32
ஒரு தொழிலை நாம் செய்கிற போது அந்தத் தொழிலைப் பற்றி முதலில் நமக்கு ஒரு சுயமரியாதை வேண்டும். இல்லாவிட்டால் அதை நாம் ஒரு போதும் நாணயத்தோடு செய்வதற்கு முடியவே முடியாது. காலையில் சத்தியமூர்த்தி விழித்து எழுந்திருப்பதற்கு முன்பாகவே குமரப்பன் எழுந்து நீராடி உடைமாற்றிக் கொண்டு மாடி வராந்தாவில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டே எதிர்ப்புறம் மலைக் காட்சிகளையும், ஏரியையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். ஆள் மிகவும் உற்சாகமாய் இருப்பதற்கு ஓர் அடையாளம் போல் அவனுடைய வாயிதழ்கள் ஏதோ விருப்பமான பாடலைச் சீட்டியடித்துக் கொண்டிருந்தன. "இதென்ன புது வழக்கமாக இருக்கிறதே, குமரப்பன்? நீ எப்போதுமே நேரங்கழித்து விழித்துக் கொள்கிறவனாயிற்றே?" என்று கேட்டுக் கொண்டே படுக்கையிலிருந்து எழுந்து வந்தான் சத்தியமூர்த்தி. சுந்தரேசன் இன்னும் எழுந்திருக்கவில்லை. இழுத்துப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தார். "ரொம்ப நாட்களாக ரொம்ப விஷயங்களில் நேரம் கழித்துத்தான் விழித்துக் கொண்டிருந்தேனடா, சத்தியம்! ஆனால் இப்போதெல்லாம் சீக்கிரமாகவே விழித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டேன். காலையில் மட்டுமில்லை. எல்லா நேரத்திலும் எல்லா விஷயங்களிலுமே சீக்கிரமாக விழித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டேன்" என்று குமரப்பன் கூறிய பதிலில் இரண்டு தொனி இருந்தது. சத்தியமூர்த்தி அவ்வளவில் விட்டுவிடாமல் நண்பனை மேலும் தூண்டிக் கேட்டான். "என்ன தான் சொல்கிறாய் நீ? உன்னுடைய திடீர் வரவு தான் ஆச்சரியமாக இருக்கிறதென்றால் நீ பேசுகிற பேச்சும் ஆச்சரியமாகவே இருக்கிறது குமரப்பன்! கொஞ்சம் புரியும் படியாகத்தான் சொல்லேன்." "நீ என்னுடன் ஒரு மணி நேரம் தனியாக வெளியில் உலாவ வருவதற்குத் தயாராயிருந்தால் எல்லாவற்றையும் சொல்கிறேன். சொல்வதற்கு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் உன்னைப் போல் ஓர் உண்மை நண்பனிடம் எல்லாவற்றையும் மறக்காமல் சொல்லியும் ஆக வேண்டும். நான் எதைச் சொல்லப் போகிறேனோ அதில் நீ கவலைப்படுவதற்கும் ஒன்றுமில்லை; நான் கவலைப்படுவதற்கும் ஒன்றுமில்லை; தனக்காகத் தான் கவலைப்படுவதே அவமானம் என்று எண்ணும் உண்மைத் தைரியசாலி ஒருவன் தனக்கு அனுதாபப்படுவதாகப் பிறர் கவலைப்படுவதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் குமரப்பன். அவசரமாகப் பல் விளக்கி நீராடி முடித்துக் கொண்டு நண்பனுடைய வேண்டுகோளை மறுக்காமல் அவனோடு உலாவச் சென்றான் சத்தியமூர்த்தி. பக்கத்து உணவு விடுதியில் காலைக் காப்பி சிற்றுண்டியை முடித்துக் கொண்டு புறப்பட்டார்கள் நண்பர்கள். சிறிது தொலைவு வரை மௌனமாக நடந்த பின்பு குமரப்பன் தானாகவே பேச்சை ஆரம்பித்தான். "குத்துவிளக்கில் வருகிற வாரம் என்ன கார்டூன் வரும் என்று நேற்றிரவு