46
கெட்டவர்களை வெளிப்படையாக பகைத்துக் கொள்வதும், நல்லவர்களை வெளிப்படையாக ஆதரிப்பதும் கூடச் சில சமயங்களில் அப்படிச் செய்கிறவனுக்குத் தொல்லைகளை உண்டாக்கும். மறுதினம் மாலையில் கல்லூரி அலுவலகத்தில் வைத்தே நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகக் குழுவினர் கல்லூரி நிர்வாகத்தின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்ததும், புதிய தலைவர் - ஆசிரியர்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு துறை ஆசிரியர்களும் புதிய தலைவருக்குத் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கல்லூரி முதல்வர் அன்று மாலையில் வகுப்புக்கள் முடிந்த பின்பும் ஆசிரியர்களை வீட்டுக்குப் போக விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார். கல்லூரி நிர்வாகக் குழுவின் கூட்டம் மிகவும் சுருக்கமாக அரைமணி நேரத்தில் முடிந்துவிட்டது. ஏற்கெனவே பலமான வதந்தி இருந்தது போலவும், பலர் எதிர்பார்த்துப் பேசிக் கொண்டது போலவும் மஞ்சள்பட்டி ஜமீந்தாரே கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். எதிர்பார்த்திருந்த உண்மைதான் அது! ஆனால், அதே உண்மை நிச்சயமாகவும் உறுதியாகவும் ஆகிவிட்ட போது சத்தியமூர்த்திக்குக் கவலையையும் கசப்பையும் உண்டாக்கிவிட்டது. மறைந்தவருக்கு இரங்கற் கூட்டம் நடந்து ஒரு வாரம் கூடக் கழியவில்லை! அதற்குள் புதிதாக வந்துவிட்ட தலைவருக்குப் பாராட்டுக் கூட்டமும் மாலையும் விருந்தும் தயாராகி விட்டன. அப்பப்பா! இந்த உலகத்துக்குத்தான் எத்தனை அவசரம்? வருத்தப்பட்டு இரங்குவதிலும் அவசரம்தான்! சந்தோஷப்பட்டுக் கொண்டாடுவதிலும் கூட அவசரம் தான்! வருத்தத்தையும் பரபரப்பாகக் கொண்டாடி முடித்து விடுகிறார்கள். சந்தோஷத்தையும் பரபரப்பாகக் கொண்டாடி முடித்து விடுகிறார்கள். தேநீர் விருந்து முடிந்ததும் முதலில் பிரின்ஸிபல், ஜமீந்தார் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராக வந்ததைப் பாராட்டிப் பேசி, அவருக்கு மிகப் பெரிய மாலை சூட்டினார். அடுத்து இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட் சார்பில் மாலை சூட்டினார்கள். அடுத்து வார்டன் ஆகிய துணை முதல்வர் மாலை சூட்டினார். இதற்கும் அடுத்தபடியாகத் தமிழ்த்துறையின் சார்பில் காசிலிங்கனார் மாலை சூட்ட வேண்டும். காசிலிங்கனார் அன்று லீவு. கல்லூரிக்கே வரவில்லை. "மிஸ்டர் சத்தியமூர்த்தி! யூ கம்... ஆன்..." என்று சத்தியமூர்த்தியைக் கூப்பிட்டுவிட்டு, அவன் இருந்த பக்கமாகத் திரும்பினார் முதல்வர். அதற்கு இரண்டு நிமிஷங்களுக்கு முன்பு வரை அங்கே உட்கார்ந்திருந்த சத்தியமூர்த்தியை இப்போது திடீரென்று