38

     ஏழைகள் புதிது புதிதாகக் கவலைப்பட்டுச் செலவுக்குப் பணம் தேடுகிறார்கள். பணக்காரர்களோ புதிது புதிதாக யோசித்துப் பணத்துக்குச் செலவு தேடுகிறார்கள்.

     "வீணாகப் பெரிய மனிதர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது. சாயங்காலம் நானும் உன் கூட வருகிறேன். மேற்கே கோச்சடைக்குப் போகிற வழியில் வையைக் கரையோரம் உள்ள ஜமீன் மாளிகையில் ஜமீந்தார் தனியாகத்தான் இருப்பார். போய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வந்து விடலாம். இனிமேல் நீ அந்த நாட்டியக்காரியைத் தேடிக் கொண்டு செல்லாதே. அதெல்லாம் பெரிய இடத்து விவகாரம். ஜமீந்தார் கோபத்துக்கு ஆளாகக் கூடாது. கண்ணாயிரமும் ஜமீந்தாரும் நினைத்தால் யாருக்கு என்ன கெடுதல் வேண்டுமானாலும் செய்ய முடியும். இந்தக் குத்துவிளக்குப் பத்திரிகையை ஜமீந்தார் விலைக்கு வாங்கறதுக்கு முன்னாலே ஒரு சமயம் இப்ப ஆஸ்பத்திரியிலே படுத்துக்கிட்டிருக்காளே, இந்த நாட்டியக்காரப் பெண்ணைப் பேட்டி கண்டு வருவதற்காக கண்ணாயிரம் குமரப்பனையும் இன்னொரு உதவியாசிரியரையும் அழைச்சிட்டுப் போயிருந்தாராம். அப்படிப் போயிருந்தப்போ கண்ணாயிரத்தையும் வச்சிக்கிட்டே அவரையும் ஜமீந்தாரையும் பற்றி இந்தக் குமரப்பன் ஏதோ குத்தலாகப் பேசினானாம். அந்தப் பகையை மனத்திலே வைத்திருந்து 'குத்துவிளக்கை' விலைக்கு வாங்கினதும் முதல் வேலையா அவனோட வேலைக்குச் சீட்டுக் கிழிச்சிருக்காங்க..." என்று தந்தை கூறியவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி இறுதியாக அவர் சொல்லிய செய்தியால் பொறுமையிழந்தான்.

     "ஜமீந்தாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று நீங்கள் சொல்வதை எப்படி ஒப்புக் கொள்ள முடியாதோ அப்படியே குமரப்பனைப் பற்றி நீங்கள் சொல்கிற பொய்யையும் என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை அப்பா! குமரப்பன் உண்மையும் ஒழுக்கமும் இல்லாதவர்கள் எவ்வளவு பெரிய பணம் பதவி உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களைத் துச்சமாக நினைக்கிறவன். அவனுடைய பார்வையிலும் நினைப்பிலும் கண்ணாயிரமும் ஜமீந்தாரும் வெறும் நாய்கள்!... 'காலுக்கு உதவாத செருப்பைக் கழற்றி எறி' என்பது போல் குமரப்பனே குத்துவிளக்கு வேலையைத் தனக்கு வேண்டாமென்று விட்டிருக்கிறான். ஜமீந்தாரும் கண்ணாயிரமும் அந்த உண்மையைத் திரித்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்; நீங்களும் அதை அப்படியே நம்புவதைப் பார்த்துத் தான் பரிதாபமாயிருக்கிறது..."

     சத்தியமூர்த்தி இப்படித் தன் தந்தையை எதிர்த்துப் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டுக் குமுறும் மனநிலையோடு இருந்தான். தந்தையும் அவனும் இப்படித் தனியே பிரிந்து வந்து வீட்டின் பின் கட்டில் விவாதித்துக் கொண்டிருந்த போது கூடத்து ஊஞ்சலில் குமரப்பன் தனியே உட்கார்ந்திருந்தான். கண்ணாயிரம் சிகரெட் பிடித்தவாறு குறுக்கும் நெடுக்கும் உலாவிக் கொண்டிருந்தார். நண்பனைக் கூடத்தில் தனியே விட்டுவிட்டு உள்ளே தந்தையிடம் அதிக நேரம் விவாதித்துக் கொண்டிருப்பதைச் சத்தியமூர்த்தி விரும்பவில்லை. அப்போது தந்தைக்கு அவன் கூறிய பதில் கண்டிப்பானதாயிருந்தது.

     "ஜமீந்தாரிடம் அடிபணிவதோ, மன்னிப்புக் கேட்பதோ முடியாத காரியம். மனிதர்களுக்கும் அவர்களுடைய செல்வாக்குக்கும் பயப்பட்டு நடுங்கிய காலம் மலையேறி விட்டது. நியாயத்துக்கும் உண்மைக்குமே பயப்பட வேண்டிய புதிய சுதந்திரத் தலைமுறையில் நாம் வாழ்கிறோம். ஜமீந்தாரையும் கண்ணாயிரத்தையும் நீங்கள் பெரிய மனிதர்களாக நினைக்கிறீர்கள் அப்பா! நானும், குமரப்பனும் எங்களைப் போல் புதிய சிந்தனை வளத்தை ஒப்புக் கொள்கிற இளைஞர்களும் அவர்களைச் சமுதாய விரோதிகளாக நினைக்கிறோம்!"

     "இப்படிப் பேசினால் உருப்படாமல் தான் போகப் போகிறாய்; எக்கேடும் கெட்டுப் போ... ஆனால் ஒன்று... மறுபடியும் எப்போதாவது அந்த நாட்டியக்காரியைத் தேடிக் கொண்டு போகாதே... அவர்கள் பரம்பரை பரம்பரையா ஜமீன் குடும்பத்துக்குத்தான் பழக்கம். குடியிருக்கிற வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் ஜமீந்தார் செலவிலே அநுபவிக்கிறவங்க வேறே எப்படியிருக்க முடியும்? ஜமீந்தார் சின்ன வயசிலே தாரமிழந்தவரு... அந்த இடத்திலே இந்தப் பெண்ணை வைத்துக் கொள்ளலாம் என்கிற அபிப்பிராயம் அவருக்கு இருக்கும் போலத் தோன்றுகிறது. முத்தழகம்மா மகளும் மகா சௌந்தரியவதியா இருக்கா. அதனாலே ஜமீந்தார் முழு மனத்தையும் அவளிடம் பறிகொடுத்திருக்கார். அந்தப் பெண்ணை வைத்துச் சினிமாப் படம் கூடப் பிடிக்கப் போகிறாராம். அப்புறம் இன்னும் எங்கேயோ பெரிய 'நாட்டிய கலாகேந்திரம்'னு பரத நாட்டியத்தைப் பரப்புவதற்கு ஒரு கலாசாலை வேறே வைக்கப் போகிறாராம். இதெல்லாம் உன்னை எச்சரித்து வைப்பதற்காக கண்ணாயிரம் எனக்குச் சொன்னார். பேரைக் கெடுத்துக் கொள்ளாதே! படித்தவனாக இலட்சணமாக விலகி இரு. ஜமீந்தார் பகை நமக்கு வேண்டாம்..."

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.