20
புகழோ பழியோ எதுவானாலும் இரண்டுமே ஒரு நல்ல மனிதனை அவன் இயல்பாக நடந்து போய்க் கொண்டிருக்கிற நடையிலிருந்து சில விநாடிகள் தடுத்து நிறுத்தித் தயங்க வைத்து விடக்கூடியவை. வகுப்பறையில் சத்தியமூர்த்தி அந்தச் சொற்பொழிவைச் செய்த நேரத்தில் அவனுடைய சொற்கள், அவனுடைய உணர்ச்சி, முக பாவங்களாலும், அபிநயங்களாலும் அவன் கருத்துக்களைப் பேசிய விதம், எல்லாம் அழகுமயமாயிருந்தன. பிறரை ஏங்கச் செய்கிற வசீகரமான சொல்லுக்கும் நினைப்புக்கும் சொந்தக்காரன் யாரோ அவன் அதிசயமானவனாக இருக்க வேண்டும். அந்த விரிவுரையைக் கேட்ட மாணவர்கள் அத்தனை பேருக்கும் அப்படி ஓர் அதிசயமாகத் தான் தோன்றினான். 'ஏ மைண்ட் அட் பீஸ் வித் ஆல் பிலோ ஏ ஹார்ட் ஹூஸ் லவ் இஸ் இன்னொஸெண்ட்' என்று அந்தக் கவிதையின் கடைசி வரிகளையும் அவன் கூறி விவரித்து முடித்த போது வகுப்பு முடியவேண்டிய நேரத்துக்கு மேலும் கால்மணி நேரம் ஆகியிருந்தது. மாணவ மாணவிகள் எழுதி வைத்த சித்திரங்களைப் போல் அசையாமல் கட்டுண்டு கிடந்தார்கள். அந்தப் பாடலின் நடுவே, 'ஹௌ பியூர்?' (எவ்வளவு பரிசுத்தம்?) 'ஹௌ டியர்?' (எவ்வளவு கனிவு?) என்ற தொடர்களை ஒலித்த போதும் மோகினி பரிபூரணமாக அவன் மனக்கண்களில் தோன்றி நின்றாள். வகுப்பை முடித்துவிட்டு, அவன் மாணவ மாணவிகள் பக்கம் திரும்பி, மௌனமாக நிமிர்ந்து பார்த்தபோது, அத்தனை பேருடைய கண்களும், முகங்களும் ஆச்சரியத்தினாலும் வியப்பினாலும் மலர்ந்திருப்பதைக் கண்டான். அவனிடமிருந்து புத்தகத்தைத் திருப்பி வாங்கிக் கொள்ள வந்த பாரதி, "இந்த வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களும் தங்கள் வாழ்நாளில் இதற்கு முன் இப்படி ஓர் இலக்கிய நயமிக்க விரிவுரையைக் கேட்டதில்லை சார்" என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு சொல்லிவிட்டுப் போனாள். வகுப்பறையை விட்டு வெளியேறும் போது சத்தியமூர்த்தியைப் பின்பற்றியும் சூழ்ந்து கொண்டும் மாணவர்கள் கூட்டம் மொய்த்தது. தங்கள் மனத்துக்குப் பிடித்த ஒரு நல்ல விரிவுரையாளனைக் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில் முகத்திலும் மனத்திலும் ஆர்வம் பொங்கச் சூழ்ந்தார்கள் இளைஞர்கள். அவர்களுடைய அன்பு நிறைந்த பாராட்டுதல்களிலிருந்தும், ஆர்வம் நிறைந்த விசாரிப்புகளிலிருந்தும் சிறிது சிறிதாகத் தன்னை விலக்கி விடுபட்டு வகுப்பறையிலிருந்து வெளியே வந்த சத்தியமூர்த்தி அந்த அறையின் கதவோரமாக நின்று கொண்டிருந்த பூபதியைப் பார்த்துத் திகைத்தான். அவனைப் பின்பற்றிக் கூட்டமாக வந்து கொண்டிருந்த மாணவர்கள் நிர்வாகியே அங்கு வந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விலகிப் பின் தங்கினர். ஆனால் பூபதியின் முகமோ காணாததைக் கண்டுவிட்டது போல் மலர்ந்து போயிருந்தது. அந்த வகுப்புத் தொடங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் வந்து நின்று கேட்க ஆரம்பித்திருக்க வேண்டுமென்று தோன்றியது. "இளம் நண்பரே! முதலில் என்னுடைய மனப்பூர்வமான பாராட்டுதல்களை ஏற்றுக் கொள்ளுங்கள். கல்லூரி வகுப்பறையில் நிகழ்த்தப்படுகிற ஒரு சாதாரன விரிவுரையில் இத்தனை மெருகும், நயமும் அமைய முடியும் என்பதை நான் இன்று தான் முதல் முதலாகக் கண்டேன். 