நீ என்னைக் கேட்டாயல்லவா? கொந்தளிக்கும் கடலில் ஒரு சிறு படகு தத்தளிப்பதாகவும் அந்தப் படகின் நடுவே ஒரு குத்துவிளக்கு காற்றில் ஆடியசைந்து அவிவதாகவும் வரைந்து, கொந்தளிப்பின் மேல் ஊழல் என்றும் படகின் மேல் தரமின்மை என்றும் எழுதி நிர்வாகியின் மேஜை மேல் கொண்டு போய் எறிந்தேன். திரும்பிப் பாராமல் வந்துவிட்டேன். கடந்த ஒரு வாரத்திற்குள் அந்தப் பத்திரிகையின் நிர்வாகம் உரிமை எல்லாம் கைமாறி மஞ்சள்பட்டி ஜமீந்தாரிடம் போய்விட்டது. அவரும் கண்ணாயிரமும் அடிக்கடி காரியாலயத்துக்கு வந்து எல்லாரையும் வாயில் வந்தபடிப் பேசி மிரட்டுகிறார்கள்.
"கணக்கு வழக்குகளைப் புரட்டிப் பார்த்தபோது, காரியாலயத்தில் யார் யாருக்கு என்ன சம்பளம் என்று விசாரித்த ஜமீந்தார், என் சம்பளத்தைப் பற்றிக் கேட்டதும், 'என்ன ஆச்சரியம்? அப்படியும் இப்படியுமா இரண்டு கோட்டை இழுத்துப் பொம்மை போடறவனுக்கு இவ்வளவு சம்பளமா?'ன்னு கேட்டாராம். அதுதான் சமயமென்று பக்கத்திலிருந்த கண்ணாயிரம், 'இத்தனை சம்பளம் போதாதுன்னு திமிர் பிடிச்ச ஆளாகவும் வேறு வந்து சேர்ந்திருக்கான்' என்று என்னைப் பற்றிச் சொன்னானாம். ஒரு தொழிலை நாம் செய்கிறபோது அந்தத் தொழிலைப் பற்றி முதலில் நமக்கு ஒரு சுயமரியாதை வேணும். இல்லாவிட்டால் அதை நாம் நாணயத்தோடு செய்ய முடியாது. அந்த சுய கௌரவத்தைக் கூடப் புரிந்து கொள்ளாத இடத்திலிருந்து குப்பை கொட்டுவதை விட நடந்து காட்டி விடுவது மேல் என்று நடையைக் கட்டி விட்டேன். கண்ணாயிரம் என்ற குரங்கு குத்துவிளக்கு என்ற மலர் மாலையை எடுத்துக் குலைப்பதாக ஒரு படம் வரைந்து அந்தப் படத்தின் மேலே 'குரங்கு கையிலகப்பட்ட பூமாலை' என்றும் எழுதி என்னுடைய ராஜிநாமாக் கடிதத்தோடு சேர்த்து அனுப்பிவிட்டு மூட்டையைக் கட்டிக் கொண்டு மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்திருக்கிறேன். 'ஏன் இங்கே வந்தாய்?' என்று நீ என்னைக் கேட்க மாட்டாய். கேட்டால் அதற்கும் பதில் தயாராக வைத்திருக்கிறேன். வேலைக்குத் தலை முழுகி விட்டு வந்த உற்சாகத்தை யாராவது ஓர் உண்மை நண்பனோடு இருந்து கொண்டாட வேண்டும் என்று தோன்றியது. அதை உன்னோடு கொஞ்ச நாள் இருந்து கொண்டாடலாம் என்ற எண்ணத்தோடு தான் வந்திருக்கிறேன்..."
குமரப்பனுடைய பேச்சில் வருத்தத்துக்குப் பதில் உற்சாகம் தான் அதிகமாக இருந்தது. எல்லாவற்றையும் போட்ட பின் சிறிது தொலைவு ஒன்றும் பதில் பேசாமல் சத்தியமூர்த்தி தயக்கத்தோடும் மௌனத்தோடும் நடந்து வருவதைக் கூடக் குமரப்பனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "என்னடா சத்தியம்! பதில் பேசாமல் வருகிறாயே? நான் செய்துவிட்டு வந்தது ஏதோ பெரிய ஆகாத காரியம் என்று நினைத்து நீ அதற்காகத் துக்கம் கொண்டாடுவதாக இருந்தால் நாளைக்கே நான் இங்கிருந்து பஸ் ஏறி விடுவேன். உன்னை நான் அப்படி எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் உன்னிடம் வந்திருக்கிறேன்." "நீ வந்ததைப் பற்றி நான் எவ்வளவு ஆச்சரியப்படுகிறேனோ அவ்வளவிற்கு மகிழ்ச்சியும் அடைகிறேன் குமரப்பா! எனக்கு நன்றாக உன்னைத் தெரியும். இதைப் பற்றி நான் தவறாக எண்ணமாட்டேன். ஆனால் உலகியல் வேறு. நியாயத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடி, அதனால் சொந்த வசதிகளை நிறைவு செய்கிற உத்தியோகத் தொழுவிலிருந்து விடுபட்டு ஓடி வருகிறவர்களைப் பலர் எதிர்கொள்ளத் தயங்குவதுதான் சமூக வழக்கம். நீயானால் ஏதோ பெரிய தளையிலிருந்து விடுபட்டு வந்து நிற்கிறவனைப் போல் சிரிக்கிறாய்... சந்தோஷப்படுகிறாய்..." "ஆமாம்! இதற்காகச் சந்தோஷப்படுவதில் இதைவிடப் பரிபூரணமான எல்லை ஒன்று இருக்க முடியுமானால், அந்த எல்லைவரை துணிந்து சென்று சந்தோஷப்படுவதற்குக் கூட நான் இப்போது தயாராக இருக்கிறேன். நம்முடைய உணர்ச்சிகளின் நியாயத்தையும் மானத்தையும் புறக்கணித்து விட்டு நம்மை அடக்கி ஒடுக்கி ஆள விரும்புகிறவர்களுடைய உணர்ச்சிகளின் அநியாயத்துக்கும் அவமானத்துக்கும் பண்டமாகிற போதெல்லாம் நாம் நிச்சயமாகத் தளைப்படுகிறோம் என்பதில் சந்தேகமே இல்லை. தளையிலிருந்து விடுபட்டு வந்து விட்டதாகத் தான் உணர்கிறேன். 'குத்து விளக்கில் இருந்து கொண்டே என்னுடைய நியாயங்களுக்காகவும், தன்மான உணர்வுகளுக்காகவும் நான் போராடினால் என்ன?' என்று நீ என்னிடம் கேட்க நினைக்கலாம். நான் என்னுடைய எதிரிகளாகக் கருதத் தகுந்தவர்களோடு மட்டும் தான் எதிர்த்துப் போராடலாம். என் எதிரிகளாகக் கருதவும் கூடத் தகுதியில்லாதவர்களோடு நான் எப்படிப் போராட முடியும்? போராடுவதற்குக் கூட நம்முடைய எதிரிகள் நம்மளவுக்குப் பக்குவமானவர்களாக இருக்க வேண்டாமா? அங்கே அதுவும் இல்லை. கண்ணாயிரம் என்னிடம் நேரில் பேசுவதற்குப் பயப்படுகிறான். பின்புறமாக நான் இல்லாதபோது ஜமீந்தாரிடம் சிண்டு முடிகிறான். ஜமீந்தாரோ, "பொம்மை போடுகிறவருக்கு இவ்வளவு சம்பளமா?" என்று கேட்கிற அளவுக்கு மூடனாயிருக்கிறான். இந்தச் சூழ்நிலையில் நான் செய்கிற தொழிலில் சுயமரியாதை இருக்கிறதே, அதைக் காத்துக் கொள்ளவாவது நான் அங்கிருந்து வெளியேறியாக வேண்டும்." "உண்மைதான்! சுயமரியாதையும் பெருமையும் காத்துக் கொள்வதுதான் ஆண்பிள்ளைக்குக் கற்பு என்ற பொருளில் ஒரு திருக்குறள் கூட உண்டு. 'பெண்களுக்குக் கற்பைப் போல் ஆண்களுக்குக் கற்பு அவர்களுடைய பெருமைதான்' என்று அந்தக் குறளில் வள்ளுவர் கூறியிருக்கிறார். "ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத் தான் கொண்(டு) ஒழுகின் உண்டு' என்ற குறள் கேள்விப்பட்டிருக்கிறாயா குமரப்பன்?" "எனக்குக் குறள் எல்லாம் தெரியாது அப்பனே அதெல்லாம் சொல்வதற்குத்தான் நீ இருக்கிறாயே! குறள் படித்திருக்கிறார். எத்தனையோ ஆண்டுகள் ஆசிரியராக இருந்து குறளை மாணவர்களுக்குச் சொல்லியும் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவ்வளவு