61
இந்தத் தேசத்தின் இன்றைய வாழ்க்கையில் வாழ வேண்டும் என்கின்ற ஆசைகள் ஒருபுறமும் வாழ்வதற்கு வேண்டிய சௌகரியங்கள் வேறு ஒரு புறமுமாக முரண்பட்டு நிற்கின்றன. மாறுதலும் விரைவும் மிக நெருங்கிய உறவினர்கள் போல் இருக்கிறது. அதனால் தான் சந்தர்ப்பங்கள் மாறும் போது வாழ்க்கையே மிகவும் வேகமாக ஓடிவிடுவது போல் தோன்றுகிறது. "என்ன தான் விரோதம் வந்துவிட்டாலும அவரிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் நீ இதைச் செய்யலாமா? என்னமோ போ. வீட்டோடு ஒட்டாமல் போயாச்சு?" என்று அம்மா கண்கலங்கி விடைகொடுத்த போதும், தங்கைகள் ஏறக்குறைய அழுகிற நிலைக்கு மனம் வருந்தியதையும் கண்டும் காணாதவனாகப் புறப்பட்டு விட்டான் சத்தியமூர்த்தி. கலெக்டர் இரயில் நிலையத்துக்கு வந்து வாழ்த்துக் கூறி அவனை வழியனுப்பினார். மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்தில் அந்த எக்ஸ்பிரஸ் வண்டி மூன்று நிமிடங்கள் நின்றது. குமரப்பன் மலைக்கு பஸ் ஏறுவதற்காக அங்கே இறங்கிக் கொண்டான். மறுநாள் காலை சத்தியமூர்த்தி சென்னையை அடையும் போது இரயில் இரண்டரை மணி நேர தாமதத்தோடு ஒன்பதே முக்கால் மணிக்கு எழும்பூருக்குப் போய்ச் சேர்ந்ததனால் நிலையத்திலேயே குளித்து உடை மாற்றிக் கொண்டு அவசரம் அவசரமாகச் சென்டிரல் நிலையத்துக்குப் போய் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸைப் பிடிப்பதற்குத்தான் நேரம் சரியாயிருந்தது. கலெக்டர் கடிதம் கொடுத்துச் சொல்லியனுப்பியிருந்த சென்னைப் பிரமுகர்களை டில்லியிலிருந்து திரும்பும் போதுதான் பார்க்க முடியுமென்று தோன்றியது. பாரதத்தின் தலைநகருக்குத் தமிழ்நாட்டின் தலைநகரிலிருந்து புறப்படும் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் தனக்குரிய சகலவிதமான கம்பீரங்களுடன் ஒன்றே முக்கால் நாள் ஓடி அலுத்த களைப்போடு டெல்லி மாநகரை அடைந்த போது - டெல்லியிலுள்ள மதராஸி ஓட்டல் ஆட்கள் ஸ்டேஷன் பிளாட்பாரத்தை முற்றுகையிட்டுக் கிராக்கி பிடிப்பதற்குப் பறந்தார்கள். மறுநாள் காலையில் இண்டர்வ்யூ. களைப்பாக இருந்ததனால் ஓய்வு கொள்ள விரும்பிய சத்தியமூர்த்தி ஸ்டேஷனுக்கு வந்திருந்த ஹோட்டல் ஏஜெண்டுகளில் யாரோ ஒருவரோடு புறப்பட்டுப் போய் மலிவான ஏதோ ஒரு ஹோட்டலில் தங்கினான். கையில் பணம் குறைவாகக் கொண்டு வந்திருந்ததனால் இண்டர்வ்யூ முடிந்ததும் அடுத்த இரயிலில் திரும்பத் திட்டம் போட்டு ஸ்டேஷனில் இறங்கியதும் முன்னேற்பாடாகத் திரும்புவதற்கு டிக்கட் கூட எடுத்தாயிற்று. ஜெர்மன் தூதராலயத்தில் மறுநாள் காலையில் நிகழ்ந்த இண்டர்வ்யூவுக்கு மொத்தம் ஏழு பேர்கள் வந்திருந்தார்கள். அதில் சத்தியமூர்த்தி உள்பட மூவர் முதல் வகுப்பில் தேறிய ஆனர்ஸ் பட்டதாரிகள். இருவர் வெறும் எம்.ஏ.க்கள். இன்னும் இருவர் வெறும் பி.ஓ.