25
தக்காளிப் பழத்தின் தோற்றத்தில் சிவப்பு நிறமே நிறைந்திருந்தாலும் காம்போரத்தின் சின்னஞ் சிறு பச்சை நிறத்தை எடுத்துக் காட்டுவதற்கே அவ்வளவு சிவப்பு நிறமும் பயன்படும். படித்துப் பட்டம் பெற்றவர்களில் பலரிடமுள்ள புத்தியும் திறமையும் அகங்காரத்தை எடுத்துக் காட்டவே துணையாயிருக்கின்றன. 'அறிமுகம்' என்ற தொடருக்கு மெய்யான பொருள்தான் என்னவாக இருக்க முடியும்? முகத்துக்கு முகம் அடையாளம் தெரிந்து அறிந்து கொள்வது மட்டும் அறிமுகமில்லை. மனத்துக்கு மனம் அடையாளம் தெரிந்து அறிந்து கொள்வதுதான் அறிமுகம். சத்தியமூர்த்தி அங்கு வந்து அந்தக் கல்லூரியில் விரிவுரையாளனாகப் பணிபுரியத் தொடங்கியிருந்த சில வாரங்களிலேயே மாணவ மாணவிகளுக்கு நன்றாக அறிமுகமாகியிருந்தான். முகத்தை அறிந்தவர்கள் தவிர அவன் மனத்தை அறிந்த மாணவர்களும் அங்கு ஏராளமாக இருந்தார்கள். முதல் நாள் மாலை ஏரிக்கரையில் அவனோடு அமர்ந்து உரையாடிவிட்டுச் சென்ற மாணவர்கள் கூட்டத்தில் மிகவும் சுறுசுறுப்பான மாணவன் ஒருவன், "நீங்கள் இந்தக் கல்லூரிக்கு மட்டும் பேராசிரியர் இல்லை! பல விதங்களில் சமூகத்துக்கே பேராசிரியராய் ஆகிற தகுதி உங்களுக்கு இருக்கிறது. உங்களைப் போன்றவர்கள் தாம் சமூகத்துக்குப் பேராசிரியராக இல்ங்க வேண்டும்" என்று உணர்ச்சி வசப்பட்டுச் சொல்லியிருந்தான். பிறர் மிகையாகப் புகழும் போது அதற்குப் பதிலாகப் புன்முறுவல் பூத்து அந்தப் புகழ்ச்சியை மறப்பது அவன் வழக்கம். சத்தியமூர்த்தி இப்படியெல்லாம் இந்தப் புகழ்ச்சியைக் கொண்டாடாமல் இருக்கும் போதே அந்தக் கல்லூரி ஆசிரியர்களில் அவன் மேல் பொறாமைப்படுகிறவர்கள் அதிகமாயிருந்தார்கள். சில நோட்டுப் புத்தகங்களில் ஒரு புறமாகத் தாளைக் கிழித்தால் நாமறியாத மற்றொரு புறத்தையும் அது உதிர்த்து வைத்திருக்கும். இதைப் போல நம்முடைய ஒரு பக்கத்து விளைவுகள் மற்றொரு பக்கத்தைப் பாதிப்பதுண்டு. சத்தியமூர்த்தியின் புகழும் இப்படி அவனறியாமலே அவனை மற்றொரு பக்கத்தில் பாதித்திருந்தது. சதாகாலமும் அவனைச் சூழ நின்று மாணவர்கள் ஆர்வத்தோடு பேசுவது கல்லூரி முதல்வரிலிருந்து ஆசிரியர்கள் வரை யாருக்கும் பிடிக்கவில்லை. "பையன் ரொம்பவும் 'சீப் பாப்புலாரிட்டிக்கு' (மட்டமான புகழுக்கு) ஆசைப்படறான். எப்பப் பார்த்தாலும் தன்னைச் சுற்றிப் பிள்ளைகளை நெருங்க விட்டால் 'கெத்து'ப் போயிடும். நாளடைவிலே தானாகத் தெரிஞ்சுக்குவான். புதுமோகம் இப்படித்தான் இருக்கும்" என்று முதல்வர் வேறு யாரிடமோ கேலியாகப் பேசியதைத் தான் கேட்டதாக ஒரு மாணவன் சத்தியமூர்த்தியிடம் வருத்தத்தோடு வந்து கூறியிருந்தான். இன்னொரு வகுப்பில் ஆங்கிலப் பேராசிரியரிடம் சத்தியமூர்த்தி 