63

     தூக்கமும் ஒரு தற்காலிகமான சாவு தான். அதிலிருந்து மறுபடி விழித்துக் கொள்ள முடிகிறது. அதே போல் சாவும் ஒரு நிரந்தரமான தூக்கம் தான். ஆனால் அதிலிருந்து மறுபடி விழித்துக் கொள்ள முடிவதில்லை...

     பாரதி மறைத்திருந்தாலும் சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையை விட்டு விட்டு மேற்கு ஜெர்மனிக்குச் செல்லப் போகிறார் என்று இப்போது தெரிந்து விட்டது. பாரதி அந்த விவரத்தைத் தன்னிடம் மறைத்ததற்காக மோகினி சிறிதும் கவலைப்படவில்லை. வாழ்வில் எதற்காகவுமே கவலைப்பட்டுப் பயனில்லை என்பது போல் விரக்தியடைந்து விட்டபின் கவலைப்படுவது கூட அதற்குக் காரணமான துயரத்தின் கௌரவத்தைக் குறைத்து விடுகிறதே! 'எல்லாத் துயரங்களையும் நம்மைத் தேடி வருகிற மலைமலையான எல்லாத் துன்பங்களையும் - நமக்கே சொந்தமாக ஏற்று அங்கீகரித்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் போது தான் அந்தத் துயரத்துக்கு நாம் செய்கிற கௌரவம் மெய்யாகிறது' என்று அந்த நிலையில் எதையும் தாங்கிக் கொள்ள முடிந்து ஒரு நிதானமும் மனப்பக்குவமும் அவளுக்கு வந்திருந்தன. 'என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் அக்கா' என்று கேட்ட பாரதியிடம் தான் சொல்வது பொய்தான் என்ற உணர்வுடனே சிறிதும் மனம் குழம்பாமல், 'ஏதோ பழைய பாட்டு எழுதுகிறேன்' என்று பதில் சொல்லிச் சமாளித்த போதும், நள்ளிரவுக்கு மேலாகிவிட்ட அந்த நேரத்தில் தனியாக உட்கார்ந்து கொண்டு பேய் போல் எழுதிக் கொண்டிருந்த போதும் அதே நிதானத்தோடுதான் அவள் நடந்து கொண்டிருந்தாள். பார்க்கப் போனால் எது பேய்? எது மனிதன்? பேய்க்கும் மனிதனுக்கும் உயிரும் உணர்வும் தானே வேறுபாடுகள்? வாழ்க்கையிலேயே பேய் பிசாசுகளை விடக் கொடிய மனிதர்கள் தன்னைச் சூழ்ந்து பயமுறுத்திக் கொண்டிருக்கும் போது உருவமில்லாத வெறும் பேய் பிசாசுகள் இவர்களை விடக் கெட்டவர்களாக இருக்க முடியுமென்று அவளுக்குத் தோன்றவில்லை.