'ஷீ வாக்ஸ் இன் பியூட்டி' என்று இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது" என்று கூறியபடியே அருகே வந்து அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் அவர். மேலே விரைவாக நடந்து போக முடியாதபடி தன்னைத் தயங்கி நிற்கச் செய்துவிட்ட அந்தப் புகழுக்காக நாணினான் சத்தியமூர்த்தி. புகழோ, பழியோ, எதுவானாலும் இரண்டுமே ஒரு நல்ல ம்னிதனை அவன் இயல்பாக நடந்து போகிற நடையிலிருந்து சில விநாடிகள் நிறுத்தித் தயங்க வைத்துவிடக் கூடியவை என்பதைச் சத்தியமூர்த்தி பலமுறை அநுபவத்தில் கண்டிருக்கிறான். புகழால் தயங்கி நின்றாலும் அது தயக்கம் தான். பழியால் தயங்கி நின்றாலும் அது தயக்கம் தான். எப்படித் தயங்கினாலும் சரி, தயங்கி நிற்கிறோம் என்ற விளைவு தான் முக்கியம். நடந்து போகிற ஒருவனைக் கல் தடுக்கி நிற்கச் செய்தாலும் தடைதான்; கைதட்டி அழைத்து நிற்கச் செய்தாலும் தடைதான். இன்னும் சொல்லப் போனால் பழியால் தயங்கி நிற்பதைவிடப் புகழால் தயங்கி நிற்பதுதான் அதிகமாக இருக்கும் என்பதைப் பல மேதைகளுடைய வாழ்க்கையில் கூட ஒப்பு நோக்கி வியந்திருக்கிறான் சத்தியமூர்த்தி. நடந்து போவதற்கும் முந்தும் வலது காலும் ஒரு நாகரிகத்துக்காகப் போகவிடாமல் தயங்கி நிற்க வேண்டிய அவசியமுமாகப் பூபதியை எதிர்கொண்டான் அவன்.
ஆசிரியர்கள் வகுப்பு நடத்துவதை மறைந்து நின்று கேட்டு அவர்களுடைய தரத்தைத் தீர்மானம் செய்கிற வழக்கம் பூபதியிடம் உண்டு என்று தான் கேள்விப்பட்டிருந்த உண்மை இப்போது நிதர்சனமாகி விட்டதைச் சத்தியமூர்த்தி கண்டான். ஆசிரியர்கள் தங்கி ஓய்வு கொள்ளும் அறைக்குள் போய் அவன் நுழைகிற வரை அவனோடு பேசிக் கொண்டே உடன் வந்தார் பூபதி. அறை வாசல் வரை பூபதி அவனோடு கூட வந்ததனால் உள்ளே உட்கார்ந்திருந்த ஆசிரியர்களில் சிலர் அவனை அதிகமாக உறுத்துப் பார்த்தார்கள். ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த பொருளாதார விரிவுரையாளர் மெல்ல எழுந்து வந்து குறும்புத்தனமான தொனியில் சத்தியமூர்த்தியிடம் ஒரு கேள்வி கேட்டார். "நீங்கள் நம்முடைய கல்லூரி நிர்வாகிக்கு மிகவும் வேண்டியவர் போலிருக்கிறதே. நேற்றானால் அந்த விருந்துக் கூட்டம் முடிந்ததும் உங்களைத் தேடி வந்து நீங்கள் செய்த சொற்பொழிவை வானளாவப் புகழ்ந்தார். இன்றோ உங்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டே இந்த அறை வாசல் வரை கொண்டு வந்துவிட்டுப் போகிறார். பெரிய யோகக்காரர் ஐயா நீர்! பிடித்தாலும் சரியான புளியங்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறீர்..." என்று அந்தப் பாமர மனிதர் தன்னை விசாரித்த விதம் சத்தியமூர்த்தியின் மனத்தை மிகவும் புண்படுத்தியது. நாகரிகமாக நினைப்பதற்கும், பேசுவதற்கும் தெரியாதவர்கள் கூடப் படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருப்பதை எண்ணி வருந்தினான் அவன். பூத்தொடுப்பது போல் முறையான மென்மையோடு மணக்க மணக்க உரையாடவும் பிறரோடு பழகவும் தெரியாத பலர் பெரிய