காணவில்லை. அவன் உட்கார்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. "ஜஸ்ட் நௌ ஹி ஹாஸ் கான் அவுட் ஸார்!" என்று பக்கத்திலிருந்த பொருளாதார விரிவுரையாளர் எழுந்திருந்து முதல்வருக்குப் பதில் கூறினார். முதல்வரின் முகத்தில் ஈயாடவில்லை. ஜமீந்தாரோ அப்போதுதான் நிதானமாக மேஜை மேல் இருந்த ரோஜாப்பூ ஒன்றை எடுத்து அதன் இதழ்களை விரல்களிடையே கசக்கியபடி மெதுவாகப் புன்முறுவல் பூக்க முயன்று கொண்டிருந்தார். முகம் தான் புன்முறுவல் பூக்க முயன்று கொண்டிருந்ததே ஒழியக் கைவிரல்கள் ரோஜாப்பூ மாலைகளின் பூவிதழ்களை அழுத்திக் கசக்கிக் கொண்டிருந்தன.
தேநீர் விருந்துக்குப் பின் நிகழ்ந்த பாராட்டுக் கூட்டத்திலே மாலை போட வேண்டிய நேரத்தில் ஜமீந்தாரை வேண்டுமென்றே அவமானப்படுத்தினாற் போல் சத்தியமூர்த்தி வெளியே எழுந்திருந்து போய்விட்டது தெரிந்து கல்லூரி முதல்வரின் மனத்தில் பெருங்கோபம் மூண்டிருந்தது. "இந்தத் தமிழ் டிபார்ட்மெண்ட் ஆட்களே இப்படித்தான்! இவர்களோடு எப்பவும் பெரிய தலைவலிதான்" என்று மேடையில் பக்கத்தில் அமர்ந்திருந்த ஜமீந்தாருக்கும் கேட்கும் குரலில் முணுமுணுத்தார் முதல்வர். ஜமீந்தார் முகத்தில் புன்முறுவலோடு அமர்ந்திருந்தாலும் அவர் உள்ளம் சத்தியமூர்த்தியை நினைத்து எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தது. மதுரை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சத்தியமூர்த்தியையும், குமரப்பனையும், முதன் முறையாகத் தான் சந்திக்க நேர்ந்த சம்பவம், மோகினி விஷயமாகச் சத்தியமூர்த்தியின் மேல் தனக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, இப்போது தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் வந்து விட்ட கல்லூரியில் தனக்கே மாலை போட விரும்பாதவனைப் போல் அவன் நடுக்கூட்டத்தில் எழுந்து வெளியே சென்றுவிட்ட அவமானம், எல்லாவற்றையும் சேர்த்து நினைத்து ஜமீந்தாரின் உள்ளம் கனன்று கொதித்தது.
தேநீர் விருந்தும், பாராட்டுக் கூட்டமும் முடிந்து, ஜமீந்தார் வெளியேறிய போது அவருடைய கார் நின்று கொண்டிருந்த இடம் வரை அவரோடு பக்கத்துக்கு ஒருவராக நடந்து சென்ற கல்லூரி முதல்வரும் துணை முதல்வரும் அவருடைய கோபத்துக்குத் தூபம் போட்டு வளர்த்துக் கொண்டு போனார்கள். ஜமீந்தார் காரில் ஏறிய பின்போ அதே காரியத்தை உடன் இருந்த கண்ணாயிரம் செய்யத் தொடங்கினார். ஜமீந்தார் கோபம் கணத்துக்குக் கணம் சூடேறி உள் நெருப்பாய்க் கனலத் தொடங்கியது. படிப்பில்லாத மனிதனால் தன்னை இன்னொருவன் அவமானப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்துக் கொள்ள மட்டும் முடியவே முடியாது. அதே