எல். தகுதி மட்டுமே உடையவர்கள். இண்டர்வ்யூவில் தூதராலயத்தைச் சேர்ந்தவர்கள் உலக அரசியல், நிலவியல் பற்றிச் சில கேள்விகள் கேட்டனர். மற்றவர்கள் மொழியியல் பற்றிச் சில கேள்விகள் கேட்டார்கள். சத்தியமூர்த்தி திருப்திகரமாகவும் நன்றாகவும் மறுமொழிகளைக் கூறினான். இண்டர்வ்யூ முடிந்ததும் கலெக்டரின் அறிமுகக் கடிதங்களுக்குரியவர்கள் சிலரைச் சந்தித்தான். எல்லாரும் 'நீங்கள் தேர்ந்தெடுக்கப் பெறுவது உறுதி. அதில் சந்தேகமே படவேண்டாம்' என்ற தோரணையில் அவனிடம் நம்பிக்கையளித்துப் பேசினார்கள். அங்கிருந்தே கலெக்டருக்கும் நண்பன் குமரப்பனுக்கும் கடிதங்கள் எழுதினான் சத்தியமூர்த்தி. திரும்பும் போது மதுரையைச் சேர்ந்த பார்லிமெண்ட் உறுப்பினர் ஒருவரை இரயில் நிலையத்தில் இரயிலேறுகையில் தற்செயலாக அவன் சந்திக்க நேர்ந்தது. அவரை அவனுக்கு நன்றாகத் தெரியும். அவரோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான் அவன். அவரும் அவன் வந்த காரியத்தை அறிந்து அவனை மனப்பூர்வமாகப் பாராட்டினார்.
"அப்படியா? ரொம்ப சந்தோஷம்! இரண்டாவது உலகப் போருக்குப் பின் அமெரிக்க ஐரோப்பிய உதவிகளும் தன் சொந்தத் திறமையும் சேர்ந்து மேற்கு ஜெர்மனியை இணையிலா வளர்ச்சியடையச் செய்து விட்டன. அப்படி வளர்ந்த நாடுகளுக்கு உங்களைப் போன்ற இளைஞர்கள் சென்று திரும்புவது பல துறைகளில் வளராத இந்த நாட்டுக்கு எவ்வளவோ பயன்படும். நாம் இன்னும் எவ்வளவோ வளர வேண்டும். வளர வேண்டும் என்னும் உணர்வு வருவதற்கு முதலில் வளர்ந்திருப்பவர்களைக் கண் திறந்து பார்க்க வேண்டும்" என்று அவனை உற்சாகமூட்டுவதற்காக மேற்கு ஜெர்மனியைப் பற்றிய புதுமைகளைப் புகழ்ந்து கூறத் தொடங்கியிருந்தார் அந்தப் பார்லிமெண்ட் உறுப்பினர். அவர் முதல் வகுப்பிலும் அவன் மூன்றாம் வகுப்பிலுமாகப் பயணம் செய்தாலும், பயணத்தினிடையில் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். சென்னையில் ஒரு நாள் தங்கி மாக்ஸ் முல்லர் பவனிலும், ஜெர்மன் கான்ஸல் ஜெனரல் அலுவலகத்திலும், இந்தோ - ஜெர்மன் கல்ச்சுரல் சென்டர் ஆஃப் கதே இன்ஸ்டிடியூட் - சென்னைக் கிளையிலும் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தான் அவன்.
சத்தியமூர்த்தி மதுரை திரும்பிய தினத்தன்று கலெக்டர் ஊரில் இல்லை. எங்கோ முகாமில் இருந்தார். மதுரையிலிருந்தே கடிதம் மூலம் மல்லிகைப் பந்தல் கல்லூரிக்கு லீவை இன்னும் இரண்டு நாட்கள் வளர்த்து எழுதினான். மறுநாள் கலெக்டர் 'காம்ப்'லிருந்து திரும்பவே அவரைப் பார்த்து எல்லா விவரமும் கூறிய பின் தன் வீட்டுக்கும் ஒரு நடை சென்றிருந்தான். சத்தியமூர்த்தி டெல்லியிலிருந்து திரும்பிய தினத்தன்று அவனுடைய தந்தை மதுரையில் தான் இருந்தார். ஆனால் அவன் அம்மாவைப் பார்த்துச் சொல்லிக் கொள்ளப் போயிருந்த போது அவர் வீட்டில் இல்லை. அம்மா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் திரும்பி வருகிற வரை வீட்டில் காத்திராமல் அம்மாவிடமும் தங்கையிடமும் மட்டும் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டான் சத்தியமூர்த்தி. அவன் புறப்படும் போது வாசல் வரை கூட வந்த தங்கை ஆண்டாள், "அண்ணா! நீ ஊரில் இல்லாத போது உன் பெயருக்கு நேற்றோ முந்தாநாளோ மல்லிகைப் பந்தல் தபால் முத்திரையோடு ஒரு ரிஜிஸ்தர் கவர் வந்தது. போஸ்ட்மேன் பழக்கத்தினால் தன்மையாக அப்பாவிடமே கையெழுத்து வாங்கிக் கொண்டு அதைக் கொடுத்து விட்டான். அதிலே என்னதான் இருந்ததோ? தெரியலை. அப்பா அதை வாங்கிப் பிரித்துப் படித்துவிட்டு ரொம்பக் கோபமா அப்படியே கிழிச்சி அடுப்பிலே கொண்டு போய்ப் போட்டாரு" என்று காதருகே சொல்லி விட்டுப் போனாள். 