பட்டங்களுக்கும், பதவிகளுக்கும் சொந்தக்காரர்களாயிருப்பதை அவன் பொது வாழ்வில் அதிகம் பார்த்திருக்கிறான். இன்று இங்கேயும் அதைத்தான் பார்த்தான். பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பிக் கொண்டிருக்கிறவரை இந்த விதமான பேச்சுக்கள் வளர்ந்து கொண்டே போகும் என்பதும் அவனுக்குத் தெரியும். "வேண்டியவர் வேண்டாதவர் என்பதை இதை வைத்து எப்படித் தீர்மானம் செய்ய முடியும்? நீங்கள் கூடத்தான் நேற்றும் என்னைத் தேடி வந்து பேசினீர்கள். இன்றும் தேடி வந்து பேசுகிறீர்கள். இப்படி இரண்டு முறை தேடி வந்து பேசி விட்டதனாலேயே நீங்கள் எனக்கு மிகவும் வேண்டியவர் என்று நான் தீர்மானம் செய்து விட முடியுமா?" என்று குறும்புச் சிரிப்புடனே அவன் அவரைக் கேட்ட கேள்வி பதில் ஒன்றும் சொல்ல முடியாமல் திணறச் செய்தது. அந்த விநாடியிலிருந்து அவர் சத்தியமூர்த்தியிடம் அநாவசியமாகப் பேசுவதற்குப் பயப்படத் தொடங்கினார். பொருளாதார விரிவுரையாளர் அங்கிருந்து எழுந்து சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் சத்தியமூர்த்திக்கு அருகே அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசன், "ஏதோ பேசத் தெரியாமல் பேசிவிட்டார். நீங்கள் அவருக்குப் பதில் சொல்லாமல் சும்மா இருந்திருக்கலாம். வந்ததும் வராததுமாகப் புது இடத்தில் ஒருவரைப் பகைத்துக் கொண்டிருக்க வேண்டாமே?" என்றார். சத்தியமூர்த்தி அதைக் கேட்டுச் சிரித்தான்.
"பொது வாழ்வில் பலவற்றைத் தழுவி உறவு கொள்ள தெரிந்திருப்பது போல் சிலவற்றைப் பகைத்து எதிர்கொள்ளவும் துணிவு வேண்டும் என்று நண்பன் குமரப்பன் அடிக்கடி சொல்லுவான். வேண்டாதவற்றிலிருந்து தம்மை அவ்வப்போது தப்பிக்கச் செய்து கொண்டு விலகித் திருப்திப்படுவதைக் காட்டிலும் வேண்டாதவற்றை நம்மிடமிருந்தே தவிர்த்து விலக்கிவிடுவது புத்திசாலித்தனம் சுந்தரேசன்! இந்தப் பொருளாதார விரிவுரையாளர் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டாலும் எனக்குக் கவலையில்லை. நான் அவருக்குப் பொருத்தமாகச் சொல்ல முடிந்த பதில் எதுவோ அதைத்தான் சொல்லியிருக்கிறேன்." "இதனால் அவருக்கு உங்கள் மேல் அநாவசியமான வெறுப்பும், கோபமும் உண்டாகலாம்..." "உண்டாகட்டுமே! இன்னொருவருடைய வெறுப்பும், கோபமும் குறுக்கிடாத பகையற்ற வாழ்க்கை எங்கே தான் இருக்கிறது?" என்று சத்தியமூர்த்தி கேட்ட கேள்விக்குச் சுந்தரேசன் மறுமொழி கூறவில்லை! இடைவேளையின் போது சத்தியமூர்த்தி சுந்தரேசனையும் அழைத்துக் கொண்டு கல்லூரி உணவு விடுதிக்கே சாப்பிடப் போயிருந்தான். அங்கேயும் மாணவர்கள் கூட்டம் அவனைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் தங்கள் தங்கள் வகுப்புகளுக்கு அவன் வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். எதிர்காலத்தில் திடமான நம்பிக்கை கொள்ளச் செய்யும் அந்த இளைஞர்களின் ஆர்வம் சத்தியமூர்த்திக்கு மிகவும் இதமாயிருந்தது. பகல் இரண்டரை மணிக்கு அவன் உணவு விடுதியிலிருந்து திரும்பிய போது தமிழ்த்துறைத் தலைவர் காசிலிங்கனார் ஆசிரியர்கள் அறையின் முகப்பில் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தார். "மிஸ்டர் சத்தியமூர்த்தி! உங்களோடு