சமயத்தில் கூட்டத்திலிருந்து பாதியிலே வெளியேறிச் சென்றிருந்த சத்தியமூர்த்தியோ ஏரிக்கரைப் பூங்காவில் தனிமையானதொரு மூலையில் உட்கார்ந்து, 'தான் செய்தது சரியா, சரியில்லையா?' என்ற சிந்தனைக் குழப்பங்களில் மூழ்கியிருந்தான். அந்தப் பாவ வடிவத்தைத் தன் கைகளால் மாலை சூட்டிக் கௌரவிக்கும்படி நேர்ந்து விடாமல் தப்பித்து வந்து விட்டதற்காக அவனுடைய ஒரு மனம் அவனைப் பாராட்டியது. 'பொது வாழ்வில் கெட்டவர்களும், நல்லவர்களும் கலந்து தான் இருப்பார்கள். இன்னும் நன்றாகச் சொல்லப் போனால் சில சமயங்களில் கெட்டவர்கள் தான் அதிகம் இருப்பதாக ஒரு பிரமை கூட ஏற்படும். கெட்டவர்களை வெளிப்படையாகப் பகைத்துக் கொள்ளுவதும், நல்லவர்களை வெளிப்படையாக ஆதரிப்பதும் கூடச் சில சமயங்களில் அப்படிச் செய்கிறவனுக்குத் தொல்லைகளை உண்டாக்கும். கெட்டவர்களை நல்லவர்கள் தொழ நேரிடும் போது, போற்றிப் பணிந்து மாலை சூட்ட நேரிடும் போது கூட உலகியல் தெரிந்து அவற்றை முகம் சுளிக்காமல் செய்துதான் ஆகவேண்டியிருக்கிறது. ஜமீந்தாருக்கு மாலை சூட்ட நேர்ந்த சமயத்தில் கூடியிருந்த கூட்டத்தையும், சூழ்நிலையையும் உணர்ந்து மாலையைச் சூட்டிவிட்டு வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் நீ வெறுத்து வெளியேறி வந்த பிடிவாதம் - யதார்த்த வாழ்வில் உன்னைப் பலவிதங்களில் தொல்லைக்குள்ளாக்கப் போகிறது' என்று இன்னொரு மனம் அவனைப் பயமுறுத்திப் பார்த்தது. அகிம்சை என்ற பேரிலோ, சாந்தம் என்ற பேரிலோ, தீமையை அங்கீகரிக்கவோ, மன்னிக்கவோ, பொறுத்துக் கொள்ளவோ செய்வதை அவனால் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ள முடிவதில்லை. எருமை மாட்டின் முதுகில் மழை பெய்தாற் போல் தீமைகளையும் கொடுமைகளையும் உணரவோ, எதிர்க்கவோ தெம்பும் தைரியமும் இல்லாமல் பட்டும் படாமலும் வாழ்கிற பரவலான பெரும்பான்மை நாகரிகத்தைக் கடுமையாக வெறுக்கும் மனப்பான்மை அவனுள் உருவாகியிருந்தது. கடிவாளமிட்டுக் கண்கள் மறைக்கப் பெற்ற குதிரை ஓடுவது போல் ரூபாய் நோட்டுக்களால் கண்களை மறைத்துக் கொண்டு நல்லது கெட்டதைக் கவனியாமல் ஆசைச் சுமைகளைச் சுமந்து இழுத்து ஓடும் சராசரி மனிதர்களிலே தானும் ஒருவனாக இருந்துவிட அவனால் முடியாது. 'இந்த நூற்றாண்டில் வாழ்க்கையின் சித்தாந்தமே தனி. நிறைந்த படிப்பையும், பண்பையும் வைத்துக் கொண்டு பலர் திண்டாடும் போது சிறிதளவு சமயோசித புத்தியையும் சூழ்ச்சியையும் வைத்துக் கொண்டே சிலர் நன்றாக வாழ்ந்து விடுகிற காலம் இது! இந்தக் காலத்திலேயே சமயோசித புத்தி இல்லாமல் கூட்டத்தில் ஒருவரை விட்டுக் கொடுத்து வெளிப்படையாகப் பகைத்துக் கொண்டு வெளியே இருக்கிற