'குமரப்பனை அவருக்குப் பிடிக்காது. அவன் எனக்கு ஏதாவது கடிதம் எழுதியிருப்பான். அதைக் கிழித்து அடுப்பில் போட்டிருப்பார்'" என்று முதலில் நினைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. ஆனால் அதே சமயத்தில் நண்பன் தனக்கு பதிவுத் தபாலில் என்ன கடிதம் எழுதியிருக்க வேண்டுமென்ற சந்தேகமும் உண்டாகியது. அப்போதிருந்த பரபரப்பில் அதைப் பற்றி அதிகம் சிந்திக்க நேரமில்லை அவனுக்கு. மோகினி எழுதிய கடிதமொன்றைப் பாரதி வாங்கிப் பதிவுத் தபால் மூலம் தன்னுடைய மதுரை முகவரிக்கு அனுப்பியிருக்க முடியும் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லையாதலால் அந்த நினைவே அப்போது அவனுக்கு வரவில்லை. மூன்றாம் நாள் காலை மல்லிகைப் பந்தலுக்குப் பஸ்ஸில் வந்து இறங்கிய போது, இன்னும் சில நாட்களில் டில்லியிலிருந்து விவரம் தெரிந்த பின் பிரின்ஸிபலிடம் தனது ராஜினாமாக் கடிதத்தைக் கொடுப்பதென்ற உறுதியான முடிவுக்கு வந்திருந்தான் அவன். சத்தியமூர்த்தி மதுரைக்கும் சென்னைக்கும் டில்லிக்கும் போய்விட்டுத் திரும்புவதற்குள் மல்லிகைப் பந்தலில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்திருந்தன. ஜமீந்தார் உடல்நிலை தேறி எழுந்திருந்தார். பாரதி தலைக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டு இரண்டு நாள் ஆகியிருந்தது. மல்லிகைப் பந்தல் நகரின் மற்றொரு பகுதியில் மாபெரும் தோட்டத்துக்கிடையே இருந்த மஞ்சள்பட்டி ஜமீன் மாளிகை சில இடங்களில் புதுப்பித்துக் கட்டப் பெற்றுக் கவர்ச்சிகரமான டிஸ்டெம்பர் பூச்சுடன் செப்பனிடப்பட்டிருந்தது. நவீன மின் விளக்கு அழகுகளும், புதுப்புது மேஜை நாற்காலிகளும், சோபாக்களும், கட்டில்களும், மெத்தைகளும் வாங்கிப் போட்டு அழகு மாளிகையினை, அரண்மனையாக்கியிருந்தார் கண்ணாயிரம். இதற்காகப் பட்டனத்திலிருந்து இரண்டு லாரிகள் நிறைய சோபா, நாற்காலிகள், முக்கிய மரச்சாமான்களும், சுவரில் பதிப்பதற்கான பெல்ஜியம் கண்ணாடிகளும் வந்திருந்தன. சௌகரியமுள்ளவர்களுக்குக் கிராமமும் பட்டினம்தான். ஏனென்றால், சௌகரியமில்லாதவர்கள் பட்டினத்திலும் கிராமத்தின் அசௌகரியங்களை அடைகிறார்கள். சௌகரியமுள்ளவர்கள் கிராமத்திலும் பட்டினத்தின் வசதிகளை அடைய முடிகிறது. இறைக்க இறைக்க ஊறும் பேய் ஊற்றைப் போல் ஜமீன் ஒழிப்புக்குப் பின்னும் ஜமீந்தாரிடம் பணம் ஊறிக் கொண்டிருந்தது. அவர் விரும்பிய சௌகரியங்கள் எல்லாம் இருக்குமிடத்தைத் தேடி வந்தன. ஒவ்வொரு பெரிய ஊரிலும் அந்தத் தனி மனிதருக்கு மாபெரும் தியேட்டர்களைப் போல் பெரிய வீடுகள் இருந்தன. 