இரண்டு நிமிஷம் தனியாகப் பேச வேண்டும்" என்ற வேண்டுகோளுடன் அவனை அணுகினார் அவர். அவர் அருகில் ஏற்கெனவே நின்று கொண்டிருந்த மிஸ் வகுளாம்பிகை "புரொபஸர்! நான் உங்களை அப்புறம் பார்க்கிறேன்" என்று குறிப்பறிந்து விலகிச் சென்றாள். சத்தியமூர்த்தியை ஒரு பக்கமாகத் தனியே அழைத்துச் சென்று தாம் சொல்ல வேண்டிய செய்தியை எப்படி ஆரம்பித்து எப்படிச் சொல்லி முடிப்பதென்ற தயக்கத்தோடு ஏதோ ஒரு விதத்தில் வார்த்தைகளைப் பின்னிப் பின்னிப் பேசலானார் காசிலிங்கனார். "இப்போது நான் சொல்லப் போவதெல்லம் நம்முடைய 'டமில் டிபார்ட்மெண்ட்'டின் நன்மைக்காகத்தான். தயவுசெய்து இனிமேல் எந்த வகுப்புக்குப் போனாலும் நம்முடைய டிபார்ட்மெண்ட்டுக்குத் தொடர்புடைய ஏதாவது ஒரு பாடத்தை நடத்திவிட்டு வாருங்கள். பாடத்திட்டங்களும், யார் யாருக்கு எந்த வகுப்பு என்பதும் இன்னும் முடிவாகவில்லையானாலும், போகிற வகுப்பு எதுவாயிருந்தாலும் நான் சொல்கிறபடி செய்து விடுவது நல்லது. எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் இன்று காலையில் நீங்கள் பி.ஏ. முதலாண்டு மாணவர்களுக்கு... ஏதோ ஆங்கிலக் கவிதையை விளக்கி விரிவுரை நிகழ்த்தினீர்களாம். கல்லூரி நிர்வாகி அதைக் கேட்டுவிட்டுப் பிரின்ஸிபலிடம் போய் உங்களை ஒரேயடியாக தூக்கி வைத்துப் பேசிக் கொண்டாடியிருக்கிறார். 'இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட்டுக்குப் புதுப்புது 'டீச்சிங் மெத்தேட்ஸ்' (கற்பிக்கும் வழி முறைகள்) தெரிவதற்காக வருஷத்துக்குப் பத்தாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் ரெபரன்ஸ் புத்தகங்களை வாங்கிக் குவிக்கிறீர்களே? மாணவர்கள் மனத்தில் பதியும்படியான அழகுணர்ச்சியோடு காலையில் அந்தப் பையன் நடத்தியதைப் போல் ஒரு கவிதை வகுப்பு யாராவது இதுவரை இங்கு நடத்தியிருக்கிறீர்களா?' என்று கல்லூரி நிர்வாகி உங்களைக் கொண்டாடியதை ஒட்டி இங்குள்ள இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட்டைப் பற்றிக் குறைத்துச் சொல்லியிருக்கிறார். பிரின்ஸிபல் அவரிடம் ஒன்றும் எதிர்த்துப் பேச முடியவில்லை. பேசாமல் தலையைக் குனிந்து கொண்டு இருந்துவிட்டார். நிர்வாகியின் தலை மறைந்ததும் என்னைக் கூப்பிட்டு வயிற்றெரிச்சலையெல்லாம் கொட்டித் தீர்த்துக் கொண்டாயிற்று. நீங்கள் அந்த வகுப்பில் மாணவர்களுக்கு ஆங்கிலக் கவிதையை விளக்கி விரிவுரை நிகழ்த்தியதனால்தான் இவ்வளவு வம்பும் வந்ததாம். 'இனிமேல் தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் எந்த வகுப்புக்குப் போனாலும் தமிழையே நடத்தச் சொல்லுங்கள். இல்லாத அதிகப் பிரசங்கித்தனமெல்லாம் வேண்டாம்' என்று என்னிடம் எரிந்து விழுகிறார் பிரின்ஸிபல். நேற்று நிர்வாகியின் வீட்டுத் தோட்டத்தில் நீங்கள் பேசியதைப் பற்றியும் பிரின்ஸிபலுக்கு நிறைய மனத்தாங்கல் இருக்கும் போல் தோன்றுகிறது..." இவ்வாறு காசிலிங்கனார் கூறியவற்றையெல்லாம் கேட்டுச் சத்தியமூர்த்திக்குச் சிரிப்பு வந்தது. சிரித்தால் அவர் தம்மை