26

     துன்பங்களால் மனம் பொறுமையிழந்து தவிக்கும் சில சமயங்களில் நீதி நூல்களையும் அற நூல்களையும் வாழ்க்கையில் நன்றாக ஏமாறிய அப்பாவிகள் ஒன்று சேர்ந்து கொண்டு எழுதி வைத்து விட்டுப் போயிருப்பார்களோ என்று கூட நமக்குத் தோன்றி விடுகிறது.

     நண்பன் குமரப்பனுடைய அந்தக் கடிதம் அவனுடன் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசுவதைப் போல் சுவை நிரம்பியதாக இருந்தது. மனமும், உணர்ச்சிகளும் தளர்ந்து போய்க் கல்லூரியிலிருந்து அறைக்குத் திரும்பியிருந்த அந்த மாலை வேளையில் அப்படியே மதுரைக்குப் பறந்து போய் நண்பனோடு வைகையாற்று மணலில் நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்து பேச வேண்டும் போன்ற தவிப்பை அந்தக் கடிதம் உண்டாக்கியிருந்தது. வரி பிறழாமல் அழகிய கையெழுத்துக்களால் நேராக எழுதும் வழக்கம் குமரப்பனிடம் உண்டு. எப்போதாவது சத்தியமூர்த்தியும் மற்ற நண்பர்களும் அந்தக் கையெழுத்தைப் பற்றிப் புகழ்ந்தால், "எண்ணங்களில் கோணல் இல்லாதவர்களுக்குக் கையெழுத்தும் கோணல் இல்லாமல் தானே இருக்கும்?" என்று பெருமிதத்தோடு குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே பதில் சொல்வான் குமரப்பன். அவனுடைய கர்வத்தில் கூட ஒரு நியாயம் இருக்கும். தன்னிடம் இருக்கிற திறமையை மற்றவர்கள் புகழ்ந்தால் மட்டுமே இப்படிக் குறும்புத்தனமாகவோ, நகைச்சுவையாகவோ மறுமொழி கூறுவான். இல்லாத திறமைக்காக யாராவது பொய்யாய்ப் புகழத் தொடங்கினாலோ அதற்குக் கிடைக்கிற பதில் சூடாயிருக்கும். குமரப்பனைப் போல் பொருளாழமும், குத்தலும், குறும்பும், நகைச்சுவையுமாக உரையாடும் துணிவைக் கூடப் பிறரிடம் காண்பது அருமையாக இருக்கும்.

     அந்தச் சாயங்கால வேளையில் எந்த விதமான வேகமும் பரபரப்புமில்லாமல், வாழ்க்கையே மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிற மல்லிகைப் பந்தலைப் போன்ற ஒரு மலைநாட்டு நகரத்தின் மாடி வராந்தாவில் குமரப்பனின் கடிதத்தோடு உட்கார்ந்து அவனைப் பற்றிச் சிந்திப்பதே சுறுசுறுப்பையும் துணிவையும் தருகிற அநுபவமாக இருந்தது. குத்துவிளக்கில் பிரசுரம் செய்வதற்காகக் கண்ணாயிரத்தோடும், உதவியாசிரியரோடும், மோகினியைப் பேட்டி காணச் சென்றதைப் பற்றியும், அப்போது மோகினியின் வீட்டில் நிகழ்ந்தவற்றைப் பற்றியும் அந்தக் கடிதத்தில் சத்தியமூர்த்திக்கு எழுதியிருந்தான் குமரப்பன். அந்தக் கடிதத்தில் மோகினியைப் பற்றி மிகவும் பெருமையாக எழுதியிருந்தான். குத்துவிளக்கில் வெளியிடுவதற்காக, தான் எடுத்த மோகினியின் உருவப்படங்கள் இரண்டிலும் ஓரோர் பிரதி கடிதத்தோடு இணைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தான். அந்தக் கடிதத்தை மற்றொரு முறையும் படிக்கத் தோன்றியது சத்தியமூர்த்திக்கு.