உன்னைப் போன்றவர்கள் பலசாலிகளின் விரோதிகளாகின்றீர்களே?' என்று தன்னைப் பயமுறுத்தும் போலி மனப் பிராந்தியை எள்ளி நகையாடினான் அவன். நினைத்து நினைத்து வெறுத்தது கடைசியில் நிகழ்ச்சியாகவே நடந்துவிட்டது. ஜமீந்தாரே கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவர் என ஒருமனதாகத் தேர்ந்தெடுத்து விருந்து வைத்து மாலை சூட்டி அந்த வைபவத்தைக் கொண்டாடியும் விட்டார்கள். அந்தக் கசப்பான உண்மையைத் தேநீர் விருந்து வைத்து நிரூபித்தாகி விட்டது. "என்ன சார் இது? திடீரென்று இருந்தாற் போலிருந்து அப்படி எழுந்து போய்விட்டீர்கள்? பிரின்ஸிபலுக்கு உங்கள் மேல் சொல்ல முடியாத கோபம். கடைசியில் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துக் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவர் என்ற முறையில் ஜமீந்தார் பேசினார்" என்று சுந்தரேசன் விவரிக்கத் தொடங்கினார். "என்ன பேசினார் அவர்?" என்று வெறுப்புடனும், சற்றே அதைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடனும் வினவினான் சத்தியமூர்த்தி. சுந்தரேசன் சிரித்துக் கொண்டே இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னார்: "ஜமீந்தாரோ இல்லையோ? ஆள் சரியான முரட்டுப் பேர்வழி போலிருக்கிறது. ஆட்கள் கைகட்டி வாய் பொத்தி பயத்தோடு விலகி நிற்கிற மாதிரி பேசும் பாஷைகள் கூடப் பக்கத்தில் நெருங்க அஞ்சுகின்றன. ஆங்கிலம் அருகில் வருவதற்கே பயப்படுகிறது. தமிழ் கொஞ்சம் பக்கத்தில் வருகிறது. ஆனால் மனிதர் அதைச் சித்திரவதை செய்து விடுகிறார். 'நீங்கள் என்னைப் பாராட்டிக் கௌரவித்தீர்கள். பூபதி உயிரோடிருக்கும் போதே இந்தக் காலேஜ் பொறுப்பை நான் தான் ஏற்றுக் கொள்ளணுமின்னு ரொம்ப ரொம்பச் சொல்லிக் கொண்டிருந்தான். நான் தான் வேண்டாமின்னு சொல்லி மறுத்து வந்தேன். இப்போது இந்தப் பொறுப்பு என் தலையிலே விழுந்திருச்சு. உங்களில் சில ஆசிரியர்கள் பணிவும் மரியாதையும் தெரியாதவர்களாக இருக்கிறீர்கள். திருத்திக் கொள்ளாவிட்டால் நல்லதில்லை. உங்களுக்கு என் நன்றி. வாழ்த்துக்கள்'" என்று சுந்தரேசன் வெறுப்புக் கலந்த உற்சாகத்தோடு அதை 'இமிடேட்' செய்தார். "முதற் கூட்டத்தில் நாலைந்து நிமிஷம் பேசுவதற்குள்ளேயே இப்படி ஆசிரியர்கள் தலையில் நிறையக் கல்லைத் தூக்கிப் போட்டு விட்டார் என்று சொல்லுங்கள்" என்று குமரப்பன் சுந்தரேசனிடம் குத்தலாகக் கேட்டான். சுந்தரேசன் இதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்தார். "பெரிய மனித லட்சணங்களில் இதுவும் ஒன்று குமரப்பன்! ஒரு பெரிய மனிதன் என்றால் குறைந்த பட்சம் தாய் மொழியில் நாலு வாக்கியம் தப்பாகவாவது பேசத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது தாய்மொழியில் ஒன்றுமே பேசவோ எழுதவோ தெரியாதிருக்க வேண்டும். இது இன்னும் உத்தமம். மஞ்சள்பட்டி ஜமீந்தாரோ ரொம்ப ரொம்பப் பெரிய மனிதர். அதனால் தான் தாய்மொழியும் அவருக்கு நன்றாகத் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது" என்று சத்தியமூர்த்தி குறுக்கிட்டுப் பேசினான். அவனுடைய இந்தப் பொய்ப் புகழ்ச்சியில் வெறுப்பும் அலட்சியமும் தொனித்தன. அப்போது குமரப்பன் வேறொரு குறிப்பை நினைவூட்டினான். "அதிருக்கட்டும் சத்தியம்! ஜமீந்தார்வாளுடைய சொற்பொழிவில் இன்னொரு குறிப்பும் இருக்கிறது. பணிவையும் மரியாதையையும் பற்றி அவர் ஞாபகப்படுத்திப் பேசியிருக்கிறாரே, அது உனக்காகத்தான். நீ பாதிக் கூட்டத்தில் அலட்சியமாக எழுந்து சென்று விட்டதை மனதில் வைத்துக் கொண்டுதான் அவர் அப்படிப் பேசியிருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது." "தோன்றுவதாவது ஒன்றாவது? சத்தியமூர்த்திக்காகத் தான் ஜமீந்தார் அப்படிப் பேசியிருக்கிறார் என்று கூட்டம் முடிந்து வெளியேறிய போது ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுக்குள் சொல்லிக்கொண்டு வந்தார்களே?" என்றார் சுந்தரேசன். "நீங்களும் உங்கள் வெறுப்பை அவ்வளவு வெளிப்படையாக அங்கே காண்பித்திருக்க வேண்டாமென்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். கூட்டங்களில் நமக்கு வேண்டாதவர்களைப் புகழ நேரிடுவதும் நம்மால் வெறுக்கப்படுகிறவர்களுக்கு நம் கைகளாலேயே மாலை சூட்ட நேரிடுவதும் இன்றைய பொது வாழ்வில் தவிர்க்க முடியாத காரியங்கள். நூற்றுக்குத் தொண்ணூறு பாராட்டுக் கூட்டங்கள் அப்படித்தான் நடைபெறுகின்றன. 'இரகசியமான பகைமையும், பகிரங்கமான உறவும் தான் இன்றைய வாழ்வில் சாமர்த்தியமாக வாழ்வதற்குக் கருவிகள்' என்று இராச தந்திரிகள் மட்டுமல்லாமல் சாதாரணப் பொதுமக்களும் கூடப் புரிந்து கொண்டிருக்கிற காலத்தில் நீங்கள் மட்டும் அதைப் புரிந்து கொள்ளத் தவறியிருப்பது வருந்தத்தக்கது" என்று சுந்தரேசனே மனப்பூர்வமான அநுதாபத்தோடு மேலும் கூறினார். சத்தியமூர்த்தி இதைக் கேட்டு மறுமொழி ஒன்றும் கூறவில்லை. நண்பர்களுக்குள் இந்த விவாதம் அன்று மாலை இவ்வளவில் முடிந்துவிட்டது. மூவரும் சேர்ந்து இரவு உணவுக்குப் போய்விட்டு வந்தார்கள். தூங்குவதற்கு முன் அவர்கள் பேசிக் கொண்டிருந்த விஷயம் அன்றைய காலைத் தினசரிப் பத்திரிகைகளில் 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்து போய்விட்டாரா இல்லையா?' என்பதைப் பற்றியதாயிருந்தது. சத்தியமூர்த்திக்கும் குமரப்பனுக்கும் 'சுபாஷ் போஸ்' என்றால் உயிர். "பிரதேசங்களை இழப்பதும் தோற்பதும் கூட