அவமதிப்பதாக நினைத்துக் கொள்ளப் போகிறாரோ என்று எண்ணிச் சிரிப்பை அடக்கிக் கொண்டு, "உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி புரொபஸர்! நான் கவனமாக நடந்து கொள்வேன்" என்று சத்தியமூர்த்தி அவருக்குப் பதில் கூறினான். "ஒன்றும் மனத்தில் வைத்துக் கொண்டு வேதனைப் படாதீர்கள். உடனே சொல்லிவிடுவது நல்லதென்று உங்களைக் கூப்பிட்டுச் சொன்னேன்" என்றார் காசிலிங்கனார். "பரவாயில்லை! நான் பார்த்துக் கொள்கிறேன்..." என்று அவருக்குப் பதில் சொல்லி விடைபெற்றுக் கொண்டு நகர்ந்தான் சத்தியமூர்த்தி. பெரிய பட்டங்களைப் பெயருக்கு முன்னும் பின்னும் போட்டுக் கொண்டு நவநாகரிகமாக உடையணிந்து படிப்பும் பதவியும் உண்டாக்கிய கௌரவத்தோடு நடக்கிற முதிய மனிதர்களிடம் கூட இத்தனை பலவீனங்களும் ஆற்றாமைகளும் அசூயைகளும் இருப்பதை எண்ணி உள்ளூர சிரித்துக் கொண்டே போனான் அவன். அந்த வகுப்பில் அவன் காலையில் தான் நடத்திய ஆங்கிலக் கவிதையைப் பற்றிய விரிவுரையைப் பூபதி கேட்க நேரும் என்றோ அதன் விளைவாக உண்டாக்கிய புகழ்ச்சியால் தன் மேல் இத்தனை அசூயைகள் குறிவைத்துப் பாயும் என்றோ அவன் ஒரு சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயத்தில் அவன் இந்த விளைவுகளுக்காகப் பயப்படவும் இல்லை. உணர்ச்சியும், மலர்ச்சியும் நிறைந்த இளம் மாணவர்கள் கூட்டம் தான் நடக்கிற வழியில் தனக்குப் பின்னால் தொடர்ந்து வருவதற்குத் தயாராக இருக்கும் போது மூத்த பொய்ம்மைகளை நினைத்துக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று நம்பினான் அவன். 'நீங்கள் இந்தக் கல்லூரிக்கு விரிவுரையாளராக வந்த பின் எப்படிப்பட்ட முரட்டு இளைஞர்களும் உங்களைச் சுற்றிக் கைகூப்பிக் கொண்டு திரியப் போகிறார்கள், பாருங்களேன்' என்று பூபதியின் மகள் பாரதி தன்னுடைய கடிதத்தில் எழுதியிருந்ததை நினைத்துக் கொண்டான். கல்லூரி முதல்வரும் ஹெட்கிளார்க் சிதம்பரமும் முதலிலிருந்தே தன்னிடம் பழகுகிற விதம் சரியாயில்லை என்பது அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. அதை நினைத்தும் அவன் கவலைப்படவில்லை. அந்த இரண்டு மூன்று நாட்களிலேயே மாணவர்கள் மனதில் எல்லாம் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டான் சத்தியமூர்த்தி. அவன் கல்லூரிக்குள் நுழையும் போதும், கல்லூரி முடிந்து வெளியேறும் போதும் மலர்ச்சி நிறைந்த முகங்களோடு மாணவர்கள் பலர் அவனைச் சூழ்ந்து கொள்வதைப் பார்த்துக் கல்லூரி முதல்வரும், வேறு சில வயதான ஆசிரியர்களும் அந்தரங்கமாக மனம் புழுங்கினார்கள். மலர்ந்த முகத்தோடு அளவாகவும், அழகாகவும், சிரித்துப் பழகுகிற சுபாவம், நயமும் கருத்தும் கலந்த உரையாடல், எதைப் பற்றியும் சிக்கலோ, முரண்பாடோ இல்லாமல் விவாதிக்கும் திறன், இவற்றால் அந்தக் கல்லூரியின் மாணவர்களை எல்லாம் அபிப்பிராய பேதத்துக்கு இடமில்லாமல் மொத்தமாகக் கவர்ந்துவிட்டான் சத்தியமூர்த்தி. அரைகுறையாகப் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் நன்றாகவே பொறாமைப்படும்படியான காரியம் ஒன்று ஒருவாரம் கழித்து நடந்தது. கல்லூரி நிர்வாகி என்ற