56

     ஆணின் மனத்தில் உணர்வுகள் தோன்றலாம். ஆனால் பெண்ணின் மனத்திலோ உணர்வுகள் மிக மெல்லப் பூக்கின்றன. உள்ளேயே மணந்து மணந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளைப் பெண் தன்னுடைய பலமான நிதியாக்கிக் கொண்டு விடுகிறாள்.

     ஓரிரு விநாடிகள் கல்லூரி முதல்வரின் முகத்தைக் கூர்ந்து கவனித்த பின் கலெக்டரே மேலும் தொடர்ந்து கூறலானார். "சில வட இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும், மாணவர்கள் வேலை நிறுத்தத்தால் வகுப்புக் கலவரங்கள், அடிபிடி சண்டைகள், அரசியல் தலைவர்களின் தலையீடு எல்லாம் கூட வரும். நம்முடைய தமிழ்நாட்டுக் கல்லூரிகளுக்கும் நீங்களே வலுவில் அப்படிக் கெட்ட பெயர் தேடாதீர்கள். இதுவரை நடந்தது போகட்டும். எல்லாவற்றையும் மன்னித்து விடலாம். இனிமேல் நாளையிலிருந்து ஒரு பொறுப்புள்ள பிரின்ஸிபலாக இருந்து கல்லூரியை நடத்துங்கள். இப்படியெல்லாம் நடந்துவிட்டதே என மனத்தில் வைரம் வைத்துக் கொண்டு சமையல்காரர்களையோ, கல்லூரி நைட்வாட்ச்மேனையோ பழிவாங்காதீர்கள். இத்தனை நாட்களாக வகுப்புக்கள் நடைபெறாததால் மாணவர்களுக்கும் படிப்பு கெட்டுப் போயிருக்கிறது. கல்லூரியின் நல்ல பெயரையும், சம்பந்தப்பட்டவர்களின் கௌரவத்தையும் உத்தேசித்து எந்த மேல் நடவடிக்கையும் இல்லாமல் இந்த விஷயங்களை நாங்கள் இப்படியே விட்டு விடுகிறோம்" என்று கலெக்டர் பரிவோடு கூறியபோது, பிரின்ஸிபல் குனிந்த தலை நிமிராமல் கேட்டுக் கொண்டிருந்தார். பின்பு மாணவர்களுடைய பெருங்கூட்டத்தினிடையேயும் ஒரு அரைமணி நேரத்துக்கு மேல் கலெக்டரும், டி.எஸ்.பி.யும் சொற்பொழிவாற்றினார்கள். பொறுப்புள்ள மாணவர்கள் தாம் தேசத்தின் எதிர்கால நம்பிக்கை என்பதையும், அவர்கள் அடிக்கடி வேலை நிறுத்தம் செய்வதற்கோ ஒத்துழைக்காமல் போவதற்கோ கல்லூரி என்பது குழப்பங்களும் போராட்டங்களும் நிறைந்த தொழிற்சாலையல்ல என்பதையும் விளக்கி அறிவுரை கூறினார்கள் அவர்கள். எல்லாம் சுமுகமாக முடிந்து விட்டது. ஜமீந்தார் 'லோ பிளட் பிரஷ'ரில் படுத்தவர் படுத்தவர் தான். சாயங்காலம் கல்லூரி முதல்வர் நடந்தவற்றை எல்லாம் தெரிவிக்கச் சென்றிருந்த போது கண்ணாயிரத்திடம் தான் எல்லாவற்றையும் தெரிவிக்க வேண்டியிருந்தது. ஜமீந்தரின் உடல்நிலையை எண்ணி அந்தச் செய்திகளை அவரிடம் அப்போது தெரிவிக்க வேண்டாமென்று டாக்டர் தடுத்துவிட்டார். கண்ணாயிரம் கல்லூரி முதல்வரை ஏதோ கோபித்துக் கொள்ளத் தொடங்கிய போது, "காலேஜை எப்படி நடத்தறதுன்னு எனக்கு நீங்கள் சொல்லித் தெரிய வேண்டாம்! தயவு செய்து உங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள்" என்று முதல்வரிடமிருந்து மிகவும் கடுமையாகப் பதில் வந்தது. டிரைவர் முத்தையா பின்புறமாகத் தோட்டத்துப் பக்கம் போய்ப் பாரதியிடம் நடந்தவற்றைத் தெரிவித்துக் கொண்டிருந்தான். சத்தியமூர்த்தியின் உண்மை வென்றுவிட்டதென்ற செய்தி அவளைப் பூரிக்கச் செய்தது.

