19

     முற்போக்காகப் பேசுவதற்கும் செயலாற்றுவதற்கும் மனிதர்கள் கிடைக்காத குறையை விட முற்போக்காக நினைப்பதற்கே மனிதர்கள் கிடைக்காத குறைதான் பெரிய வறுமை. செயலாற்றுவதற்குச் சோம்பல் படுகிற மனிதர்களை விட நினைப்பதற்கே சோம்பல் படுகிற மனிதர்கள் தாம் அதிகம் இருக்கிறார்கள்.

     மல்லிகைப் பந்தல் கல்லூரியின் சூழ்நிலைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எல்லாக் கல்லூரிகளிலும் உள்ள உறவு நிலை இப்படித்தான் இருக்கும் போலும் என்று தோன்றியது அவனுக்கு.

     'மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பட்டப்பெயர் வைத்துக் கேலி செய்கிறார்கள். ஆசிரியர்கள் தங்களுக்கு மேலே உள்ளவர்களுக்குப் பட்டப்பெயர் வைத்துக் கேலி செய்து திருப்திப்படுகிறார்கள். இதற்கு ஒரு முடிவேயில்லையா?' என்று மனம் நொந்த அவன் இவற்றுக்கெல்லாம் ஒரு விதிவிலக்குப் போலத்தான் ஓர் முழுமையான தீவிர இலட்சிய ஆசிரியனாக அந்தக் கல்லூரியில் விளங்க வேண்டுமென்று வைராக்கியம் கொண்டான். அன்று அவனை வகுப்புகளுக்குப் போகச் சொல்லவில்லை. முதல் நாளாகையால் வகுப்புகளும் அதிகமாக நடைபெறவில்லை. பேருக்கு இரண்டு மூன்று பீரியடுகளை நடத்தி விட்டு விட்டார்கள். கல்லூரி ஊழியனை அனுப்பித் தபாலாபீசிலிருந்து கடித உறைகள் வாங்கி வரச் செய்து ஊருக்குக் கடிதங்கள் எழுதினான் சத்தியமூர்த்தி. தந்தைக்கும், குமரப்பனுக்கும், இன்னொரு நண்பனுக்கும் கடிதங்களை எழுதி முடித்த பின் கடைசிக் கடிதத்தை மோகினிக்கு எழுதலாமா என்று தோன்றியது. தபாலை மோகினியின் தாய் வாங்கிவிட்டால் என்ன செய்வது என்ற தயக்கமும் கூடவே உடனெழுந்து முந்திய எண்ணத்தைச் செயலாக்கவிடாமல் தடுத்துவிட்டது. கண்ணீர் பெருகும் விழிகளோடு அழுகின்ற இதயமும் ஏதோ ஒரு முறைக்காகச் சிரிக்கின்ற வாயுமாக அவள் தனக்கு விடை கொடுத்த அந்தக் காட்சியை நினைத்தான் அவன். 'நாமிருவரும் பிரியும் போது கண்ணீரும் அமைதியுமே இருந்தன' என்ற கவிதை வரி நினைவு வந்தது. கல்லூரியின் சாயங்காலப் பாட வேளைகளும் முடிவதற்கு அறிகுறியாக மணி அடித்தது. விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் ஒவ்வொருவராக எழுந்து புறப்படத் தொடங்கிவிட்டார்கள். சிலர் கல்லூரியிலிருந்தபடியே மாலையில் பூபதியின் வீட்டுத் தோட்டத்தில் நடைபெற இருந்த தேநீர் விருந்துக்குப் போகலாம் என்ற நோக்கத்தோடு அங்கே தங்கியிருந்தார்கள். சத்தியமூர்த்தி கடிதங்களைத் தபாலில் போட்டுவிட்டு 'லேக் சர்க்கிளில்' அறைக்குப் போய் விட்டுத் திரும்பலாம் என்று புறப்பட்டிருந்தான். பாடனி விரிவுரையாளரும் தற்செயலாக உடன் வந்தார். ஆனால் நெருங்கி வந்து பேசவோ, பழகவோ பயப்படுகிறவர் போல் விலகி விலகி முன்னால் நடந்து போனார் அவர். 'கேட்' அருகே கல்லூரி விட்டுக் காரில் போய்க் கொண்டிருந்த பாரதி சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் காரை நிறுத்திக் கொண்டு பதற்றத்தோடு கீழே இறங்கினாள். ஆனால் அதைக் கவனிக்காதது போல் வேகமாக முன்னால் நடந்து போய்ப் பாடனி விரிவுரையாளரோடு சேர்ந்து கொண்டு விட்டான் சத்தியமூர்த்தி. பொன் தூவினாற் போன்றிருந்த சாயங்கால வெயிலில் நூலிழை நூலிழையாய்ப் பன்னீர் தெளிப்பதெனச் சாரல் பெய்யத் தொடங்கியிருந்தது. பாடனி விரிவுரையாளரின் கூச்சத்தை நீங்கச் செய்து அவரோடு பேசிக் கொண்டே நடந்தான் சத்தியமூர்த்தி. அந்தச் சாயங்கால வேளையில் மல்லிகைப் பந்தல் ஊரும் கருநீலங் கன்றிய மலைமுடிகளும் சொல்லி மாளாத கொள்ளை அழகுடையதாகத் தோன்றிக் கொண்டிருந்தன. சாரலும் பொன் வெயிலும் அந்த அழகை மேலும் அலங்கரித்தன.

     கடிதங்களைத் தபாலில் சேர்த்துவிட்டுச் சத்தியமூர்த்தி பாடனி விரிவுரையாளரோடு 'லேக் சர்க்கி'ளில் இருந்த தன் அறைக்குப் போய்க் கொண்டிருந்தான். சுபாவத்துக்கு அதிகமாகக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்த பாடனி விரிவுரையாளருடன் தான் பழகிய முறையினாலும் பேசிய விதத்தினாலும் சத்தியமூர்த்தி சிறிது மாறுதலை உண்டாக்கியிருந்தான். அந்த இளைஞரும் தங்கி வசிப்பதற்கு அறை தேடிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.