22

     சமூகத்தின் அநுபவத்துக்குப் பொதுவான கலைகள் எவையானாலும் அவற்றை நம்பி வாழ்கிறவர்கள் ஊர் நடுவிலிருக்கிற மருந்து மரத்தைப் போன்று பயன்படுவது அதிகமாகவும், பயன்பெறுவது குறைவாகவும் வாழ்கிறார்கள்!

     குத்து விளக்கு காரியாலயத்தின் உள்ளே சகல விதமான இருட்டுக்களும் உண்டாயினும் மேலுக்கு என்னவோ பிரகாசமான விளக்குகள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். அந்தக் காரியாலயத்தில் எந்த இடத்தில் எதற்காக எப்போது வெளிச்சமாக இருக்கும் என்பதும், எந்த இடத்தில் எதற்காக எப்போது இருட்டாக இருக்கும் என்பதும் குமரப்பனுக்கு நன்றாகத் தெரியும். குமரப்பன் அந்தப் பத்திரிகையின் 'கார்ட்டூனிஸ்ட்' மட்டுமல்ல; சமயாசமயங்களில் 'போட்டோகிராபராக'வும் 'ரிப்போர்ட்டரா'கவும் கூட வேலை செய்ய வேண்டியிருக்கும். இரண்டு கைகளையும் தாராளமாக வீசிக் கொண்டு நடக்கிற நடையிலே வழியில் நிற்கிற நாலு பேரை ஒதுங்கச் செய்து விடுகிற சாமர்த்தியசாலி அவன். சுற்றி இருக்கிறவர்களுடைய மனத்தின் இருளை நன்றாகப் புரிந்து கொண்டு பட்டும் படாமலும் பேசிக் கூர்மையான வார்த்தைகளால் அவர்களை நேருக்கு நேரேயே தாக்கிக் கூறிவிட்டுச் சிரிப்பதில் அவனுக்கு நிகரான நிபுணன் அவன் தான். துணிவும் அந்தத் துணிவை விட்டு நீங்காத ஒரு வித வேதாந்த மனப்பான்மையும் உடைய தைரியசாலி அவன். எப்போதும் யாரையும் எதற்காகவும் பொய்யாக மதிப்பதோ, பொய்யாகப் புகழ்வதோ அவனுக்குப் பிடிக்காது. அன்று காலையில் குமரப்பன் அலுவலகத்துக்கு வந்ததும் நாட்டியக் கலைமணி குமாரி மோகினியைப் பேட்டி கண்டு வருவதற்காகப் போக வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார்கள். குமரப்பனையும் அந்தப் பத்திரிகையின் கலை விமர்சனப் பகுதிகளைக் கவனித்துக் கொள்ளும் ஓர் உதவி ஆசிரியரையும் மோகினியின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போவதற்காகக் கண்ணாயிரம் தயாராக வந்து காத்துக் கொண்டிருந்தார். குமரப்பனைக் கண்டாலே கண்ணாயிரத்துக்கு எப்போதும் பயம் உண்டு. அந்தப் பயம் தமக்கு இல்லை என்பதை நிரூபித்துக் கொள்ள முயல்கிறவரைப் போல் குமரப்பனிடம் கலகலப்பாகப் பேச முயன்று, அப்படிப் பேசியதன் காரணமாகவே அந்தப் பயத்தை அதிகமாக்கிக் கொண்டு போய்ச் சேருவது அவர் வழக்கம். வெளிப்படையாகத் தைரியசாலியாக இருப்பதைப் போல் காண்பித்துக் கொண்டே அந்தரங்கமான கோழை என்று அவரைப் பற்றித் தீர்மானம் செய்திருந்தான் குமரப்பன். கண்ணாயிரம் அன்றும் அவனை விசாரித்துக் கொண்டே வந்து சேர்ந்தார்.

     "என்ன குமரப்பன்? எப்படி இருக்கிறீர்கள்?" என்று அவர் விசாரித்தவுடன், "மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று தீர்மானம் செய்கிற உரிமையே உங்களைப் போன்றவர்களிடம் விடப்பட்டிருக்கும் போது நீங்களெல்லாம் இப்படி விசாரிக்கலாமா சார்?" என்று சிறிதும் இடைவெளியின்றி அவருக்கு மறுமொழி கூறினான் குமரப்பன். இந்த வார்த்தைகளில் இருந்த ஆழமான அர்த்தத்தினால் கௌரவமாகத் தாக்கப்பட்டுவிட்ட கண்ணாயிரம் மேலும் பேச சக்தியை இழந்துவிட்டார். மோகினியின் வீட்டில் போய்ப் பேட்டி காண்பதற்காக உடன் வர இருந்த உதவியாசிரியர் கண்ணாயிரத்துக்கு மிகவும் வேண்டியவர். காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போது கண்ணாயிரத்தை வாய் ஓயாமல் தூக்கி வைத்துப் புகழ்ந்து கொண்டே வந்தார் அந்த உதவி ஆசிரியர். 'எல்லாரையும் புகழ்கிறவன் யாரோ அவன் எல்லாராலும் புகழப்படுவான்' என்று ஒரு சித்தாந்தம் உண்டு. அந்தச் சித்தாந்தப்படி புகழை ஏற்படுத்திக் கொண்ட உதவியாசிரியர் அவர். அந்தக் காரில் அவர்களோடு காமிராவும் கையுமாகப் போய்க் கொண்டிருந்த குமரப்பன், பொறுமை இழந்திருந்தான். குமரப்பன் ஒன்றும் பேசாமலேயே குறும்புத்தனமான மௌனத்தோடு உடன் வருவதைக் கவனித்த உதவி ஆசிரியர் அவனிடம் ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவன் கையிலிருந்த புகைப்படக் கருவியைச் சுட்டிக்காட்டி, "இது மிகவும் உயர்ந்த ரகத்துக் 'கேமிரா' - குமரப்பன்! 'அட்ஜஸ்ட்மெண்ட்' சரியாக இருந்தால் பிரமாதமாயிருக்கும்" என்றார். குமரப்பன் அவரைச் சும்மா விடவில்லை.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.