பெரிய மதுரையில் மஞ்சள்பட்டியாரையும், கண்ணாயிரத்தையும் தான் அவரால் பெரிய மனிதர்களாக மதிக்க முடிகிறது. உன்னாலும் என்னாலும் அப்படி மதிக்க முடியவில்லையே! அது ஏன்?" - என்று குமரப்பன் கேட்டபோது முதல் நாள் தந்தையின் கடிதத்தைப் படித்த சமயத்தில் இதே விஷயத்தைத் தானும் சிந்தித்ததைப் பற்றி நினைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. அவர்கள் இரண்டு பேருடைய சிந்தனையும் இந்த விஷயத்தில் ஒன்றாயிருந்தது. "உங்கள் தெருப் பக்கமாக ஒரு நாள் போயிருந்தேனடா சத்தியம்! உங்கள் வீட்டு மாடியை இடித்துக் கட்டுகிறார்கள் போலிருக்கிறது. மராமத்து வேலைகள் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். கண்ணாயிரத்தோடு காரில் உன் தந்தையையும் இரண்டு மூன்று முறை வேறு வேறு இடங்களில் பார்த்தேன். மற்றொரு நாள் ஜமீந்தாரோடு கூடப் பார்த்தேன். பாவம் அலைகிறார்" என்று குமரப்பன் மேலும் தந்தையைப் பற்றிக் கூறிய போது தன் தந்தை அந்தத் தீயவர்களையெல்லாம் அண்டிக் கொண்டிருப்பதை நினைக்கவும் வெட்கமாக இருந்தது. சத்தியமூர்த்திக்குச் சௌகரிய அசௌகரியங்கள் பெரிய தளைகளாக இருந்து வாழ்க்கையில் நல்லவர்கள் நல்லவர்களோடு இணைய முடியாமலும், கெட்டவர்களுக்கு நல்லவர்களும் கலந்தோ சம்பந்தப்பட்டோ தவிக்க நேரிடுவதையும் அவன் அப்போது தன் சிந்தனையில் பொறுத்துக் கொண்டே தீர்வதற்குப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நண்பர்கள் இருவரும் அறைக்குத் திரும்பும் போது சத்தியமூர்த்தி கல்லூரிக்குப் புறப்பட நேரமாகியிருந்தது. குமரப்பன் திடீரென்று வந்ததினால் ஏற்பட்ட திகைப்போ, அல்லது அவன் குத்துவிளக்கு வேலையை உதறிவிட்டதனால் விளைந்த வருத்தமோ எதுவும் இல்லாமல் சினேகத்துக்கு அந்தரங்கமான உண்மை நண்பன் வந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சி ஒன்று மட்டுமே நிலவும் மனத்தோடு தான் அறைச்சாவியை அவனிடம் கொடுத்து விட்டுக் கல்லூரிக்குப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி. சுந்தரேசன் அவர்கள் இருவரும் திரும்புவதற்குள் எழுந்து நீராடிக் கல்லூரிக்குப் புறப்பட்டுப் போயிருந்தார். இடைவேளையில் கல்லூரி விட்டதும் தான் வந்துவிடுவதாகவும், அதன் பிறகு இருவரும் சேர்ந்து பகல் உணவுக்குப் போகலாம் என்றும் சத்தியமூர்த்தி நண்பனிடம் கூறியிருந்தான். நண்பன் குமரப்பனும் அதுவரையில் அறையில் தங்கி ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி அங்கே இருந்து கொண்டான். அன்று வகுப்பில் சத்தியமூர்த்திக்கு ஒரு புதுமையான அநுபவம் ஏற்பட்டது. பாடம் நடத்திக் கொண்டிருந்த போது ஏதோ மேற்கோளுக்காகப் புறநானூற்றுப் பாடல் வரிகள் சிலவற்றைச் சொல்லி விளக்க வேண்டியிருந்தது. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா - நோதலும் தணிதலும் அவற்றோரன்ன' என்று அந்தப் பாடலில் தான் சொல்ல வேண்டிய மேற்கோளுக்குப் பொருத்தமான அடிகளைக் கூறிவிட்டுத் 'தீமையும் நன்மையும் பிறர் தருவதனால் வருவதாக நினைப்பது பேதமை; அதைப் போலவே நாம் வருந்துவதற்கும் வருத்தம் தணிவதற்கும் பிறர் காரணமாக அமைவதில்லை...' எனப் பொருளை விளக்கிய போது ஒரு நாளும் இல்லாத வழக்கமாகப் பாரதி கேள்வி கேட்பதற்காக நடுவகுப்பில் எழுந்து நின்றாள். மாணவர்கள் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்க எழுந்து நிற்கும்படி எதையும் அவன் மீதம் விடுவதில்லை. மாணவர்கள் மனதில் எந்த எந்த இடங்களில் இயற்கையாக என்னென்ன சந்தேகங்கள் எழ முடியும் என்ற தடைகளையும் தனக்குத் தானே எழுப்பிக் கொண்டு அவற்றுக்கும் சேர்த்து விடைகளைக் கூறி முடிப்பது சத்தியமூர்த்தியின் வழக்கம். அதனால் அவன் பாரதியை உட்காரச் சொல்லிக் கையமர்த்தினான். அவன் கையமர்த்தியதைக் கவனிக்காதது போல் முகத்தையும் கடுமையாக வைத்துக் கொண்டு, "எனக்கு ஒரு சந்தேகம் சார்! அதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக நான் இப்போது நிற்கிறேன்" என்றாள் பாரதி. சத்தியமூர்த்திக்கு அவள் முரண்டு பிடிப்பதாகவோ அடம் பண்ணுவதாகவோ தோன்றியது. "எதைச் சொல்லி விளக்கிக் கொண்டிருக்கிறேனோ அதை நான் இன்னும் முடிக்கவில்லை, மிஸ் பாரதி! நான் முடித்த பிறகு ஒருவேளை உங்கள் சந்தேகம் தீர்ந்து போனாலும் போகலாம். தயவு செய்து நான் முடித்த பின்பு கேளுங்கள்..." என்று சற்றே கடுமையான குரலில் சொல்லி அவளை உட்கார வைத்தான் சத்தியமூர்த்தி. தன்னுடைய சொற்பொழிவில் கட்டுண்டு கிடந்த பெரிய வகுப்பினிடையே அமைதியைக் கலைப்பது போல் முன் வரிசையில் ஒரு பெண் எழுந்து நின்று அடம் பிடித்ததை அவன் அவ்வளவாக விரும்பவில்லை. "தீமையும் நன்மையும் நம் கண் காணப் பிறர் செய்வதனாலேயே நமக்கு வருவதை உலகியலில் ஒவ்வொரு நாளும் காண்கிறோம். அதைப் போலவே நம்முடைய வருத்தத்துக்கும், மகிழ்ச்சிக்கும் காரணமான செய்கைகளையும் பிறர் நமக்குச் செய்வதையும் காண்கிறோம். அப்படி இருக்கும் போது இந்தப் பழைய பாடலில் கூறப்பட்டிருக்கிற தத்துவம் எவ்வாறு பொருந்தும் என்று உங்களில் சிலருக்குச் சந்தேகம் உண்டாகலாம். 'மாடர்ன் சென்ஸிபிலிட்டி' என்று சொல்கிறார்களே அந்தப் புதிய அறிவுணர்ச்சி... எவ்வளவுக்கு நவீனமானதோ அவ்வளவுக்குப் பலக் குறைவானதாகவும் சில இடங்களில் இருக்கும். உதாரணமாக இந்தப் பாடலில் நான் சொல்லிய விதமான சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டு அந்த சந்தேகம் ஏற்படுவதற்குக் காரணமாக உங்களுடைய 'மாடர்ன் சென்ஸிபிலிட்டி' தான் தூண்டுதலாக இருக்கிறது என்று நீங்கள் எண்ணுவது பிழை. இந்தப் பாடல் எந்த நிலையில் எத்தகைய சான்றோரால் எதற்காகக் கூறப்பட்டதென்று சிந்தித்தால் இப்படி ஒரு சந்தேகமே உங்களுக்கு எழப் போவதில்லை. மனிதர்களுக்கு மனிதர்கள் பகையின்றி வாழவும், கருணையும், அன்பும் நிறைந்த உலகைக் காணவும், பொருள் மொழிக் காஞ்சியாக