37
எப்போது பார்த்தாலும் பிறருக்கு உபதேசம் செய்து கொண்டே திரிய வேண்டும் என்ற துடிதுடிப்பு எவர்களிடம் குறைவாயிருக்கிறதோ அவர்கள் தான் உண்மையில் உபதேசம் செய்வதற்கே யோக்கியதை உள்ளவர்கள். கண்ணாயிரம் கூடத்து ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டு சிகரெட் பற்ற வைத்துப் புகைக்கத் தொடங்கினார். மூன்றாம் மனிதரோடு கோபமாகவும் பரபரப்பாகவும் இரைந்து கொண்டே அப்பா உள்ளே நுழைந்ததைப் பார்த்ததும் பெண்கள் இருவரும் பல்லாங்குழியில் சோழிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு அவசரமாகக் கூடத்திலிருந்து உள்ளே போய் விட்டார்கள். 'ஊரிலிருந்து வந்திருக்கிற பிள்ளையை - வந்ததும் வராததுமாக இவர் எதற்காகக் கோபித்துக் கொள்கிறார்?' என்று அறிந்து கொள்ளும் ஆவலில் நிலைப்படியோரம் சாய்ந்தாற் போல் தளர்ந்து நின்ற அம்மாவும் கண்ணாயிரம் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து புகைக்கத் தொடங்கியதும் முகத்தைச் சுளித்துக் கொண்டு உள்ளே போய்விட்டாள். தந்தையின் கூப்பாடு நிற்காமல் தொடர்ந்தது. அவர் தம் மகனைக் கண்டபடி பேசி இரைகின்ற காட்சியைக் கண்ணெதிரே பார்த்து இரசிக்கின்றவரைப் போல் கண்ணாயிரம் திமிராகவும் அலட்சியமாகவும் சிகரெட் சாம்பலை உதறி உதறிப் புகையை உறிஞ்சி விட்டுக் கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி இன்னொருத்தருக்கு முன்னால் தந்தையை எதிர்த்துப் பேச நேர்கிற அநாகரிகத்தை விரும்பாமல் கையிலிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டுக் குனிந்த தலை நிமிராமல் மௌனமாக உட்கார்ந்திருந்தான். "என்னடா... லீவுக்கு வரமாட்டேன்னு சொன்னவன் திடீர்னு புறப்பட்டு வந்திருக்கியேன்னு பார்த்தேன். இதுக்குத்தான் புறப்பட்டு வந்தியா...? எல்லாம் கண்ணாயிரம் இப்போதுதான் எனக்குச் சொன்னார். மல்லிகைப் பந்தல் வேலைக்காக இண்டர்வ்யூவுக்கு அலைந்துவிட்டுத் திரும்பி வந்த போதே நீ நாட்டியக்காரப் பெண்ணோடு தான் இரயிலிலிருந்து இறங்கினாயாம். இந்தப் பழக்கம் எல்லாம் கொஞ்சம் கூட நல்லதில்லே. வீணாக புத்திக் கெட்டுப் போய் அலையாதே. ஊரிலிருந்து வந்தவன் வீட்டு வாசலைக் கூட எட்டிப் பார்க்காமல் நேரே ஆஸ்பத்திரிக்கு ஓடிப்போய் அவளைப் பார்த்து உருகணும்னா உனக்கு எவ்வளவு புத்தித் தடுமாறி நீ மயங்கிப் போயிருக்கணும்? நீ இப்படி அந்த நாட்டியக்காரப் பெண்ணிடம் பைத்தியம் பிடிச்சுப் போய் அலையறது தெரிந்தால் ஊர் சிரிக்கும்... குடும்பப் பெயரைச் சீரழிச்சிப்பிடுவே போலிருக்கே...? 