முறையில் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை எப்போதாவது கல்லூரிக்கு வந்து சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்வார் பூபதி. அன்றும் அப்படிச் சுற்றிப் பார்க்க வந்தவர் கல்லூரியைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் தமது அறையில் போய் இருந்து கொண்டு சத்தியமூர்த்தியைக் கூப்பிட்டு அனுப்பினார். சத்தியமூர்த்தி அவரைச் சந்திக்கச் சென்றான். அவர் அவனை வழக்கத்துக்கு அதிகமான ஆவலோடும் உற்சாகத்தோடும் வரவேற்றுப் பேசினார். 'அவனுக்கு அந்த ஊர் உடல்நலத்துக்கு ஒத்துக் கொள்கிறதா? கல்லூரியின் சூழ்நிலை பிடிக்கிறதா? சௌகரிய அசௌகரியங்கள் எவையேனும் உண்டா?' என்பது போல் பொதுவான அக்கறையோடு எல்லாவற்றையும் விசாரித்த பின்பு அவனே முற்றிலும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார் பூபதி. "இந்தக் கல்லூரியின் ஹாஸ்டலுக்குச் சரியான வார்டன் இல்லை. ஒரு சம்பிரதாயத்துக்காக நம்முடைய வைஸ்பிரின்ஸிபலையே வார்டனாகப் போட்டிருக்கிறோம். கல்லூரிக் காம்பவுண்டுக்குள்ளேயே மேற்குக் கோட்டில் அவருக்கும் பிரின்ஸிபலுக்கும் வீடுகட்டிக் கொடுத்திருக்கிறோம். வயதாகிவிட்ட காரணத்தினால் வைஸ்பிரின்ஸிபல் ஓடியாடி அலைந்து ஒன்றும் பார்க்க முடியவில்லை. அவருக்குத் துணையாக உதவலாம் என்பதோடு ஹாஸ்டலில் இன்னும் நன்றாகக் கவனம் செலுத்தி உழைக்க வேண்டும் என்பதற்காக உங்களை 'உதவி வார்டனாக' நியமிக்கலாம் என்று நினைக்கிறேன். இதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா? நீங்கள் இதை விரும்பாததற்குத் தவிர்க்க முடியாத காரணம் ஏதாவது இருந்தாலொழிய உங்களை நான் விடமாட்டேன். இந்த ஒரு வாரமாக 'இதற்கு யார் தகுந்த ஆள்' என்று இடைவிடாமல் சிந்தித்து உங்களைத் தேர்ந்தெடுத்தேன்! நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?" இதற்கு என்ன மறுமொழி கூறுவதென்று சத்தியமூர்த்தி சிறிது நேரம் தயங்கினான். பெருந்தொழிலதிபராகிய அந்தத் தேர்ந்த வியாபாரி தன்னை எதற்காகவோ பரீட்சை பார்க்கிறாரோ என்றும் நினைக்கத் தோன்றியது அவனுக்கு. 'மல்லிகைப் பந்தல் கல்லூரிக்கு நீங்கள் ஆசிரியராக வந்து பாடங்கள் கற்பிப்பது தவிர அந்தக் கல்லூரியின் அநுபவங்கள் உங்களுக்கே சில நல்ல பாடங்களைக் கற்பிக்கும் என்பது என் கருத்து' என்று தனக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்த வாக்கியம் வேறு இப்போது நினைவு வந்தது. அவனும் ஒரு பெரிய கல்லூரியில் மாணவனாக இருந்தவனாதலால், 'வார்டனாக' இருப்பதில் உள்ள கஷ்ட நஷ்டங்களைச் சிந்தித்து முடிவு சொல்லக் கூட அவகாசமில்லாமல் எப்படி ஒப்புக் கொள்வதென்று தான் தயங்கினான். இப்போது இப்படி வேண்டுகோள் விடுக்கிற இதே பூபதி தான் இண்டர்வியூவின் போது, 'நீங்கள் மிகவும் இளைஞராக இருக்கிறீர்கள். உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை. மாணவ மாணவிகளிடம் நீங்கள் அதிக கவனத்தோடு பழகவேண்டும்' என்றெல்லாம் சொல்லித் தயங்கினாரென்பதும் அவனுக்கு மறந்துவிடவில்லை. அவனுடைய தயக்கத்தைப் புரிந்துகொண்டே பூபதி மேலும் தெளிவாக விளக்க