30

     சில சமயங்களில் பெண் என்பவள் மனிதனுடைய சிந்தனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட அதிசயமாயிருக்கிறாள். அப்படிச் சமயங்களில் அவள் அதிசயமாயிருக்கிறாள் என்ற ஒன்றைத் தவிர வேறு எதையுமே அவளைப் பற்றிப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

     கல்லூரி யூனியன் தேர்தலுக்கு மாணவர்கள் அபேட்சை மனுவைக் கொடுக்கும் இறுதி நாளான மறுநாள் மாலை மகேசுவரி தங்கரத்தினமும் மற்ற மாணவிகளும் எப்படியோ பாரதியைச் சம்மதிக்கச் செய்து அவள் கையாலேயே சத்தியமூர்த்தியிடம் அபேட்சை மனுவைக் கொண்டு வந்த போது பாரதியின் முகத்தில் சிறிது கூட மகிழ்ச்சியே இல்லை. முன்பின் பழக்கமில்லாத மூன்றாம் மனிதனைத் தேடிக் கொண்டு வந்து அபேட்சை மனுவைக் கொடுப்பது போல் அவள் அவனிடம் கொடுத்துவிட்டுப் போனாள். அவள் சற்றே அலட்சியமாக வந்து போனது போலவுமிருந்தது. சத்தியமூர்த்தியும் அவளிடம் அப்படியே நடந்து கொண்டான். தனக்கு அவள் பிரியமாக எழுதியிருந்த கடிதங்களை அவள் கண் முன்பே சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்திருந்தது அவளுடைய மனத்தை அவ்வளவு ஆழமாக வேதனைப்படுத்தி ஆத்திரத்துக் குள்ளாக்கியிருக்கிறதென்று சத்தியமூர்த்தியால் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்படி அவள் மாறியிருந்தாலும், அவளைப் பொறுத்தவரை, அந்த மாற்றத்தையே சத்தியமூர்த்தியும் நீடிக்க விரும்பினான்.

     தன்னைப் பார்த்துப் பேசிவிட்டு போன பின்பு மகேசுவரி தங்கரத்தினம் பாரதியைச் சந்தித்திருந்தால் அந்தச் சந்திப்பின் போது அவள் பாரதியைக் கேட்டிருக்கும் முதல் கேள்வி, "உனக்கும் சத்தியமூர்த்தி சாருக்கும் ஏதாவது தகராறா பாரதி?" என்பதாகத்தான் இருந்திருக்க முடியும் என்று அவனால் இருந்த இடத்திலிருந்தே அநுமானம் செய்ய முடிந்தது. அபேட்சை மனுக்களை வாங்க வேண்டிய தேதி முடிந்துவிட்டதனால் வந்திருந்த மூன்று அபேட்சை மனுக்களையும் ஏற்றுக் கொண்டு நோட்டீஸ் போர்டில் அறிவிப்பை ஒட்டச் செய்துவிட்டான் சத்தியமூர்த்தி. அந்தந்த அபேட்சகர்களே விரும்பிக் கேட்டிருந்தபடி புலி கோவிந்தனுக்கு 'ஸ்கூட்டர்' வாகனச் சின்னமும், இன்னொரு மாணவனுக்குச் சைக்கிள் சின்னமும், பாரதிக்கு ரோஜாப்பூச் சின்னமும், தேர்தல் அடையாளங்களாகக் கொடுக்கப்பட்டிருந்தன.

     ஏதோ பொதுத்தேர்தல் நடப்பது போல் கல்லூரி எல்லைக்குள் கூட்டமும் விளம்பரமும் பிரசாரச் சொற்பொழிவுகளும் தடபுடலாயிருந்தன. தரையில் சுண்ணாம்பினால் எழுதியும், சுவரொட்டிகள் அச்சடித்து ஒட்டியும், கூட்டம் போட்டுப் பேசியும் மாணவர்களின் ஆர்வம் பிரமாதப்பட்டுக் கொண்டிருந்தது. மூன்றாவது நாள் மாலையில் தேர்தல் வாக்குச்சீட்டுப் பதிவு நடைபெறுவதாக இருந்ததால் அதற்கு முந்திய இரண்டு தினங்களுக்குள்ளேயே மாணவர்கள் தங்களுடைய எல்லா விளம்பர வேலைகளையும் முடித்துக் கொண்டு விட வேண்டுமென்று தேர்தல் அறிக்கையில் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. சைக்கிள் சின்னத்திற்குரிய மாணவன் கடைசி நேரத்தில் என்ன காரணத்தாலோ மனம் மாறித் தன்னுடைய அபிமானிகளிடமும், அநுதாபிகளிடமும் பாரதியை ஆதரிக்கும்படி வேண்டுகோள் விடுக்கத் தொடங்கியிருந்தான். அவனுடைய ஆசை எப்படியாவது புலி கோவிந்தனைத் தோற்கும்படி செய்ய வேண்டுமென்பதுதானாம். அதனால்தான் விட்டுக் கொடுத்துப் புலி கோவிந்தனுக்கு எதிராகப் பாரதியின் கைகளை வலிமைப்படுத்தும் வேலையை மேற்கொண்டிருந்தான் சைக்கிள் சின்னத்திற்குரிய மாணவன். முடிவில் ஸ்கூட்டருக்கும், ரோஜாப் பூவுக்கும், கடுமையான போட்டி மூண்டிருந்தது. கல்லூரி மைதானத்தில் இரண்டு கட்சிக்காரர்களும் தீவிரமாக விளம்பரம் செய்யலானார்கள். ரோடுகளில் சுண்ணாம்பினால் எழுதினார்கள். போஸ்ட்டர்கள் அச்சிட்டு ஒட்டினார்கள். துண்டுப் பிரசுரங்களும் அச்சிட்டுக் கொடுத்தார்கள். கூட்டம் போட்டுச் சொற்பொழிவுகள் செய்தார்கள்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.