     ஆனால், அதே மாலை வேளையில் மல்லிகைப் பந்தலின் டிராவலர்ஸ் பங்களா வாசலில் இன்னும் சற்று நேரத்தில் அங்கிருந்து மதுரைக்குப் புறப்படுவதாயிருந்த சத்தியமூர்த்தியின் முன்னாள் விரிவுரையாளராகிய இன்றைய கலெக்டர் அவனைக் கூப்பிட்டு மிகவும் அந்தரங்கமாக அவனுடைய எதிர்கால நலனுக்குகந்த அறிவுரை ஒன்றை அவனுக்குக் கூறிக் கொண்டிருந்தார். அந்தக் கலெக்டரின் பழைய மாணவனான குமரப்பனும் அப்போது உடனிருந்தான். சத்தியமூர்த்தியை அருகில் வந்து தட்டிக் கொடுத்து விட்டு ஊருக்குப் புறப்படு முன் விடைபெற்றார் கலெக்டர். 'ஜீப்' தயாராக டிராவலர்ஸ் பங்களாவின் முகப்பில் நின்று கொண்டிருந்தது. "மதுரைக்கு வந்தால் வீட்டுக்கு வா சத்தியம்! என்னுடைய யோசனையையும் மனத்தில் வைத்துக் கொள்! உன் எதிர்காலத்தில் மிகவும் நம்பிக்கை உண்டு எனக்கு. நடந்ததையெல்லாம் கெட்ட சொப்பனம் போல மறந்துவிடு! நான் யோசனை கூறிய விஷயமாக இன்னும் ஒரு வாரத்தில் நானே உனக்கு விவரமாக ஒரு கடிதம் எழுதுவேன் அதன் பிறகு உன் முடிவை நீ எனக்கு எழுதினால் போதும்" என்று சத்தியமூர்த்தியிடம் கூறிவிட்டுக் குமரப்பனின் பக்கமாகத் திரும்பி, "நீ விவரமாக எல்லாவற்றையும் உன் நண்பனுக்கு விளக்கிச் சொல் குமரப்பன்! நானும் ஊருக்குப் போய்க் கடிதம் எழுதுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் கலெக்டர். அந்தக் கலெக்டருக்குச் சத்தியமூர்த்தி இப்போது எவ்வளவோ நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருந்தான். விரிவுரையாளராயிருந்த காலத்திலேயே அவருடைய இலக்கியத் திறனையும் அறிவு நுணுக்கத்தையும் விரும்பி நேசித்தவன் அவன். அரசாங்கப் பிரதிநிதியாக ஒரு பொதுக் காரியத்தில் நியாயம் விசாரிக்க வந்திருந்தாலும், 'சத்தியமூர்த்தி' என்ற தன் பெயரைக் கேள்விப்பட்டதுமே தன்னைப் பற்றிய விவரங்களை விசாரித்து அந்தப் பெயருக்குடையவன் தம்முடைய பழைய மாணவனாகத் தான் இருக்க வேண்டுமென்று அநுமானமும் செய்து கொண்டு உடனே தன்னைக் கூப்பிட்டனுப்பி மனம் விட்டுப் பேசிய அந்தக் கலெக்டரின் பெருந்தன்மையை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தான் அவன். அதையெல்லாம் விடப் பெரிதாக அவன் மனத்தைத் தொட்ட பெருந்தன்மை, 'ஏதோ வந்தோம் - விசாரித்தோம் - போனோம்' என்று முறையைக் கழித்துவிட்டுப் போகாமல், மிகவும் உரிமை பாராட்டி, அவனுடைய எதிர்கால நலனுக்குரிய சிறந்த யோசனை ஒன்றையும் வற்புறுத்திக் கூறிவிட்டுப் போயிருந்தார் அந்தக் கலெக்டர். நண்பன் குமரப்பனுக்கும் அந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அன்றிரவு முழுவதும் சத்தியமூர்த்தி அதைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியிருந்தான்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.