அறிவுரை கூறுகிற சான்றோர் ஒருவர் இதைப் பாடியிருக்கிறார். விருப்பும் வெறுப்புமில்லாமல் வாழப் பழகிக் கொண்ட பெருந்தன்மையாளர் ஒருவர் 'துன்பமும் இன்பமும் பிறர் தருவதனால் வருவதாக எண்ணித் துன்பம் செய்கிறவர்களை வெறுக்கவும் இன்பம் செய்கிறவர்களை விரும்பவும் பழகிக் கொள்ளலாகாது' என்று சம நிலையோடு அறிவுரை சொல்கிறாரென்றால், அந்த ஒற்றை மனத்தின் பண்பாட்டு உயர்வை மட்டுமாவது நாம் போற்ற வேண்டாமா? நீதி நூல் கருத்துக்களிலும், அறநூல் கருத்துக்களிலும் அதிகமாகச் சந்தேகம் கேட்கிறவர்கள் இந்த அடிப்படையை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். 'அறம் செய்வது நல்லது' என்றால் 'இன்று நம் கண் காணப் பலர் அறம் செய்யாமலே நன்றாக இருக்கிறார்களே?' என்று சந்தேகம் கேட்டுவிடத்தான் 'மாடர்ன் சென்ஸிபிலிட்டி' என்று நினைப்பது தவறு உணரும் முறை நவீனமாயிருக்கலாம். அதைத்தான் 'மாடர்ன் சென்ஸிபிலிட்டி' என்கிறோம். ஆனால் உணரும் முறை பிறழ்வதாயிருக்கக் கூடாது; பிறழ உணர்வதை மட்டுமே 'மாடர்ன் சென்ஸிபிலிட்டி' என்று கூறுவதாய் இருந்தால் 'மாடர்ன்' சென்ஸிபிலிட்டி' என்பதன் ஒரே நோக்கம் 'பிறழ உணர்தல்' என்று முடிவு செய்ய நேரிடும். 'மாடர்ன் சென்ஸிபிலிட்டி இன் பொயட்ரி' என்பதைப் பற்றி இன்னொரு நாள் நான் உங்களுக்கு விரிவாகச் சொல்கிறேன்" என்று விளக்கி முடித்ததும் ஞாபகமாகப் பாரதியின் பக்கம் திரும்பி, "இனி உங்கள் சந்தேகத்தைக் கேட்கலாம் மிஸ். பாரதி" என்று சத்தியமூர்த்தி கூறிய போது அவள் எழுந்து நின்று ஒன்றும் கேட்கத் தோன்றாமல் விழித்தாள். அதைக் கண்டு மாணவர்கள் இரைந்து சிரித்து விட்டார்கள். அவளுக்கு அவமானம் பிடிங்கித் தின்றது. டெஸ்க்கிலிருந்து தன் புத்தகங்களை அவசரம் அவசரமாக அள்ளிக்கொண்டு முகம் சிவந்து போய் உதடுகள் துடிதுடிக்க வகுப்பறையிலிருந்து வெளியேறி விட்டாள் அவள். வகுப்பறையிலிருந்து வெளியேறிச் செல்லும் போது அவள் தலை தாழ்ந்து போயிருந்தது. சத்தியமூர்த்திக்கு இதைப் பார்க்க வேதனையாயிருந்தது. 'பெரிதாக என்ன நடந்துவிட்டது? எதற்காக இந்தப் பெண் நடுவகுப்பில் பாடவேளை முடிவதற்குள் சொல்லாமல் கொள்ளாமல் இப்படி எழுந்து போகிறாள்?' என்றெண்ணி அவன் வருந்தினான். வகுப்பில் பாரதிக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவியைக் கூப்பிட்டு, "போய் அழைத்து வாருங்கள். எழுந்து வெளியே போகும்படி இப்போது என்ன நடந்துவிட்டது? மாணவர்களில் யாராவது வகையாக மாட்டிக் கொள்ளும்போது மாணவிகளாகிய நீங்களும் தான் சிரிக்கிறீர்கள்! அப்போது அதற்காக உங்களை என்ன செய்வது? குழந்தைப் புத்தியோடு இருந்தால் நன்றாயில்லை. உங்கள் சிநேகிதியை வகுப்பில் வந்து உட்காரச் சொல்லுங்கள். கல்லூரி யூனியன் தலைவியாக வந்திருக்கிற மாணவியே இப்படி நடந்து கொள்வது சிறிதும் விரும்பத்தக்கதில்லை" என்றான். அந்த மாணவி வெளியே போய்ப் பார்த்து விட்டு