'உங்க பையனா இருக்கக் கொண்டு எச்சரிக்கை செய்யறேன். இன்னிக்குக் காலையிலே ஆஸ்பத்திரியிலே என்னை அவமானப்படுத்தினதுக்கு வேறொருத்தனாயிருந்தா இதுக்குள்ளே நடக்கிறதே வேறே... ஆளை... உருப்படியா பார்த்திருக்க மாட்டீங்க... கையைக் காலை முறிச்சுப் போட்டிருப்பேன்...' அப்படீன்னு ஜமீந்தார் சத்தம் போடறாரு" என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார் தந்தை. அதுவரை ஆத்திரப்படாமல் கேட்டுக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி, மெல்லத் தலை நிமிர்ந்து தந்தையை நோக்கி நிதானமாகப் பதில் சொல்லலானான். "ஜமீந்தாரை நாங்கள் ஏதோ அவமானப்படுத்தியதாக சொல்லுகிறீர்கள். ஆஸ்பத்திரியில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. ஜமீந்தார்தான் எங்களை அவமானப்படுத்தினார் என்று சொல்ல வேண்டும். அடிக்கடி நர்ஸைக் கூப்பிட்டு எங்களை வெளியே போகச் சொல்லிக் கொண்டிருந்தார்..." என்று அவன் கூறியதைக் கேட்டு மறுபடியும் சீறினார் தந்தை. "அவர் அப்படிச் சொல்லியிருந்தால்தான் அதில் என்ன தப்பு? யாரோ கூத்தாடறவ கார்லே அடிபட்டு ஆஸ்பத்திரியிலே விழுந்து கிடந்தா அங்கே உனக்கென்னடா வேலை?" அதுவரை சத்தியமூர்த்தியோடு நேரில் பேசாமல் உட்கார்ந்திருந்த கண்ணாயிரம் திடீரென்று அவன் பக்கமாகத் திரும்பிச் சிகரெட் புகையை ஊதிக்கொண்டே குத்தலாகக் கேட்டார்.
"மிஸ்டர் சத்தியமூர்த்தி! உங்களை ஒன்று கேட்கிறேன். நிறையத் தமிழ் நூல்கள் எல்லாம் படித்திருக்கிறீர்களே? எந்தத் தமிழ் நூலிலாவது தந்தையை எதிர்த்துப் பேசினால் புண்ணியம் உண்டு என்று சொல்லியிருக்கிறதா? அப்படிச் சொல்லியிருந்தால் இப்போது பேசியதைப் போல் இன்னும் தாராளமாக எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் உங்களுடைய தந்தையை எதிர்த்துப் பேசலாம்" - கண்ணாயிரத்தின் இந்தப் பேச்சைக் கேட்டுச் சத்தியமூர்த்திக்கு அடக்க இயலாத சினம் மூண்டு விட்டது.
"மிஸ்டர் கண்ணாயிரம்! துரதிர்ஷ்டவசமாக இப்போது நீங்கள் சொல்லியதையெல்லாம் மறுத்துப் பேச முடியாத நிலையிலிருக்கிறேன் நான். தங்கள் வாழ்நாள் முழுவதும் பாவங்களைத் தவிர வேறெதுவும் செய்தறியாதவர்கள் புண்ணியங்களைப் பற்றியும், தர்மங்களைப் பற்றியும் பிறரிடம் உபதேசம் செய்ய வரும்போதுதான் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. என் தந்தையும் நானும் உங்களிடம் பணத்துக்குக் கடன்பட்டிருக்கலாம். அப்படிக் கடன் பட்டிருப்பதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு எங்களுக்கே உபதேசம் செய்கிற தைரியம் உங்களுக்கு வந்துவிடக் கூடாது. எப்போது பார்த்தாலும் பிறருக்கு உபதேசம் செய்து கொண்டே திரிய வேண்டும் என்ற துடிதுடிப்பு எவர்களிடம் குறைவாயிருக்கிறதோ அவர்கள் தான் உண்மையில் உபதேசம் செய்வதற்கே யோக்கியதை உள்ளவர்கள். பணமும், அந்தஸ்தும், பதவியும் இருப்பதே உபதேசம் செய்வதற்குப் போதுமான தகுதிகள் என்று உங்களைப் போலவே பலர் இன்றைய சமூகத்தில் தங்களுடைய தகுதியைப் பற்றிப் பிழையான நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று சத்தியமூர்த்தி கண்ணாயிரத்தைச் சாடிக் கொண்டிருந்த போது அவன் தந்தை குறுக்கிட்டார். "டேய்! பேசறதை நிறுத்து. எனக்குக் கெட்ட கோபம் வரும். கண்ணாயிரம் என்னோட நான் கூப்பிட்டதனாலே தான் இந்த வீட்டுக்குள்ளார வந்திருக்காரு... அவரை மரியாதைக் குறைவாகப் பேசினியோ... என்னாலே பொறுத்துக்க முடியாது. உன்னைச் சொல்றதிலே குத்தமில்லையடா... எல்லாம் நீ பழகற ஆட்களாலே வந்த பேச்சு... அந்தக் குமரப்பனோட தானே நீ நெருங்கிப் பழகறே...? அவனைப் போலவே நீயும் கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை இல்லாமப் பேசப் பழகிக்கிறே போலிருக்குது?" என்ற சீற்றத்தோடு தந்தை பேசத் தொடங்கியதும் உள்ளேயிருந்து தங்கை ஆண்டாள் ஓடி வந்து "அண்ணா! உன்னை அம்மா உள்ளே கூப்பிடுறாங்க" என்று சத்தியமூர்த்தியைக் கூப்பிட்டாள். 'கூடத்தில் தந்தைக்கும் தனக்கும் இடையே பேச்சு தடித்துச் சண்டை வளருவதைத் தடுப்பதற்காக அம்மா செய்த தந்திரமான ஏற்பாடு இது' என்பதைப் புரிந்து கொண்டவனாகச் சத்தியமூர்த்தி உட்புறம் எழுந்து சென்ற போது, அவன் சிந்தனையில் போராட்டங்கள் நிறைந்திருந்தன. கண்ணாயிரம் பாவ புண்ணியத்தைப் பற்றிப் பேசியதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவனுள்ளே குமுறியது ஓர் எண்ணம். மோகினியின் இதயத் தூய்மையையும் குணநலன்களையும் தெரிந்து கொள்ளாமல் சற்று முன் தந்தை அவளைப் பற்றிக் 'கூத்தாடுகிறவள்' என்று எடுத்தெறிந்து சொல்லியிருந்த வார்த்தை அவன் மனத்தைப் புண்படுத்தியிருந்தது. "மேளதாளமில்லாமல் சந்தனம் வெற்றிலைபாக்கு இல்லாமல் நடந்து முடிந்து விட்ட இந்தக் கல்யாணத்துக்கு உலகம் மரியாதை செய்யுமா?" என்று அவள் என்னைக் கேட்ட கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது. 'என் தந்தையே அந்த மரியாதையைச் செய்யத் தயாராயில்லை என்று எனக்குத் தெரிந்து விட்டது' என்பதை எண்ணிய போது சத்தியமூர்த்தியின் மனத்தில் நம்பிக்கை தளர்ந்தது. எந்த இலட்சியவாதியும், எத்தகைய தைரியசாலியும் சமூகத்தை எதிர்கொள்ளத் தயங்க வேண்டிய சில பிரச்சினைகள் உலகில் நிரந்தரமாக இருப்பதை அவன் உணர்ந்து கொண்டு மனத்தில் தயங்கினான். "ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக உன்னிடம் இந்த மனிதர் எதற்காக இப்படிச் சண்டை பிடிக்கிறார் சத்தியம்? யாரோ மூன்றாம் மனிதரையும் கூப்பிட்டு வைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே உன்னிடம் சண்டை பிடிக்கிறாரே?" என்று அம்மாவே அப்பாவைப் பற்றி அவனிடம் குறைபட்டுக் கொண்டாள். எந்தச் சண்டையைத் தவிர்ப்பதற்காக அம்மா அவனை உள்ளே கூப்பிட்டிருந்தாளோ அந்தச் சண்டை விரைவில் உள்ளேயும் அவனைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தது. "என்னடா, நான் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கிறேன். நீ பெண்டு செட்டியைப் போல உள்ளே போய் உட்கார்ந்து கொண்டு விட்டாய்?" என்று கேட்டுக் கொண்டே அப்பா உள்ளே வந்தார். கண்ணாயிரமும், ஜமீந்தாரும், அவரைச் சரியானபடி முறுக்கேற்றியிருக்கிறார்களென்று தெரிந்தது. "வயது வந்த பிள்ளையை வேற்று மனிதர்களுக்கு முன்னால் வைத்துக் கொண்டு இப்படிச் சண்டை பிடிக்கிறீர்களே? இது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா?" என்று அம்மா குறுக்கிட்டுக் கேட்டதைக் கூட