     அப்போது அவளைச் சுற்றிலும் ஒரே இருள். நடுவே மேஜை விளக்கு மட்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் அவள் எதைச் செய்து கொண்டிருந்தாளோ அதுவே சொப்பனம் போல் இருந்தது. வாழ்வதையும் நினைப்பதையும் விடச் சொப்பனம் எந்த விதத்திலும் குறைந்ததில்லை. ஏனென்றால் எப்போதாவது வருகிறது அது. பிரத்தியட்ச வாழ்வில் துக்கங்களில்லாமல் சுகமாயிருக்கிறது. தோட்டத்துப் பக்கமிருந்து வீசிய குளிர்ந்த காற்றில் பன்னீர்ப் பூவின் மணமும், பவழ மல்லிகை மணமும், கமகமத்தன. எங்கோ மரப் பொந்தில் ஆந்தை ஒரு முறை அலறியது. அப்போது சுவர்க்கடிகாரம் இரண்டு மணி அடித்தது. அந்த வேளையில் அவளுடைய மனத்தைப் போல் உலகமும் உணர்வும் செத்துப் போய்த் தூங்கிக் கொண்டிருந்தது. தூக்கமும் ஒரு தற்காலிகமான சாவுதான்! ஆனால் அதிலிருந்து விழித்துக் கொள்ள முடிகிறது. சாவும் ஒரு நிரந்தரமான தூக்கம்தான்! ஆனால், அதிலிருந்து விழித்துக் கொள்ள முடிவதில்லை. தான் எழுதிய கடிதங்களைத் தனித்தனியே மடித்து இரண்டு உறைகளில் இட்டு மேஜை மேல் வைத்தபின் ஒரு நோக்கமும் இல்லாமல் வெளியே பலகணி வழியே பார்த்தாள் மோகினி. எதிர்ப்புறம் நிலவும் மழை இருளும் கலந்து மயங்கிய மலையில் எங்கோ குங்குமமிட்டது போல் தீ எரிந்து கொண்டிருந்தது. பின்னிரவு குளிரக் குளிரப் பவழ மல்லிகைப் பூக்களின் வாசனை அறைக்குள் அதிகமாக வந்து பரவியது. காலந்தப்பிய மிக முன்னாலேயே இந்தச் சோம்பேறி உலகத்தை எழுப்பி விட ஆசைப்பட்ட அவசரக்காரச் சேவல் ஒன்று எங்கிருந்தோ ஒருமுறை கூவியது. வெறும் சொல்லுக்கும் நினைப்புக்கும் பொருள் எந்த இடத்தில் முடிகிறதோ அந்த இடத்திலிருந்துதான் உணர்ச்சி பிறக்கிறது. மோகினி அப்போது உணர்ச்சி மயமாயிருந்தாள். திடீரென்று அந்த அகாலத்தில் உடனே நீராடிவிட்டு வரவேண்டும் போலத் தோன்றியது அவளுக்கு. குளியலறைக்குப் போய்ச் சந்தனச் சோப்புப் பூசி உடல் குளிர நீராடி வேறு நல்ல புடவை மாற்றித் திலகமிட்டுக் கொண்டாள் அவள். கண்களுக்கு ஆசையோடு மையும் தீட்டிக் கொண்டாள். அவள் அப்போது அந்த நள்ளிரவில் தனக்குத்தானே செய்து கொண்ட காரியங்களுக்கு ஏதோ ஓர் அர்த்தமிருக்கிறாற் போலவும் தோன்றியது. அவள் அப்போது தான் பரிபூரணமான சந்தோஷத்தோடு இருப்பதாகவும் உணர்ந்தாள். அப்படி உணர்ந்த மறுகணமே அதன் மறுபுறத்தில் பரிபூரணமான துக்கத்தையும் உணர்ந்து அநுபவித்தாள். இருளில் தட்டுத் தடுமாறித் தோட்டத்துக்கு ஓடிப்போய் அரைகுறையாக மலர்ந்திருந்த இரண்டொரு ரோஜாப் பூக்களையும், அடுக்கடுக்கான குடை மல்லிகைப் பூக்களையும் பறித்து ஈரக்கூந்தலை முடித்து அதில் சொருகிக் கொண்டு வந்தாள். ஏதோ நினைத்தவளாக உள்ளே போய்த் தேடி எடுத்து அரங்கேறிய நாளிலிருந்து தன் பட்டுப் பாதங்களை அலங்கரித்த அந்தச் சலங்கைகளையும் பாரதி எழுந்து விடுவாளோ என்ற பயத்தோடு காலில் ஓசைப்படாமல் அணிந்து கொண்டாள். இந்தப் பாழாய்ப் போன உலகத்துக்குப் புகழோடும், பெருமையோடும், தான் அறிமுகமாகக் கருவியாக இருந்த எல்லாவற்றையும் தன்னோடு சேர்த்து எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும் போல ஓர் ஆசை அப்போது அவளுள்ளே எழுந்து தவித்தது. மேஜை விளக்கருகே கையைக் கொண்டு போய்ப் பட்டுப் புடவைத் தலைப்பினால் தன் விரலிலிருந்த மோதிரத்தைத் தேய்த்துப் பளபளக்கச் செய்த பின் அதன் பொன்னொளியில் தன் முகத்தைப் பார்த்த போது அந்த மோதிரத்தை அணிவித்த தெய்வத்தின் ஞாபகம் வந்து மனத்தைப் பிசைந்தது. அவளுடைய சலங்கையணிந்த பாதங்கள் உடனே எங்கோ புறப்பட்டுப் போய்விட வேண்டும் போல் துடிதுடித்தன. மைதீட்டிய விழிகள் யாரையோ பார்க்கப் பறந்தன. சிவந்த உதடுகள் யாரிடமோ புன்முறுவல் பூக்க நெகிழ்ந்தன. கமலக் கைகள் யாரையோ வணங்க வேண்டும் போலக் குவிந்து கூப்புவதற்கு முந்தின.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.