'பல பங்களாக்களிலிருக்கும் கார் ஷெட்டுக்களை விட சிறிய மோசமான குடிசைகளில் இந்தத் தேசத்து ஏழைகள் குழந்தை குட்டிகளோடு மூச்சுத் திணறிச் சாகிறார்கள். அதே சமயத்தில் இரண்டொரு மனிதர்களே வசிக்கும் சில பங்களாக்களில் மனிதர்களுக்காக வெளியே இருக்கும் குடியிருப்புக்களை விட அழகான கார் ஷெட்டுகள் இருக்கின்றன. வரவர இது ஒரு வேடிக்கையான இரண்டுங்கெட்டான் தேசமாகிவிட்டது! எளிமையிலும் முழுமையாக நம்பிக்கை இல்லை. குணத்தையும், ஒழுக்கத்தையும் பேச்சில், எழுத்தில் கொண்டாடுகிறார்கள். பணத்தையும் பதவியையும் செல்வாக்கையுமே வாழ்க்கையில் நடைமுறையில் மதித்துப் பயப்படுகிறார்கள். புராதனமான ஆன்மீகப் பாரம்பரியத்தைத் தங்களுடையதாகச் சொல்லி மற்ற நாட்டாரிடம் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். சொந்த நாட்டிலோ அன்றாட வாழ்வில் வெறும் காரியவாதிகளாக - லோகாயதவாதிகளாக வாழ்கிறார்கள். இலட்சியத்தில் - நினைப்பளவில் கடவுளைப் பக்தி செய்கிறார்கள். நடைமுறையில் கண்முன்னால் சௌகரியமுள்ள மனிதனைப் பக்தி செய்து மடிகிறார்கள். இந்தத் தேசத்தின் இன்றைய வாழ்க்கையில் 'வாழ வேண்டும் என்கின்ற ஆசைகள் ஒரு புறமும், வாழ்வதற்குரிய சௌகரியங்கள் வேறு ஒரு புறமுமாக முரண்பட்டு நிற்கின்றன' என்று நவநீதகவி ஒரு கூட்டத்தில் சொற்பொழிவாற்றியிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நியூயார்க்கில் நடைபெற்ற அகில உலகக் கவி சம்மேளனத்தில் இந்தியாவிலிருந்து தமிழ் நாட்டின் பிரதிநிதியாகப் போய்க் கலந்து கொண்டு உலக சமாதானப் பண்ணிசைத்து விட்டுத் திரும்பிய பின் தமிழகத்தின் முக்கியமான ஊர்களிலெல்லாம் - அந்தக் கவிஞன் பெருமானுக்கு வரவேற்பளித்தார்கள். அந்தச் சமயத்தில் மதுரையிலும் ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது துன்பப்படுவோர்களின் ஊமைத் துன்பங்களையெல்லாம் சொல்லாய்க் கவிதையாய் உருவாக்கும் அந்தக் கவிஞர் திலகர் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் 'உலக அரங்கில் இந்தியாவின் சமூக வாழ்வு எப்படி ஒப்பிடப்பட முடியும்?' என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு இந்தக் கருத்துக்களையெல்லாம் தெரிவித்தார். அன்று அந்தக் கூட்டத்துக்குக் குமரப்பனும், சத்தியமூர்த்தியும் மற்ற நண்பர்களும் போயிருந்தார்கள். அன்று அவர் பேசிய கருத்துக்கள் எல்லாம் சத்தியமூர்த்தியின் மனத்தில் சிந்தனைகளைத் தூண்டியிருந்தன. அந்தக் கருத்துக்களை மையமாகக் கொண்டு பலநாள் பல சந்தர்ப்பங்களில் அவன் தன்னுடைய சொந்தச் சிந்தனைகளை வளர்த்திருக்கிறான். டில்லியிலிருந்து திரும்பும் போது பாராளுமன்ற உறுப்பினராகிய மதுரைப் பெரிய மனிதர் 'வளராத நாடுகளில் ஒன்றாகிய பாரதம் வளர்ந்த நாடுகளைக் கண்டறிவதனால் மட்டுமே வளர முடியும்' என்று அடிக்கடி சொல்லி வந்த வேளையில் கூட நவநீதக் கவியின் இந்தப் பழைய சொற்பொழிவைத்தான் சத்தியமூர்த்தியால் நினைக்க முடிந்தது. பொது வாழ்வில் தனி மனிதனுடைய சமுதாய அந்தஸ்து உயராத வரை இந்தியா வளரவும் வழியில்லை என்று எண்ணினான் அவன். இந்த