ஒரு தேசத்துக்குப் பெரிய நஷ்டம் இல்லை. சுபாஷ் போஸைப் போல் உணர்ச்சி மிக்க ஒரு தலைவனை இழப்பதுதான் பெரிய நஷ்டம்" என்று குமரப்பன் போஸைப் பற்றிப் பேசும் போதெல்லாம் வாய்க்கு வாய் கூறுவான். எதற்கும் அலட்சியமாகச் சிரித்து விடத் தெரிந்த அந்தத் துணிவு மிக்க 'கார்ட்டூனிஸ்ட்' போஸைப் பற்றிப் பேசும் போது மட்டும் நெகிழ்ந்து கண் கலங்கி விடுவான். மறுநாள் காலை சத்தியமூர்த்தி கல்லூரியில் நுழைந்ததும் மைதானத்திலும் - அலுவலகத்திலும் - பிரேயர் கூட்டத்திலும் - ஆசிரியர்கள் அறையிலும் - அங்கங்கே அவனைச் சந்தித்த ஆசிரியர்கள் எல்லோரும் அவனருகே பூகம்பத்தையோ, எரிமலையையோ அவனோடு சேர்த்துப் பார்ப்பது போல் பயத்தோடு பார்த்தார்கள். 'முதல் நாள் தேநீர் விருந்தின் போது எழுந்து வெளியே சென்ற பெருங் குற்றத்துக்காகப் பிரின்ஸிபல் அவனை என்ன செய்யப் போகிறார்?' என்று அறிந்து கொள்ளவும், காணவும் அத்தனை ஆசிரியர்களும் ஆவலாயிருப்பதாகத் தெரிந்தது. ஆனால் சத்தியமூர்த்தியோ வழக்கத்தை விட அதிகமாக நிமிர்ந்து நடக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டவனைப் போல் கல்லூரி எல்லையில் நிமிர்ந்து நடந்து கொண்டிருந்தான். அன்று முதல் பாட வேளை நேரத்திலேயே அவனுக்கு முக்கியமான வகுப்பு இருந்தது. சத்தியமூர்த்தியை முதல்வர் கூப்பிடுவதாகப் பாதி வகுப்பில் கல்லூரி ஊழியன் வந்து கூப்பிட்டான். "இப்போது வருவதற்கில்லை. வகுப்பை முடித்துவிட்டு வருகிறேனென்று சொல். மறுபடியும் நடு வகுப்பில் உள்ளே நுழைந்து என்னைக் கூப்பிடாதே" என்று பதில் சொல்லி அந்த ஊழியனைத் திருப்பி அனுப்பிய பின் ஒன்றுமே நிகழாதது போல் பழைய புன்முறுவலோடு மாணவர்கள் பக்கமாகத் திரும்பி வகுப்பைத் தொடர்ந்தான் சத்தியமூர்த்தி. மறுபடியும் வேண்டுமென்றே யாரோ தூண்டிவிட்டுச் சொல்லியனுப்பியது போல் அதே ஊழியன் பத்து நிமிஷங் கழித்து வகுப்பறைக்குள்ளே வந்து "சார் பிரின்ஸிபல் உடனே கூப்பிடறாங்க" என்று தொந்தரவு செய்தான். மாணவர்களுக்கு அப்போது அந்த ஊழியனை அறைந்து விடலாம் போல் எரிச்சலாக இருந்தது. 'ஹிஸ்டரி ஆஃப் லாங்வேஜ் அண்ட் லிட்ரேச்சர்' (மொழி இலக்கிய வரலாறு) வகுப்பை அன்று தான் நடத்தத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. மொழி இலக்கிய வரலாற்றைப் பற்றி அவன் அழகுறத் தொடங்கியிருந்த சொற்பொழிவு பாதியிலே நிற்கும்படி இரண்டு முறை குறுக்கிட்டுப் பிரின்ஸிபல் கூப்பிடுவதாக அந்த ஊழியன் தொல்லைப் படுத்தியதை வகுப்பில் யாராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சத்தியமூர்த்திக்கும் பொறுமை பறிபோய் விட்டது. பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|