55

     கொள்கையில்லாத படிப்பு வேரில்லாமல் ஊன்றிய செடியைப் போல் சிறிது காலம் பசுமையாய்த் தோன்றி விரைவில் பட்டுப்போய் விடுகிறது.

     "வேகமாகப் போய்த் தொலையேன்! இதென்ன பெருமாள் கோவில் தேருன்னு நினைச்சுக்கிட்டியா? ஊர்வலம் போறியே?" என்று தம்முடைய கோபத்தைக் கார் டிரைவரின் மேல் திருப்பினார் ஜமீந்தார். அவருடைய அக்கினிக் கோபம் உள்ளூரக் கனன்று கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டு கண்ணாயிரமும் கணக்குப்பிள்ளைக் கிழவரும் வாயைத் திறந்து பேசுவதற்கே பயந்தவர்களாகக் காரில் மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள். கார், பங்களாவின் 'போர்டிகோ'வில் போய் நின்றதும், ஜமீந்தார் விருட்டென்று கீழே இறங்கித் தம்முடைய ஆத்திரத்தின் அளவு தெரியும்படி கார்க் கதவை எவ்வளவு பலமாக ஓங்கி அடைக்க முடியுமோ அவ்வளவு பலமாக ஓங்கி அடைத்து விட்டு உள்ளே போய்விட்டார். மறுபுறமாக வந்து மோகினி கீழே இறங்குவதற்காகக் கார்க் கதவைத் திறந்து விட்டு விலகி நின்று கொண்டார் கணக்குப்பிள்ளைக் கிழவர். மோகினி பயந்து கொண்டே காரிலிருந்து இறங்கும் புள்ளிமானாகக் கண்ணீர் சிந்தியபடி கீழிறங்கினாள். கண்ணாயிரமும் கணக்குப்பிள்ளைக் கிழவரும் பட்டுப்புடவை மூட்டையைத் தூக்கிக் கொண்டு பின்னால் நடந்தார்கள். ஜமீந்தார் வாங்கிக் கொடுத்த பூப் பொட்டலம் காருக்குள்ளேயே கிடந்தது. டிரைவர் அதை எடுத்துக் கொண்டு பின்னால் - ஓடி வந்து மோகினியிடம் கொடுக்க முயன்று அவள் அதை வாங்கிக் கொள்ளாமல் வேகமாக நடந்து விடவே கண்ணாயிரத்திடம் கொடுத்துவிட்டுச் சென்றான். தனக்குப் பின்னால் கண்ணாயிரமும், கணக்குப்பிள்ளைக் கிழவரும், பூவுடனும், புடவை மூட்டையுடனும் வருகிறார்கள் என்ற ஞாபகமே இல்லாமல் புயலாக உள்ளே விரைந்து கொண்டிருந்தாள் மோகினி. எதிரே வந்த பாரதி, "புடவைக் கடைக்குப் போய்விட்டு வந்தீர்களா அக்கா..." என்று தொடங்கி முக மலர்ச்சியோடு ஏதோ விசாரித்ததற்கும் கூட நின்று பதில் சொல்கிற மனநிலையில் அவள் அப்போது இல்லை. 'மோகினி ஏன் பதில் சொல்லாமல் போகிறாள்? பட்டுப் புடவையை வாங்கப் போன இடத்தில் ஜமீந்தாருக்கும் இவளுக்கும் ஏதாவது சண்டையோ என்னவோ? அழமாட்டாத குறையாகக் கண் கலங்க நடந்து போகிறாளே? பாவம்!' என்று தனக்குள் நினைத்தாள் பாரதி. மோகினியைத் துரத்திக் கொண்டு போவது போல் புடவை மூட்டையும், பூப்பொட்டலுமுமாகக் கணக்குப்பிள்ளைக் கிழவரும், கண்ணாயிரமும் பின்னால் போவதைப் பார்த்து, 'இவர்கள் போய் அவளிடம் இன்னும் ஏதோ வயிற்றெரிச்சலைக் கிளறப் போகிறார்கள்' என்று பாரதி நினைத்துக் கொண்டாள். அவள் நினைத்தபடியே நடந்தது. அடுத்த அறையில் மோகினி கண்ணாயிரத்திடம் சீறி விழுவதைத் தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்தே ஜன்னல் வழியாகப் பார்த்தாள் பாரதி. அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவர் அதிகாரத்துக்கு நடுங்குவதையும் பயந்து சாவதையும் பார்த்து அவர் தான் சத்தியமூர்த்தியின் தந்தை என்பதையே ஒப்புக் கொள்ளத் தயங்கும் மனத்தோடு இருந்தாள் அவள். அந்தக் கிழவரைச் சத்தியமூர்த்தியின் அறையிலிருந்து காரில் திரும்ப அழைத்துக் கொண்டு வந்த விட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் இரண்டாவது தடவையாக டிரைவர் முத்தையா பாரதியைப் பார்க்கத் தோட்டத்துப் பக்கமாக வந்திருந்தான். அப்படிப் பார்க்க வந்திருந்த போது, "பாரதி அம்மா! சத்தியமூர்த்தி சாரோட அறையிலிருந்து இந்தக் கிழவர் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு படியிறங்கி வந்ததைப் பார்த்தாக் காரியம் ஒண்ணும் பலிக்கலேன்னு தோணுதம்மா! இவங்க சூழ்ச்சிக்குச் சத்தியமூர்த்தி சார் இணங்கியிருக்க மாட்டாரு..." என்று தெரிவித்து விட்டுப் போனான். உடனே சிறிது நேரத்துக்குள் ஜமீந்தாரையும், கண்ணாயிரத்தையும், அழைத்துக் கொண்டு ஜவுளிக் கடைக்குப் புறப்பட்டு விட்டான் முத்தையா. அதனால் அவனைப் பாரதியால் அதிக நேரம் நிறுத்தி வைத்துப் பேசிக் கொண்டிருக்க முடியாமல் போயிற்று. ஜமீந்தார், கண்ணாயிரம் முதலியவர்கள் மோகினியை அழைத்துக் கொண்டு ஜவுளிக்கடைக்குப் போயிருந்த போது கல்லூரி முதல்வரிடமிருந்து டெலிபோன் வந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லாததால் பாரதியே டெலிபோனை எடுத்து முதல்வருக்குப் பதில் சொல்ல வேண்டியதாயிற்று. கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்த நிலைமையை நேரில் கண்டறிந்து விசாரிப்பதற்காக மல்லிகைப் பந்தலுக்கு வந்து முகாம் செய்வதற்கிருந்த கலெக்டரையும் - மாவட்டப் பெரிய போலீஸ் அதிகாரியையும் தம்முடைய ஜமீன் மாளிகையிலோ, பூபதியின் பங்களாவை ஒட்டி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டிருந்த 'கெஸ்ட் ஹவுஸிலோ' (விருந்தினர் விடுதி) தங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு பிரமாதமான ஏற்பாடுகளையெல்லாம் செய்திருந்தார் ஜமீந்தார். கலெக்டரையும், போலீஸ் அதிகாரியையும் அவர்கள் மல்லிகைப் பந்தலுக்கு வந்து இறங்கிய சூட்டோடு போய்ப் பார்த்து வரவேற்று மஞ்சள்பட்டி ஜமீன் மாளிகையிலும், விருந்தினர் விடுதியிலும் அவர்கள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஜமீந்தார் செய்திருப்பதாகவும், இரண்டு பேருடைய சௌகரியங்களுக்காகவும் இரண்டு பெரிய கார்கள் டிரைவருடன் தனித்தனியே கத்திருப்பதாகவும், தெரிவித்து அழைத்துப் பார்த்திருக்கிறார் கல்லூரி முதல்வர். "ஜமீந்தாருடைய ஏற்பாடுகளுக்கு மிக்க நன்றி. ஆனால் நாங்கள் 'டிராவலர்ஸ் பங்களாவில்' தங்கிக் கொள்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டோம். எங்களுக்காக நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாம்" என்று கலெக்டரும், டி.எஸ்.பியும் மறுத்து விட்டார்களாம். இந்த விவரத்தை ஜமீந்தார் வந்ததும் அவரிடம் தெரிவித்து விட வேண்டுமென்று ஃபோனில் பாரதியிடம் கூறியிருந்தார் கல்லூரி முதல்வர். பாரதியும் ஜமீந்தார் வந்ததும் அவற்றை அப்படியே தெரிவிப்பதாகச் சொல்லியிருந்தாள்.