வந்து, "பாரதி காரில் போய் உட்கார்ந்து, விசும்பி விசும்பி அழுது கொண்டிருக்கிறாள் சார். நான் சொல்லியதை அவள் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை" என்றாள். அதற்கு மேல் அந்த நிகழ்ச்சியைப் பெரிதுப்படுத்த விரும்பாத சத்தியமூர்த்தி வகுப்பைத் தொடர்ந்தான். ஆனால் வகுப்பில் கசமுசவென்ற பேச்சுக் குரல்களும், இரகசிய முணுமுணுப்புகளும் ஓய்வதற்குச் சிறிது நேரமாயிற்று. தன்னிடம் பிரியமுள்ள மாணவி என்று பகிரங்கமாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிற பாரதி தனக்கு முன்பே நடு வகுப்பில் சந்தேகம் கேட்கப் போவதாக எழுந்து நின்று அடம் பிடித்ததையும், தான் அவளுக்குச் சொல்லிய பதில் கடுமையாக இருந்ததையும் மற்ற மாணவர்கள் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் நினைத்து முணுமுணுக்க முடியும் என்பதை அவன் உடனே அநுமானிக்கத் தவறவில்லை. ஆனாலும் தன்னுடைய நயமான சொல்லாட்சித் திறனால் ஐந்தே நிமிடங்களில் வகுப்பில் பழைய அமைதி நிலவும்படி செய்தான் அவன். இந்த நிகழ்ச்சியை வகுப்பு முழுதும் மறந்து விடும்படி செய்ய அவனுக்குச் சாமர்த்தியம் இருந்தது. ஆனால் தன் மனத்தளவில் அவனால் அதை மறக்கவே முடியவில்லை. அந்த வகுப்பு வேளை முடிந்த பின் அடுத்த வகுப்புக்குப் போய் அதற்கடுத்த வகுப்புக்குப் போன பின்னும் கூட அவனால் அன்று இதை மறக்க முடியவில்லை. இடைவேளையின் போது அறைக்குப் போய்க் குமரப்பனைச் சாப்பிட அழைத்துப் போகவும் இயலாமற் போய்விட்டது. கல்லூரித் துணை முதல்வர் ஹாஸ்டல் விஷயமாக ஏதோ பேச வேண்டுமென்று இடைவேளையில் கூப்பிட்டனுப்பவே அவரோடு போய் உட்கார வேண்டியதாயிற்று. தான் போக முடியாவிட்டாலும் லேக் சர்க்கிள் பக்கமாகச் சென்று திரும்பும் மாணவன் ஒருவனிடம் குமரப்பனுக்குத் தகவல் சொல்லி அனுப்பி அவன் மட்டும் போய்ச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்து அறையில் ஓய்வு கொள்ளுமாறு ஏற்பாடு செய்திருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரி முடிந்து அவன் மாலையில் அறைக்குத் திரும்பிச் சென்ற போது குமரப்பன் இருந்தாற் போலிருந்து அவனிடம் ஒரு கேள்வி கேட்டான்: "ஏண்டா, சத்தியம்! எந்தத் தவற்றைப் பிறருக்குத் தெரியாமல் சுலபமாக நம்மால் மறைக்க முடியும் என்று தோன்றுகிறதோ அதைக் கூடப் பிறரிடம் சொல்லி மன்னிப்புக் கேட்பது நியாயமென்பதை நீ ஒப்புக் கொள்வாயா..." "இதென்னது?... இருந்தாற் போல் இருந்து மன்னிப்பைப் பற்றி..." என்ற சத்தியமூர்த்தி பேச்சை இழுத்து நிறுத்தித் தயங்கினான். அதற்குக் குமரப்பன் கூறிய பதில் அவனைச் சிறிது நேரம் அப்படியே திகைக்க வைப்பதாக இருந்தது. ஆனால் அந்தத் திகைப்புக்குப் பின்பும் உண்மை நட்புத்தான் சத்தியமூர்த்தியின், மனத்தில் நின்றதே ஒழிய நண்பனைப் பற்றிச் சிறிதளவு வெறுப்பும் நிற்கவில்லை. பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|