'ஷீ வாக்ஸ் இன் பியூட்டி' என்ற கவிதையை அழகுற விளக்கிய பெருமையை மாணவர்கள் சொல்லிப் புகழ்ந்தார்களாம். சத்தியமூர்த்தியைப் பற்றிய புகழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்தப் பேராசிரியர், "உங்கள் மனப்போக்குத் தெரிந்து உங்களுக்குப் பிடித்தமான காதல் கவிதையைத் தேடிப் பிடித்து விளக்கினால் கொண்டாடத்தானே செய்வீர்கள்? இந்தப் புகழ்ச்சியும் மகிழ்ச்சியும் சிறுபிள்ளைத்தனமான காரியங்கள். இதனால் பரீட்சை எழுதிப் பாஸ் பண்ணி விட முடியாது..." என்று அதிகப் பொறுப்புள்ளவரைப் போல் பேசிப் பொறாமைப் பட்டாராம். இப்படிப்பட்ட செய்திகளைச் சத்தியமூர்த்தி தெரிந்து கொள்ள விரும்பாவிட்டாலும் அவனுடைய பெருமையில் அக்கறையுள்ள மாணவர்கள் இவற்றை அவனுக்குத் தெரிவிக்கத் தவறுவதில்லை. வேறொரு பேராசிரியர், "ஆள் பார்க்க நன்றாக இருந்தாலே உங்களுக்கெல்லாம் பிடித்துப் போகுமே? கேட்க வேண்டுமா?" என்று சத்தியமூர்த்தியைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டாராம். சத்தியமூர்த்தி கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இப்படிச் செய்திகள் நிறைய வந்து அவன் செவிகளை எட்டிக் கொண்டிருந்தன.
'பிள்ளைகளை அரட்டி மிரட்டி வைத்திருந்தால் தான் அவர்கள் தங்களிடம் ஓரளவாவது மரியாதை வைத்திருப்பார்கள்' என்ற தப்பபிப்பிராயம் பெரும்பாலான ஆசிரியர்களிடம் இருப்பதைச் சத்தியமூர்த்தி அறிந்து வருந்தினான். திறமையால் கவர்ந்து மதிப்பைப் பெற முடியாமல் பயமுறுத்திக் கவர்ந்து மதிப்பைப் பெற முயலும் இந்த முயற்சியை வியந்தான் அவன். 'உதவி வார்டன்' என்ற முறையில் அவன் மாணவர் விடுதிகளை அடிக்கடிச் சுற்றிப் பார்த்தான். ஆனால் 'வார்டன்' அப்படிச் சுற்றிப் பார்ப்பதை அவ்வளவாக விரும்பவில்லை என்று தெரிந்தது. "அடிக்கடி விடுதிகளில் சுற்றாதீர்கள். பிள்ளைகளிடம் நம்மைப் பற்றி ஓர் 'அத்து' இருக்க வேண்டும். அடிக்கொரு தரம் அருகே போய் வந்தால் 'அத்து' போய் விடும் என்று பேச்சுப் போக்கில் 'வார்டன்' அவனிடம் ஒரு நாள் எச்சரித்தார். பூபதியோ மாணவர்களின் விடுதியைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டுமென்று அவனிடம் கூறியிருந்தார். 'வார்டனின்' போக்கு விசித்திரமானதாக இருந்தது. சத்தியமூர்த்தியாக எதையும் செய்ய முடியாமல் தடுத்துக் கொண்டேயிருந்தார் அவர். இந்த நிலையில் அன்று காலை ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பின் 'வார்டனிடம்' பட்டும் படாமலும் தான் பழகிய நிலையை மாற்றிக் கொண்டு கண்டிப்பாகப் பேசியே தீரவேண்டிய அவசியம் சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டிருந்தது.