விநாடி வரையில் பணத்தோடும், செல்வாக்கோடும், பதவியோடும் சேர்ந்திருக்கிற மனிதனைத் தவிர குணத்தோடும், நியாய நேர்மைகளோடும் சேர்ந்திருக்கிற மனிதனுக்குச் சமுதாய அந்தஸ்து என்பதே இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று சத்தியமூர்த்தி ஆசைப்பட்டான். எனவே பலவிதத்திலும் வளர்ச்சியடைந்த நாடு ஒன்றின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் போய் இரண்டாண்டுகள் இருக்கப் போகிறோம் என்ற வாய்ப்பை அவன் மனம் ஒவ்வொரு விநாடியும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் இத்தனை எண்ணங்களுக்கும் நடுவே 'மோகினி தன்னை ஏமாற்றிவிட்டாள்' என்ற வேதனையும் ஆறாததோர் பச்சைப் பசும் புண்ணாக அவன் மனத்தில் ஊறிப் போயிருந்தது. முன்பு ஒரு நாள் நண்பன் குமரப்பனிடம் பேசும் போது 'ஐ கேன் டை வித் ஹெர் - பட் நாட் லிவ் வித் அவுட் ஹெர்' என்று அவன் மோகினியைப் பற்றி உணர்ச்சி வசப்பட்டுக் கூறியிருந்தான். அன்று தான் இப்படிக் கூறியதைக் கேட்டு, 'உண்மையான அன்பு - அதாவது காதல் கூடப் பல சமயங்களில் மனிதன் தனக்குப் பூட்டிக் கொள்ளும் விலைமதிப்பற்ற விலங்காகத்தான் இருக்கிறது. உண்மையான அன்புதான் கயஸை லைலாவுக்காகப் பைத்தியம் பிடித்து அலைய வைத்தது. தேவதாஸைப் பாருவுக்காக இரத்தம் கக்கிச் சாக வைத்தது. அம்பிகாபதியைக் கழுவேற்றியது. உன்னுடைய காதலுக்கு முன்பாக வந்து நிற்கும் பிரச்சினைகளையும் எதிர்ப்புக்களையும் பார்க்கும் போது என் உயிர் நண்பனாகிய நீ இன்னும் முகத்தில் ஒளியிழந்து கண்களில் சிந்தனை தேக்கிக் கால்கள் நடை சோர்ந்து வாழ்க்கை வீதியில் அலைய நேரிடுமே என்றுதான் பரிதாபமாக இருக்கிறது' என்று குமரப்பன் சிரித்துக் கொண்டே பதில் சொல்லியிருந்ததைச் சத்தியமூர்த்தி இப்போது நினைவு கூர்ந்தான். 'பெண்ணின் அன்பு என்பது மனிதனுடைய மனத்தைப் பிணிக்கும் உறுத்தாத விலங்குகளில் ஒன்றாகத்தான் இருக்கும் போலும்' என்று இந்த விநாடியில் அவனும் தனக்குத் தானே உணர்ந்தாக வேண்டியிருந்தது. "ஆண் பிள்ளைகளின் வீரத்தையும், தன்மானத்தையும் அழிக்கிற அழகுகள் உலகத்துக்கு எந்த லாபத்தைத் தர முடியும்? கிரேக்க நாட்டு ஹெலனின் அழகிலே ஆயிரம் கப்பல்கள் பாய் விரித்துப் பறக்கத் தூண்டும் கட்டளைக் கவர்ச்சி இருந்ததாம் எகிப்திய அழகி கிளியோபாட்ரா சீஸரைச் சீரழித்தாள். ஹெலன், கிளியோபாட்ரா, சீதை, நூர்ஜஹான், மும்தாஜ், அகல்யை, அனார்க்கலி ஆகியவர்களின் இணையிலா அழகினால், ஆண்பிள்ளைகள் பலர் பிரச்சினைக்குரியவர்களாகவும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறவர்களாகவும் ஆகி அவஸ்தைப்பட்டிருக்கிறார்கள்" என்றே நினைத்தான் அவன். அந்த நினைப்பு நீங்குவதற்குள்ளாகவே 'மோகினியின் உடலழகைக் காட்டிலும், மனத்தின் அழகைத்தான் நான் அதிகமாக விரும்பினேன். அந்த மன அழகே பொய்யாய்ப் போன பின் நான் அவளை நினைத்துத்தான் என்ன பயன்?' என்று கழிவிரக்க ஞாபகமும் அவனுக்கு உண்டாயிற்று. அவளை இப்போது நம்பிக்கைத் துரோகியாகப் புரிந்து கொண்டு