அவர் இலட்சியம் செய்யவில்லை. அம்மாவின் பேச்சுக் காதில் விழுந்ததாகவே காண்பித்துக் கொள்ளவில்லை அவர். ஏறக்குறைய வீடு போர்க்களமாயிருந்த இந்த நேரத்தில் காலையில் சத்தியமூர்த்தியிடம் சொல்லிவிட்டுப் போயிருந்த குமரப்பன் திரும்பி வந்து சேர்ந்தான். கோபத்தில் தந்தை நண்பனிடம் போய் அவனை ஏதேனும் அநாகரிகமாகப் பேசி விடக்கூடாதே என்பதற்காகச் சத்தியமூர்த்தி முந்திக் கொண்டு நண்பனை வரவேற்க எழுந்து சென்றான். நல்லவேளையாகத் தந்தை அப்படி ஏதும் அநாகரிகமாக நடந்து கொள்ளவில்லை. வீடு தேடி வந்த குமரப்பனை வா என்று கூட ஒரு வார்த்தை சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டதைத் தவிர வேறு எந்த அவமானத்தையும் அவர் அப்போது அவனுக்குச் செய்யவில்லை. சத்தியமூர்த்தியின் தந்தையைப் பற்றிக் குமரப்பனுக்கு நன்றாகத் தெரியுமாதலால் அவன் அப்போது அவருடைய கனிவான வரவேற்பை எதிர்பார்க்கவும் இல்லை. சிரித்துக் கொண்டே உள்ளே போய் சத்தியமூர்த்தியின் அம்மாவையும், தங்கைகளையும் பார்த்துப் பேசினான் குமரப்பன். "இருந்து ஒரு வாய் காப்பி சாப்பிட்டு விட்டு போ" என்று சத்தியமூர்த்தியின் தாய் கூறிய வார்த்தைகளை மதித்துக் கூடத்து ஊஞ்சலில் கண்ணாயிரத்துக்குப் பக்கத்தில் போய் அவர் உட்கார்ந்திருந்தாற் போலவே கால்மேல் கால் போட்டுத் தானும் உட்கார்ந்து கொண்டான் குமரப்பன். சத்தியமூர்த்தியின் தந்தை கண்ணாயிரத்துக்குக் காப்பி கொடுத்துத் தடபுடலாக உபசாரம் செய்வதில் ஈடுபட்டிருந்தார். குமரப்பன் தன்னருகே வந்து கால்மேல் கால்போட்டு உட்கார்ந்ததை விரும்பாத கண்ணாயிரம் மெல்ல எழுந்திருந்து கூடத்தில் உலாவுவது போல் நடக்கலானார். அப்போது குமரப்பன் தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். ''அப்ஸ்டார்ட்கள்' (திடீரென்று பணக்காரராகிய அற்பர்கள்) எல்லாம் பிறர் தங்களை மதிக்க வேண்டும் என்று தவித்து மரியாதை பசி பிடித்து அலைவார்கள். உலகம் தங்களை மதிக்கிறதா, இல்லையா என்பதை அறிந்து கொள்வதிலே மற்றவர்களை விட இந்த அற்பர்களுக்கு ஆசையும் தாபமும் அதிகம்' என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டு சிரித்தான் குமரப்பன். "அடடா! இதென்ன எழுந்து விட்டீர்கள்? உட்காருங்கள் சார்! ஊஞ்சலில் உட்காரச் சிரமமாக இருக்கிறதென்றால் நாற்காலியைக் கொண்டு வந்து போடட்டுமா?" என்று கண்ணாயிரம் எழுந்து நிற்பதையும் தரையில் நடப்பதையும் பொறுக்க முடியாமல் பரிதாபப்பட்டுப் பயந்து வந்து நெகிழ்ந்து போய் நாற்காலியைத் தேடிக் கொண்டு வந்து போடுவதற்காகப் பதறி ஓடினார் சத்தியமூர்த்தியின் தந்தை. "பரவாயில்லை! நீங்கள் உங்கள் வீட்டு மாடியில் மராமத்து வேலை நடப்பதை எனக்குக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தீர்களே; இப்போது மாடிக்குப் போய்ப் பார்க்கலாமா?" என்று பேச்சை வேறு வழிக்கு மாற்றிச் சத்தியமூர்த்தியின் தந்தையையும் அழைத்துக் கோண்டு மாடிக்குப் போனார் கண்ணாயிரம். மாடியில் காரியம் ஒன்றுமில்லையானாலும் ஏதோ பேசுவதற்காகவே அவர்கள் இருவரும் தனியாகப் போகிறார்கள் என்று ஒருவாறு அநுமானிக்க முடிந்தது. அவர்கள் இருவரும் மாடிப்படியேறி மேலே போனதும் குமரப்பன் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பி, "என்னடா! பெரிய புயல் வீசி ஓய்ந்திருக்கிறார் போல் தோன்றுகிறதே" என்று சிரித்துக் கொண்டே கேட்டான். ஆனால் அப்போது சத்தியமூர்த்தியோ தன் நண்பனுடைய கேள்வியைக் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் சிந்தனையில் மூழ்கியிருந்தான். அவனுடைய இதயத்தில் மோகினி ஒரு பெரும் வினாவாக எழுந்து நின்றாள்! அவள் மேல் தான் கொண்டிருக்கும் அன்புக்கும் தன் மேல் அவள் கொண்டிருக்கிற பரிசுத்தமான காதலுக்கும் முதல் எதிர்ப்புத் தன் வீட்டிலிருந்தே புறப்பட்டுவிட்ட தென்பதை அவனால் மறக்க முடியவில்லை. காவியங்களிலும் இதிகாசங்களிலும் வருகிற காதல் அநுபவங்களைப் போற்றிக் கொண்டாடித் தொழுகின்ற இந்த உலகம் வாழ்க்கையில் கண்ணெதிரே ஒரு பெண்ணிடம் ஓர் ஆண் அதிக அநுதாபம் காண்பிப்பதைக் கூட அருவருப்பாகவும் விரும்பத் தகாததாகவும் நோக்குவதைத்தான் புரிந்து கொள்ள முடிந்தது. சில சமயங்களில் சில அபூர்வமான உன்னத உணர்வுகளும் கற்பனைகளும் மனிதர்களைக் களமாகக் கொண்டு பிறப்பதைப் போலவே அதற்கு எதிரான சில சாதாரண உணர்வுகளையும் மனிதர்களே தங்கள் களத்தில் உண்டாக்கி வளர்க்கிறார்கள் என்றும் நினைக்கத் தோன்றியது. பூக்கள் மலர்ந்து மணம் பரப்புகிற இதே மண்ணின் மேல் தான் நிறமும் மணமும் இல்லாத காளான் குடைகளும் பூக்கின்றன என்பதை அருவருப்போடு நினைத்து நம்பி ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டியிருந்தது. காதலைக் கற்பித்தவர்களும் மனிதர்கள்தான். பல சமயங்களில் அதை அவமதிக்கிறவர்களும் மனிதர்களாகவேதான் இருக்கிறார்கள். தன்னுடைய மன அரங்கில் நித்தியமாக ஆடிக் கொண்டிருக்கிற பரிசுத்தவதி ஒருத்தியைப் பற்றிக் 'கூத்தாடறவளிட்ட உனக்கென்னடா பரிவு?' என்று தன் தந்தையே தன்னிடம் கேட்க நேர்ந்துவிட்ட வேதனையை மறக்க முடியாமல் தவித்தான் சத்தியமூர்த்தி. சிறிது நேரத்தில் மாடியில் சுற்றிப் பார்க்கப் போயிருந்த கண்ணாயிரமும் தந்தையும் படியிறங்கிக் கீழே வந்ததும் வராததுமாக, "உன்னிடம் ஒரு விஷயம் பேசணும்! இப்படி வா" என்று தந்தை தன்னைத் தனியே அழைத்த போது போவதா வேண்டாமா என்று சற்றே தயங்கிய பின் தயக்கத்துடனேயே அவரோடு சென்றான் சத்தியமூர்த்தி. தந்தை அப்போது தனியே அழைத்துச் சென்று தன்னிடம் கூறியதைக் கேட்ட பின் அவனுக்கு அடக்க முடியாத சீற்றம் மூண்டது. "ஒரு போதும் என்னால் அப்படிச் செய்ய முடியாது..." என்று தன் தந்தையிடம் உறுதியாக மறுத்துக் கூறினான் அவன். மகனுடைய சீற்றத்தைக் கண்டு அப்போது தந்தையே மலைத்துப் போனார். மகன் தன்னை அத்தனை தீர்மானமாகவும் கடுமையாகவும் எதிர்ப்பது அதுவே முதல் தடவை என்பதைத் தயக்கத்தோடு நினைத்துப் பார்த்தார் அவர். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|