முற்படுகிறவராகத் தம் மனக்கருத்தை அவனுக்கு விவரிக்கலானார்: "நான் சொல்லுகிறபடி மறுக்காமல் ஒப்புக்கொள்ளுங்கள் மிஸ்டர் சத்தியமூர்த்தி! என்னுடைய மனக்கருத்தை நம்முடைய கல்லூரி முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் கூட இன்னும் நான் தெரிவிக்கவில்லை. உங்களைக் கேட்டுக் கொண்டு செய்யலாம் என்றிருக்கிறேன். இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும், நானாக ஒவ்வொன்றாய் நினைத்து நினைத்துச் செய்தால் தான் உண்டு. நான் வேற்றுமைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் பார்ப்பதில்லை. இங்கே படிக்கிற ஒவ்வொரு மாணவியையும் என் மகள் பாரதியைப் போலவே அக்கறையும் சிரத்தையும் செலுத்தி வளர்க்க விரும்புவது என் வழக்கம். என் சொந்தப் பிள்ளைகளை வளர்ப்பது போல் தான் மாணவ மாணவிகளைப் படிப்பும் பொறுப்பும் உள்ள இளைஞர்களாக உருவாக்கி அனுப்ப விரும்புகிறேன் நான். 'எப்போதும் போல் இருப்பவர்களே இருக்கட்டும்! புதிதாக உதவி வார்டன் எதற்கு?' என்று முதல்வரே என் அபிப்பிராயத்துக்குத் தடை கூறினாலும் கூறலாம். நான் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை. மாணவர்களை இன்னும் சிரத்தையோடு கவனித்துக் கொள்ள வேண்டும். அந்தக் காரியத்தைத் தைரியமாக உங்களிடம் ஒப்படைக்கலாம் என்று தோன்றுகிறது எனக்கு" என்றார் அவர். நீண்ட நேரத் தயக்கத்துக்குப் பின் சத்தியமூர்த்தி அவருக்குப் பதில் சொல்லியே தீர வேண்டியதாயிற்று. "நீங்கள் இந்தக் காரியத்துக்காக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். அதே சமயத்தில் இதை ஏற்றுக் கொள்ளவும் எனக்குத் தயக்கமாக இருக்கிறது சார்! வயதும், அநுபவமும் மிகுந்த ஆசிரியர்கள் பலர் இந்தக் கல்லூரியில் இருக்கிறார்கள். நான் வயதில் இளையவன், புதிதாக வந்திருப்பவன். உங்கள் எண்ணத்தை என்னால் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போனாலும் போகலாமோ என்று தான் தயங்குகிறேன் சார்..." இப்படி அவன் சாதாரணமாகக் கூறிய பதிலை அவர் தம்மைக் குத்திக் காட்டுவதாக எடுத்துக் கொண்டார். முதன் முதலாக அவன் இண்டர்வ்யூவுக்கு வந்திருந்த போது அவனுடைய வயது இளமை, அனுபவம் ஆகியவற்றைப் பற்றித் தான் அதிகமாக விவாதித்துவிட்டதை இப்போது அவன் இப்படிச் சொல்லிக் காட்டுவதாகப் புரிந்து கொண்ட பூபதி, "மிஸ்டர் சத்தியமூர்த்தி! நீங்கள் எதற்காகவோ என்னிடம் இதைச் சொல்லிக் காண்பிக்கிறீர்கள் என்று படுகிறது. அப்படியானால் என்னை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்க வேண்டியிருக்கும்" என்றார். சத்தியமூர்த்தி மௌனமாக இருந்தான். பூபதி அவ்வளவுடன் அவனை விட்டுவிடவில்லை. "இதோ என்னைப் பாருங்கள் சத்தியமூர்த்தி! நான் உங்களுக்குச் சம்மதமா, இல்லையா என்று கேட்டு இதுவரை தயங்கிக் கொண்டிருப்பதை இனிமேல் செய்யப் போவதில்லை. இன்னும் அரைமணி நேரத்தில் நீங்கள் இந்தக் கல்லூரியின் விடுதிக்கு 'உதவி வார்டனாக' நியமிக்கப்பட்டிருப்பதைப் பற்றி 'சர்குலர்' வரும். அப்போது தெரிந்து கொள்வீர்கள். இப்போது நீங்கள் புறப்படலாம்" என்று புன்முறுவலோடு