விட்டான் அவன். ஒரு காலத்தில் அவன் அவளுடைய உயிரைக் காப்பாற்றினான்; அவளோ தன்னுடைய நம்பிக்கையைக் கூடக் காப்பாற்றாமல் துரோகம் செய்து விட்டாளென்று இன்று அவனுக்குத் தெரிந்தது. இப்படித் தனக்குத்தானே குமுறும் மனக் குமுறல்களையெல்லாம் அடக்கிக் கொண்டு புறத்தே அமைதியாக இருப்பது போலவும் இயல்பாக இருப்பதுபோலவும் நடமாடிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. ஏமாற்றத்தையும் துரோகத்தையும் அருகருகே சந்திக்கும் போது அவற்றை விட்டு விலகி ஓடிவிட வேண்டும் போலத் தவிக்கும் இயற்கையான மனத் தவிப்புக்கு ஏற்றாற் போல வெளிநாட்டுப் பயணம் வந்து வாய்த்திருந்தது. தன்னுடைய உண்மைத் திறனையும் நேர்மை இலட்சியங்களையும் மதிக்கத் தெரியாத ஒரு கல்லூரி நிர்வாகத்தையும், சௌகரியமுள்ளவர்களுக்கு எப்படியாவது அடங்கி ஒடுங்கிப் பணிவதுதான் சொகுசான வாழ்க்கை என்று நினைக்கும் ஒரு தகப்பனையும், செய்த சத்தியத்தையும், சொல்லிய காதல் மொழிகளையும் மறந்து, பணத்துக்கும் பகட்டுக்கும் பயந்து கோழையாகிவிட்ட ஒரு காதலியையும் மறந்து, விலகி எங்காவது போய் விட வேண்டும் போல் அவனுடைய கால்கள் ஒவ்வொரு கணமும் துடித்துக் கொண்டுதான் இருந்தன. 'ஓர் ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாகச் செலுத்துகிற அன்பு வெற்றி பெறுகிறதா அல்லது தோற்றுப் போகிறதா என்பதைப் பொறுத்து உலகத்தில் பல காவியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தக் காவியங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து இருவரில் யாரோ ஒருவருடைய அழுகைக் குரல் தான் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது' என்று முன்பு ஒரு நாள் தான் அவளிடம் கூறியது இப்போது அவனுக்கு நினைவு வந்தது. அந்த அழுகுரல் வெளிப்படாத அழுகுரலாகத் தன் மனத்தின் மோனமான துக்கமாய் வந்து நிறைந்து விட்டதை இன்று அவன் உணர்ந்தான். இதே வேளையில் பேதை மோகினியோ பாரதி தன்னிடமிருந்து வாங்கிப் பதிவுத் தபாலில் மதுரைக்கு அனுப்பிய கடிதம் கிடைத்து அதைப் படித்ததனால் தன் தெய்வத்தின் மனத்தில் தன்னைப் பற்றி ஏற்பட்டிருந்த சந்தேகங்கள் தீர்ந்திருக்கும் என்று நம்பத் தொடங்கியிருந்தாள். ஜமீந்தாரோ அவள் மனம் வெறுக்கிற காரியங்களை ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்கியிருந்தார். புதுப்பித்துக் கட்டிய மல்லிகைப் பந்தல் ஜமீன் மாளிகையைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று ஒரு நாள் சாயங்காலம் பாரதியையும், மோகினியையும் காரில் அழைத்துக் கொண்டு போனார். பாரதி கூட வருகிறாள் என்ற நம்பிக்கையில் மோகினி மறுக்காமல் புறப்பட்டிருந்தாள். அந்தக் கட்டிடத்தைச் சுற்றிக் காட்டும் போது, "பாரதீ! இன்னும் கொஞ்ச நாளில் நாங்கள் எல்லாரும் இங்கே வந்து விடுவோம். அப்புறம் மல்லிகைப் பந்தல் கல்லூரி நிர்வாகியின் அலுவலகமும் - பிரபல நடனராணி மோகினியின் பங்களாவும் - மஞ்சள்பட்டி ஜமீன் அரண்மனையும் - எல்லாம் இதுதான்!" என்று ஜமீந்தார் சிரித்தபடி கூறிய வேளையில் மோகினி