மல்லிகைப் பந்தல் கல்லூரியில் விடுதி விதிகள் ஓரளவு கண்டிப்பானவை. விடுதி அறையில் முதலாண்டு மாணவர்களானால் ஓர் அறைக்கு இருவர் வீதமும் இறுதியாண்டு மாணவர்களானால் ஓர் அறைக்கு ஒரே மாணவர் வீதமும் வசிக்க ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது. இறுதி ஆண்டு மாணவர்கள் பல்கலைக் கழகப் பரீட்சைக்குப் போகிறவர்களாயிருப்பார்கள் என்பதால், அவர்கள் படிப்பில் சிரத்தை காட்ட வேண்டுமென்று தனி அறையில் விடப்பட்டிருந்தார்கள். விடுதிக் கட்டணமும், உணவுச் செலவும் மொத்தச் செலவை ஈவு வைத்து (டிவைடிங் ஸிஸ்டம்) வசூலிக்கப்பட்டன. சைவ, அசைவ உணவுக் கூடங்கள் தனித்தனியே இருந்தன. எங்கே சுற்றினாலும் எந்த மாணவனும் இரவு எட்டு மணிக்குள் தன் அறைக்குத் திரும்பியாக வேண்டும். தகுந்த காரணங்கள் இருந்தால் வார்டனிடமோ உதவி வார்டனிடமோ சொல்லி அனுமதி பெற்றுக் கொண்டு தான் வெளியே போக வேண்டும். ஒரு மாணவன் சட்டத்தை மீறி யாரிடமும் அனுமதி பெறாமல் வெளியேறி போயிருப்பதாகத் தோன்றினால் அவன் திரும்பி வந்து அறைக்குள் நுழைய முடியாமல் அவன் அறையில் ஏற்கெனவே பூட்டியிருந்த பூட்டுக்கு மேல் இன்னொரு பூட்டைப் பூட்டிக் 'கவுண்டர் லாக்' செய்யும் அதிகாரம் வார்டனுக்கு உண்டு. இதனால் தவறு செய்த மாணவன் திரும்பி வந்தால் வார்டனைச் சந்திக்காமல் தன்னுடைய அறைக்குள் நுழைய முடியாது. குறிப்பிட்ட சம்பவம் நடந்த தினத்துக்கு முன் தினம் இரவு மல்லிகைப் பந்தலிலிருந்து இருபது மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மலைக்காட்டு ஊரில் தன் தந்தையைப் புலி அடித்துப் போட்டுவிட்ட தகவல் தெரிந்து ஓர் அரிஜன மாணவன் இரவோடு இரவாக ஊருக்குப் போக நேர்ந்திருந்தது. அந்த மாணவன் கல்லூரிக் காம்பவுண்டுக்குள்ளேயே இருந்த 'வார்டனின்' வீட்டில் போய்க் கதவைத் தட்டியிருக்கிறான். யாரும் திறக்கவே இல்லை. 'வார்டன்' குடும்பத்தோடு இரண்டாவது ஆட்டம் திரைப்படம் பார்க்கப் போயிருந்தார். வேறு வழியில்லாத காரணத்தால் சத்தியமூர்த்தியின் அறைக்கு வந்து கதவைத் தட்டி அவனிடம் சொல்லிவிட்டுத் தந்தையைப் பறிகொடுத்த துயரம் தாங்காமல் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறியபடி ஊருக்கு ஓடியிருந்தான் அந்த மாணவன். நள்ளிரவில் அந்த மாணவன் வந்து தட்டி எழுப்பியதிலிருந்தும், தந்தையை புலி அடித்துப் போட்டு விட்டதைக் குமுறிக்கொண்டு வரும் அழுகையோடு அந்தப் பையன் கூறிவிட்டுப் போனதிலிருந்தும், சத்தியமூர்த்திக்கு மனம் அதிகமாகவே வேதனையுற்றிருந்தது. அதற்குப் பின்பு அன்றிரவு அவன் தூங்கவேயில்லை. ஆனால் என்ன கொடுமை? மறுநாள் மாலையில் அந்தப் பரிதாபத்துக்குரிய மாணவன் திரும்பி வந்த போது அவனுடைய அறையில் கவுண்டர் லாக் போட்டு மேல் பூட்டு பூட்டியிருந்தார்களாம். வார்டனிடம் போய் விசாரித்ததில் அந்த மாணவன் அன்றிலிருந்து ஒரு வாரத்துக்குள் இருபத்தைந்து ரூபாய் தண்டம் கட்ட வேண்டும் என்றும், யாரிடமும் அனுமதி பெறாமல் விடுதியிலிருந்து வெளியேறிப் போனதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் வார்டன் கூறினாராம். உதவி வார்டனிடம் சொல்லி அனுமதி பெற்ற பின்பே தான் சென்றதாக அந்த மாணவன் சொல்லியதைக் கேட்டு வார்டன் எரிந்து விழுந்தாராம். "உதவி வார்டனாவது, மண்ணாங்கட்டியாவது? நான் ஒருத்தன் 'வார்டன்' என்று இங்கே பட்டத்தைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் போது நீ அங்கே ஏன் போகணும்?" என்று வார்டன் ஆத்திரத்தோடு கூப்பாடு போட்டதாக அந்த மாணவன் வந்து தெரிவித்த போது சத்தியமூர்த்தியின் மனம் எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறிப் பொறுமையிழந்து தவித்தது. பொறுமையோடு தன்னடக்கமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள முயன்றான் அவன். தக்காளிப் பழத்தின் மொத்தமான தோற்றத்தில் சிவப்பு நிறமே நிறைந்திருந்தாலும் காம்போரத்தில் இருக்கிற சின்னஞ்சிறு பச்சை நிறத்தை எடுத்துக் காட்டுவதற்கே அவ்வளவு சிவப்பு நிறமும் பயன்படும். படித்துப் பட்டம் பெற்றவர்களில் பலரிடமுள்ள புத்தியும் திறமையும் சொந்த அகங்காரத்தை எடுத்துக் காட்டவே துணையாக இருப்பதை இந்த நிகழ்ச்சியாலும் சத்தியமூர்த்தி புரிந்து கொள்ள முடிந்தது. வார்டனைச் சந்தித்து விரிவாகப் பேச வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. அன்று விடுமுறை நாளாகையால் அந்தப் பையனை உடன் அழைத்துக் கொண்டு வார்டனுடைய வீட்டுக்குச் சென்றான் சத்தியமூர்த்தி. 