     இப்போது ஜமீந்தார் கடைவீதியிலிருந்து திரும்பியிருந்தாலும் அவர் கோபமாக உள்ளே நுழைந்த கோலத்தைப் பார்த்து அவரிடம் போய்ப் பேசுவதற்குப் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது அவளுக்கு. கண்ணாயிரத்திடம் சொல்லி அவர் மூலம் ஜமீந்தாருக்குத் தெரிவிக்கலாம் என்றால் கண்ணாயிரமும் உள்ளே மோகினியிடம் ஏதோ இரைந்து கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார். கண்ணாயிரத்தைக் கூப்பிட்டுக் கல்லூரி முதல்வர் டெலிபோன் செய்த விவரத்தைக் கூறலாம் என்று நினைத்த பாரதி உடனே அதைச் செய்யத் தோன்றாமல் ஜன்னலருகிலேயே தயங்கினாள். அடுத்த அறையில் கண்ணாயிரம் பட்டுப்புடவைப் பொட்டலத்தைப் பிரித்துப் பரப்பிக் கொண்டு மோகினியிடம் ஏதோ கத்துவதையும், மோகினி விசும்பி விசும்பி அழுவதையும் பார்த்துப் பரிதாபமாயிருந்தது அவளுக்கு. 'இந்தப் பெண்ணை ஏன் இவர்கள் இப்படிப் பாடாய்ப் படுத்துகிறார்கள்?' என்று அவளுக்கு வருத்தமாகவும் இருந்தது.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.