தீயை மிதித்தவள் போல் திகைத்தாள். ஜமீந்தாரின் நினைவுகளும், எதிர்கால நோக்கமும் எப்படி எப்படி ஓடுகின்றன என்பதை எண்ணிய போது அவளுக்குப் பாதாதிகேசபரியந்தம் நடுங்கியது. பாரதியோ "கவலைப்படாதீர்கள் அக்கா! என் உடம்பில் உயிர் உள்ளவரை நான் உங்களைத் தனியாகவோ, நிராதரவாகவோ விட்டுவிட மாட்டேன். யார் என்ன வேண்டுமானாலும் கனவு காணட்டும். நீங்கள் தைரியமாக இருந்தால் போதும்" என்று தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள். கணக்குப்பிள்ளைக் கிழவரோடு காரில் மஞ்சள்பட்டி, மதுரை எல்லாம் போய் அந்தக் கிழவரை மதுரையிலேயே விட்டுவிட்டுத் திரும்பியிருந்த கண்ணாயிரம் திடீரென்று ஒருநாள் மாலை வைரமும், தங்கமுமாக நகைப்பெட்டிகளைக் கொண்டு வந்து மோகினியிடம் காண்பித்து, "இதெல்லாம் உனக்குப் பிடிச்சிருக்கான்னு ஜமீந்தார் கேட்கச் சொன்னார்" என்று வினவிய போது "எனக்கு நீங்க செய்யறது எதுவுமே பிடிக்கவில்லை" என்று அழுதுகொண்டே உள்ளே எழுந்து சென்றுவிட்டாள் அவள். தன்னை ஏமாற்றிவிட்டு அங்கு ஏதோ மர்மமாக ஏற்பாடுகள் நடப்பதைக் கண்டு மோகினி பதறினாள். ஆனால் பாரதி மட்டும் துணிவோடு தைரியமாக இருந்தாள். ஜமீந்தாரும் மோகினியும் சேர்ந்து எடுத்துக் கொண்டாற் போல் தந்திரமாகச் செய்து மாட்டியிருந்த அந்தப் போலிப் படத்தை அவளே துணிந்து கழற்றி எறிந்த போது கண்ணாயிரம் வந்து ஏதோ இரைந்தார். "மிஸ்டர் கண்ணாயிரம்! இது யாருடைய வீடு தெரியுமா? அதிகம் பேசினீரோ உமக்கு நடக்கிற மரியாதை வேற..." என்று பாரதி ஒரு அதட்டு அதட்டியதும் வாலைச் சுருட்டிக் கொண்டு பேசாமல் போய்ச் சேர்ந்தார் கண்ணாயிரம். டில்லியில் இண்டர்வ்யூ முடிந்து, மதுரை வந்து ஓரிரு நாள் தங்கிவிட்டுச் சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிய சில தினங்களிலேயே 'அவர் வெளிநாட்டு சர்வகலா சாலைக்கு இரண்டு வருட ஒப்பந்தத்தோடு மொழியியல் துறை ஆராய்ச்சிக்காகப் போனாலும் போகலாம்' என்ற செய்தி பராபரியாகப் பாரதியின் காதிலும் விழுந்தது. வேண்டுமென்றே இதை அவள் மோகினியிடம் சொல்லவில்லை. ஏற்கெனவே மனம் உடைந்து போயிருக்கிறவள் இதைக் கேட்டு இன்னும் மனம் உடைந்து போவாள் என்ற தயக்கத்தோடு தான் மோகினியிடம் இதைச் சொல்லாமல் இருந்துவிட்டாள் பாரதி. தான் மகேசுவரி தங்கரத்தினத்திடம் கொடுத்துப் பதிவுத் தபாலில் மதுரைக்கு அனுப்பிய மோகினியின் கடிதம் சத்தியமூர்த்திக்குக் கிடைத்ததா இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியாமல் மனம் குழம்பியிருந்தாள் அவள். 'அந்தக் கடிதம் அவர் கைக்குக் கிடைத்திருந்தால் மோகினியைப் பார்ப்பதற்கு இங்கே வந்திருக்க வேண்டும். அவரோ வந்து இரண்டு மூன்று நாட்களாகியும் இன்று அவரை இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. இந்தப் பெண்ணோ, அவரை நினைத்து நினைத்து உருகி ஓடாகப் போய்க் கொண்டிருக்கிறாள். இவளுடைய மனம் புரியாமல் ஜமீந்தாரும், கண்ணாயிரமும், பங்களாவையும், வைர நகைகளையும், பட்டுப் புடவைகளையும் இவளிடம் காண்பித்துக் கொண்டு