த்தி. பேராசிரியருக்குச் சொந்த ஊர் பாலக்காட்டுப் பக்கம். அதனால்தானோ என்னவோ அந்த மனிதர் முக்கால்வாசி நேரம் சமையலைப் பற்றியும் சாப்பாட்டில் உள்ள சுசி ருசிகளைப் பற்றியுமே சுவைத்துப் பேசிக் கொண்டிருப்பார். சேர்ந்தாற் போல அவர் வாயலுக்காமல் ஒன்றரை மணி நேரமோ இரண்டு மணி நேரமோ பேசுவதற்கு ஒரு விஷயத்தை ஆரம்பித்து வைக்க வேண்டுமானால், அவியலைப் பற்றியோ, வறுவலைப் பற்றியோ ஆரம்பித்து வைக்க வேண்டும். மாணவர்களில் சிலர் அந்தப் பேராசிரியருக்கு 'மலையாளத்து அவியல்' என்றே பெயர் சூட்டியிருந்தார்கள். 'ஓய்! பாலக்காடு வர்மா கபேயில் இரண்டு கரண்டி அவியல் சாப்பிடுவதற்குப் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா!' என்று எவரிடமாவது ஒரு நாளைக்கு ஒரு தரமேனும் பாலக்காடு 'வர்மா கபே'யைப் பற்றிச் சொல்லாவிட்டால் அவருடைய மண்டை வெடித்துப் போகும். இந்த விநோதப் பிரகிருதியைச் சந்திப்பதற்காகச் சத்தியமூர்த்தி அவருடைய வீட்டுக்குப் போயிருந்த போது ஒரு கிளாஸ் நிறையப் பலாப்பழப் பாயசத்தையும், நேந்திரங்காய் வறுவலையும் கொண்டு வந்து வைத்துச் சாப்பிட்டால் தான் ஆயிற்று என்று பிடிவாதம் செய்தார். இன்று ஏதோ பண்டிகை நாளாம். மாலையில் சத்தியமூர்த்தி வரப்போகிறானென்று அவனுக்காகவே ஒரு கிளாஸ் பலாப்பழ பாயசமும் கொஞ்சம் வறுவலும், அவியலும் எடுத்து வைத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.