     "...சித்திரா பௌர்ணமியன்று இரவு வைகையாற்று மணலில் நீயும் நானும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது நீ கூறியிருந்த ஒரு வாக்கியத்தை மோகினியைப் பேட்டி காண்பதற்காகச் சென்றிருந்த தினத்தில் மறுபடியும் நினைத்தேனடா சத்தியம்! 'மோகினியைப் போன்றவர்களின் துன்பத்துக்காக யாரும் இயக்கம் நடத்தமாட்டார்கள். அவர்கள் இப்படியே இந்தக் கவலைகளோடு வெந்து அழிய வேண்டியதுதான்' என்று நீ அன்று கூறிய போது நான் உன்னை மறுத்துப் பேசினேன். இப்போது நேரில் போய்ப் பார்த்துவிட்டு வந்த பின்பு எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இந்த மாதிரி வீடுகளில் ஏதோ ஒரு கலையையும் யாரோ பல மனிதர்களையும் நம்பி வாழ்கிற சராசரியான பெண்களைப் போல் மோகினியும் இருந்து விட்டால் வம்பில்லை. அவளால் அப்படி இருக்க முடியாது. நரகத்தின் நடுவே தன் ஒருத்தியினுடைய நினைப்பினாலும் செயல்களாலுமே சொர்க்கத்தைப் படைத்துக் கொண்டு வாழ முயல்கிறாள் அவள். மோகினியைப் பேட்டி காண்பது என்ற பெயரில் கண்ணாயிரமும் முத்தழகம்மாளும் வேறு ஏதேதோ காரியங்களைச் சாதித்துக் கொள்ள முயன்றார்கள். அத்தனை அடக்குமுறைக்கு நடுவிலும் அந்தப் பெண்ணிடம் ஓரளவு தன்னம்பிக்கையும், தைரியமும், மீதமிருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுப் போனேனடா, சத்தியம்! 'உங்களுடைய ஆண்டாள் நடனத்தை நீங்களே மனம் விரும்பி, உணர்ச்சி மயமாகவும் பரிபூரணமாகவும் ஆடிய தினத்தைப் பற்றிய அநுபவத்தை நீங்கள் 'குத்துவிளக்கு' வாசகர்களுடன் பங்கிட்டுக் கொண்டு கூறமுடியுமா?' என்றாற் போல் பேட்டியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 'மஞ்சள்பட்டி சமஸ்தானத்தில் நவராத்திரியின் போது ஜமீந்தார் முன்னிலையில் ஆட நேர்ந்த சமயத்தில் தான் இவள் பரிபூரணமாக உணர்ந்து ஆடினாள்' என்று கண்ணாயிரமும் முத்தழகம்மாளும் இந்தக் கேள்விக்குத் தாங்களாகவே முந்திக் கொண்டு பதில் சொன்னார்கள். ஆனால் மோகினி இந்தப் பதிலை மறுத்து விட்டு, 'சித்திரா பௌர்ணமியன்று தமுக்கம் பொருட்காட்சியில் ஆடியபோது தான் நான் என்னை மறந்து இலயிப்போடு ஆண்டாளாகவே மாறி ஆடினேன். அதைப் போல் வேறெந்த தினத்திலும் பெருமிதமாக நான் ஆடியதில்லை' எனப் பதில் கூறினாள். இந்தப் பதில் அவளுடைய துணிவை நான் புரிந்து கொள்ளத் துணை செய்தது. கண்ணாயிரமும் முத்தழகம்மாளும் அவளைப் படுத்திய பாட்டில் பாதிப் பேட்டி நடந்து கொண்டிருந்த போதே அவள் அழுகையை அடக்க முடியாமல் தவித்ததை என் கண்களாலேயே பார்த்தேன். பேட்டி முடிந்ததும் அவள் அழுது கொண்டே எழுந்திருந்து மாடிக்குப் போனாள். இந்தக் கடிதத்தோடு நான் உனக்கு அனுப்பியிருக்கிற படங்களில் சிரித்துக் கொண்டிருக்கிற மோகினியைப் பார்த்தால் இதே படங்களைப் பிடித்து முடித்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் கண்கலங்கி அழுதிருக்க முடியும் என்பதைக் கூட நீ கற்பனை செய்ய முடியாது. ஆனால் வாய்விட்டுக் கதறியோ, அல்லது வாய்விட்டுக் கதற முடியாத மௌனத்துடனோ, அவள் சதா காலமும் எதற்காகவோ அழுது கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உண்மை. அவளுடைய முகத்தையும் கண்களையும் மிக அருகில் பார்க்கும் போது இரவிவர்மா வரைந்திருக்கிற கலைமகளின் தெய்வீகத் திருவுருவம் நினைவு வருகிறதடா சத்தியம். படத்தில் சிரித்துக் கொண்டிருப்பது போல் அவள் எப்போதாவது தப்பித் தவறிச் சிரித்தால் கூட அந்தச் சிரிப்பில் 'இலட்சுமிகரம்' நிறைந்திருக்கிறது.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.