திரிகிறார்கள். என்ன பாவம் இது?' என்று நினைத்து தவித்துக் கொண்டிருந்தாள் பாரதி. அவளுடைய நினைப்பிலும் செயலிலும் இப்போது மோகினியின் மேல் சிறிதும் பொறாமை இல்லை. எல்லையற்ற பெருந்தன்மையோடு மோகினியையும் சத்தியமூர்த்தியையும் மதித்து அவர்களைப் போன்றவர்கள் ஒன்று சேர முடியாத சமுதாய வாழ்வில் அவர்களை எப்படியாவது ஒன்று சேர்த்துவிட்டு அதற்காக மகிழ்வது மட்டுமே இப்போது அவளுடைய நோக்கமாக இருந்தது. சத்தியமூர்த்தியின் பாதங்கள் இன்னும் அவளுடைய நினைவில் இருந்தன. அவற்றைப் பாவனையினால் அவளும் தொழுதாள். ஆனால் மோகினியோடு போட்டி போட்டு அவற்றை ஆண்டு மகிழ முடியாமல் போனதற்காகக் கவலைப்படாது விட்டுக் கொடுக்கிற பெருந்தன்மை அவளுடைய குடும்பச் சொத்து. அப்பா பல சமயங்களில் பொது காரியங்களுக்காகப் பணத்தையும் செல்வாக்கையும் செலவழித்து வாழ்வில் பெருந்தன்மையாக நடந்திருக்கிறார். மகளோ இப்போதுதான் ஆசைப்பட்ட விருப்பத்தையும் அந்த விருப்பத்துக்கு அப்பால் காத்துக் கிடக்கும் வாழ்வையுமே இன்னொருத்திக்குப் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துவிட்டு அவளுக்கு உதவியாகவும், காவலாகவும் வாழ்வது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தாள். "மேற்கு ஜெர்மனியிலுள்ள ஹிடல்பர்க் பல்கலைக் கழகத்திலும் மற்றும் சில ஜெர்மானியப் பல்கலைக் கழகங்களிலுமாக மொழியியல் ஆராய்ச்சித் துறையில் பணிபுரிவதற்காகச் சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாராம். இன்னும் பத்துப் பதினைந்து நாளில் அவர் பம்பாயிலிருந்து புறப்பட வேண்டுமாம். நாளை அல்லது நாளன்றைக்கு இங்கே நம் கல்லூரியில் அவர் தம்முடைய ராஜினாமாவைக் கொடுத்து விடுவாரென்று தெரிகிறது. மாணவர்கள் ரொம்ப வருத்தத்தோடிருக்கிறார்கள். அவர் போவது உறுதிதானாம். வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று - மாணவ மாணவிகள் அவருக்கு ஒரு பிரிவுபசார விருந்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். அந்த விருந்தைக் கூட கல்லூரி எல்லைக்குள் வைத்து நடத்தினால் அவர் விரும்புவாரோ விரும்ப மாட்டாரோ என்றெண்ணி லேக்வியூ ஹோட்டலில் நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று மறுநாள் மகேசுவரி தங்கரத்தினம் உறுதியாக வந்து தெரிவித்த செய்தியைக் கேட்டு ஏதோ வாய்விட்டுச் சொல்லமுடியாத ஊமைத் துயரத்தை உணர்ந்து பாரதி தவித்தாள். மோகினிக்கு இது தெரிந்தால் அவள் எங்கே மூர்ச்சையாகி விழுந்து விடுவாளோ என்று பயந்தாள் பாரதி. படிப்படியாக மோகினியின் மனத்தை மாற்றி அவளைத் தன்னுடையவளாக்கிக் கொண்டு விடலாமென்ற ஆசையால், ஜமீந்தார் அவளோடு புதுப் பங்களாவில் குடியேறி வாழ்வதற்குத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார். பாரதி இவற்றை எல்லாம் மனத்தளவில் கடுமையாக வெறுத்தாலும் வெளிப்படையாக ஜமீந்தாரைக் கோபித்துக் கொள்ளவோ பகைத்துக் கொள்ளவோ கண்டிக்கவோ முடியாமல் இருந்தது. பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|