அவன் பதில் சொல்ல இடமின்றிப் பேச்சை முடித்தார் பூபதி. முக்கால் மணி நேரத்துக்கு மேல் கல்லூரி நிர்வாகியின் அறையில் உட்கார்ந்து அவரோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு அவன் வெளியே வந்து ஆசிரியர்கள் அறைக்குள் திரும்பி நுழைந்த போது மற்றவர்கள் அவனைப் பார்த்த பார்வையே 'ஒரு மாதிரி' இருந்தது. "என்ன விசேஷமா? ரொம்ப நாழிகை பேசிக் கொண்டிருந்தீர்கள் போலிருக்கிறதே?" என்று விஷயத்தை அறிந்து கொண்டு வம்பளக்கும் ஆவலோடு அவனை அணுகிக் கேட்டார் ஒரு பேராசிரியர். "ஒன்றுமில்லை" என்று சுருக்கமாக அவருக்குப் பதில் சொல்லி அனுப்பினான் சத்தியமூர்த்தி. காசிலிங்கனாரோ வேறு எதையோ நினைத்துக் கொண்டு பயந்தார். "ஏதோ நமக்குள்ளே பேசிக் கொள்வதையெல்லாம் நீங்கள் மேலே இருக்கிறவர்களுக்குச் சொல்லி ரசாபாசம் பண்ணக்கூடாது. பிரின்ஸிபல் 'தமிழ்ப்பிரிவு ஆசிரியர்கள் தமிழ் தவிர வேறெதுவும் நடத்தக்கூடாது. ஆங்கிலத்தை ஆங்கில விரிவுரையாளர்கள் நடத்திக் கொள்வார்கள்' என்று கூறியதைப் பூபதி அவர்கள் காதில் போட வேண்டாம். இதெல்லாம் நமக்குள் ஓர் ஏற்பாடு. பிரின்ஸிபலையும் பகைத்துக் கொள்ள முடியாது. மற்றவர்கள் நன்றாக ஆங்கிலம் நடத்திப் பேர் வாங்கிவிட்டால் அவருக்குப் பிடிக்காது. இதெல்லாம் பட்டும் படாமலும் இருக்கணும்" என்று காசிலிங்கனார் உடனே வலுவில் தன்னிடம் வந்து கூறியதைப் பார்த்தால் அவர் பேசியதெல்லாம் தான் பூபதியிடம் சொல்லியிருப்பதாக அவரே சந்தேகப்படுகிறார் என்பது சத்தியமூர்த்திக்குப் புரிந்தது. 'படித்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? இப்படி நினைக்கிறார்கள்? ஏன் இப்படிப் பொய்யாகப் பழகுகிறார்கள்?' என்று எண்ணி எண்ணித் தனக்குள் நொந்து கொள்வதைத் தவிர சத்தியமூர்த்தியால் அப்போது வேறொன்றும் செய்ய முடியவில்லை. 'பொய் தவழும் உலகநடை என்னென்பேன்? என்னென்பேன்?' என்று இராமலிங்க சுவாமிகள் கதறியிருப்பதை நினைத்துக் கொண்டான் அவன். வகை வகையான எண்ணங்களையும் பழக்க வழக்கங்களையும் உடைய மனிதர்களை இரசிக்கத் தெரிய வேண்டுமென்று குமரப்பன் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பானே, அது இப்போது ஞாபகம் வந்தது. செய்தி அதற்குள் எப்படியோ கல்லூரி முழுவதும் பரவியிருந்தது. கல்லூரி முடிந்து அறைக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில், "உங்களை உதவி வார்டனாக நியமிக்கப் போவதாகப் பேசிக் கொள்கிறார்களே?" என்று பாடனி விரிவுரையாளர் சுந்தரேசன் நடுவழியில் கேட்ட போது சத்தியமூர்த்தி மௌனமாகப் புன்னகை செய்தான். ஆமாம் என்றும் ஒப்புக் கொள்ளவில்லை, இல்லை என்றும் மறுக்கவில்லை. பலர் பணிபுரியும் பொது நிறுவனங்களில் தனி ஒருவனுடைய வளர்ச்சியும், தளர்ச்சியும் ஒவ்வொரு விநாடியும் அந்தப் பலராலும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்குமென்று அவனுக்குத் தெரியும். வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படவும், தளர்ச்சியைக் கண்டு பெருமைப்படவும் செய்வார்கள் என்பதும் தெரியும். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|