'வார்டன்' மிகக் கடுமையாயிருந்தார். வீட்டுக்குப் படியேறி வருகிற சக ஆசிரியனை வரவேற்று ஒரு நாகரிகத்துக்காக மலர வேண்டிய முக மலர்ச்சி கூட அவரிடம் இல்லை. உடன் வந்த மாணவன் வெளியே வாசற்புறமே நின்று கொண்டு விட்டதனால் சத்தியமூர்த்தி மட்டுமே வார்டனுடைய வீட்டுக்குள் சென்றான். ஆனால் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த வார்டன், சத்தியமூர்த்தி அந்த மாணவனை உடனழைத்துக் கொண்டு வருவதைத் தொலைவிலேயே பார்த்துவிட்டார். இதனால் சத்தியமூர்த்தி உள்ளே படியேறி வந்ததுமே, "மிஸ்டர் சத்தியமூர்த்தி! இதில் எல்லாம் நீங்கள் 'இண்டர்ஃபியர்' செய்வது (தலையிடுவது) சிறிதும் நன்றாயில்லை. கடுமையாயிருந்தாலொழிய இந்தக் காலத்தில் மாணவர்களை வழிக்குக் கொண்டு வரமுடியாது..." என்று அவன் வந்த காரியத்தைப் பற்றிப் பேசுவதற்கே இடம் கொடுக்காதவராகப் பிடிவாதமாயிருந்தார். "இதில் நான் தலையிட்டுத் தீர வேண்டியிருப்பதற்காக என்னை மன்னியுங்கள் சார்! இந்தப் பையனுடைய அறைக்குக் 'கவுண்டர் லாக்' போட்டுப் பூட்டுவதற்கும், இருபத்தைந்து ரூபாய் தண்டம் கொடுப்பதற்கும் இவன் ஒரு தவறும் செய்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. மலைக்காட்டு ஊரில் தகப்பனைப் புலி அடித்துக் கொன்று போட்டு விட்டதாகத் தகவல் தெரிந்து ஊருக்குப் போயிருக்கிறான். அந்த நிலையிலும் உங்களைத் தேடி வந்து சொல்லிவிட்டுப் போகத்தான் முயன்றிருக்கிறான் இவன். நீங்கள் வீட்டோடு பூட்டிக் கொண்டு இரண்டாவது ஆட்டம் திரைப்படத்துக்குப் போய்விட்டீர்கள். அப்புறம் என்னைத் தேடி வந்து சொல்லிக் கொண்டு தான் இவன் ஊருக்குப் போயிருக்கிறான். இவனுக்கு நேர்ந்திருக்கிற கொடுமைக்கு இவன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமலே விடுதியிலிருந்து புறப்பட்டுப் போயிருந்தாலும் நீங்களும் நானும் அதை மன்னிக்கத் தயாராயிருக்க வேண்டும் என்பது என் கருத்து. உங்களிடம் சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டிருப்பதற்கு நான் விரும்பவில்லை. இந்தப் பையனுடைய அறைக் கதவை திறந்து விடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். இல்லாவிட்டால் நான் கல்லூரி நிர்வாகியைப் பார்த்து இதைப் பற்றி விவாதிக்க நேரிடும்" என்று கூறிவிட்டு அவருடைய பதிலை எதிர்பார்க்காமலே வெளியேறினான் சத்தியமூர்த்தி. வார்டனின் வீட்டு வாசலிலிருந்தே அந்த மாணவனுக்கு விவரம் சொல்லி அனுப்பினான் அவன். "தம்பீ! நீ உன்னுடைய அறை வாயிலில் போய்க் காத்திரு. இரவு எட்டு மணிக்குள் 'கவுண்டர் லாக்' எடுக்கப் பெற்று அறைக் கதவைத் திறக்க வழி உண்டா இல்லையா என்று பார். முடியாவில்லையானால் எட்டரை மணிக்கு என்னை அறையில் வந்து பார். உன்னை நான் கல்லூரி நிர்வாகியிடம் அழைத்துக் கொண்டு போகிறேன்." ஏழே முக்கால் மணிக்கு அந்த மாணவன் வந்து தன்னுடைய அறைக் கதவு திறந்து விடப் பெற்றதாகச் சொல்லிச் சத்தியமூர்த்திக்கு நன்றியும் தெரிவித்துவிட்டுப் போனான். இது ஒரு சாதாரண நிகழ்ச்சியானாலும் அன்றிரவு நீண்ட நேரம் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரி முதல்வர், வார்டனாக இருக்கும் துணை முதல்வர் என்று இப்படி ஒவ்வொருவராகத் தனக்கு எதிரிகளாகி வருவதை எண்ணியபோது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வறட்சியாயிருந்தது. கெடுதல் செய்கிறவர்களுடைய பகைமையை நல்லவர்கள் விலை கொடுத்தாவது வாங்கிக் கொண்டு எதிர்க்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.
கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை. என்ற குறளை நினைவு கூர்ந்தான் சத்தியமூர்த்தி. 'ஒரு நல்ல மனிதன் வாழ்க்கையில் தன்னுடைய ஒவ்வொரு தேவைக்காகவும் மட்டுமே போராட முடியாது. தன்னுடைய தேவைக்காகவும் நியாயத்துக்காகவும் சேர்த்துப் போராட வேண்டியிருக்கும்' என்று அடிக்கடி நினைக்கும் அந்த வாக்கியம் ஞாபகம் வந்தது அவனுக்கு. தான் எடுத்துக் கூறி விவாதித்த விஷயம் எதுவோ அதிலுள்ள நியாயத்துக்குச் செவி சாய்க்காமல், 'எட்டு மணிக்குள் இந்தப் பையனுடைய அறைக் கதவைத் திறந்துவிடவில்லையானால் நான் இதைப் பற்றிக் கல்லூரி நிர்வாகியிடம் போய்ப் பேச வேண்டியிருக்கும்' என்று கூறியதற்காக மட்டும் செவி சாய்த்து அந்த விளைவுக்கு அஞ்சியே வார்டன் அப்படி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டிருப்பதாகச் சத்தியமூர்த்திக்குத் தோன்றியது. சுற்றியிருக்கிற கௌரவமான மனிதர்கள் எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் அருவருக்கத் தக்கவர்களாக அவன் கண்களுக்குத் தோன்றினார்கள். படிப்பையும் மதிக்காமல் நியாயத்தையும் மதிக்காமல் வறட்டு ஜம்பம் மட்டுமே கொண்டாடுகிறவர்களுக்கு நடுவே பழக நேரிடுவதைப் போல் ஒரு நல்ல மனிதனுக்கு ஆயுள் தண்டனை வேறொன்றும் இருக்க முடியாது. கண்மூடி உறங்காமல் மனப் போராட்டங்களாலும் எண்ணங்களாலுமே தன்னை மூடிக் கொண்டு உறங்க முயன்ற அந்த இரவுக்குப் பின் மறுநாள் பொழுது புலர்ந்து கல்லூரிக்குச் சென்ற போது மனம்விட்டுப் பேசவும், பழகவும் ஓர் உண்மை நண்பன் கூட இல்லாத சூனியப் பிரதேசமான பாலைவனத்தில் நடமாடுவதைப் போல் ஆளைத் தவிக்கச் செய்யும் ஒரு விதமான தனிமையைச் சத்தியமூர்த்தி உணர்ந்தான். தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் ஊரிலிருந்து இன்னும் திரும்பவில்லை. போன இடத்திலிருந்தே தந்தி கொடுத்து லீவை மேலும் இரண்டு நாளைக்கு வளர்த்திருந்தார் அவர். போதாத குறைக்கு அன்று காலையில் அவன் கல்லூரிக்குச் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் விடுதியில் தங்கி வசிக்கும் மாணவர்கள் பத்து பன்னிரண்டு பேர் ஹாஸ்டலில் மாணவர்களுக்காக இரவில் கொடுக்கப்படும் பாலைப் பற்றிப் பெரிதாகக் குறை சொல்லிக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் காலையில் குளிப்பதற்கு வெந்நீர், இரவில் பருகுவதற்குப் பால் ஆகியவை வேண்டுமானால், தனியே பணம் கட்டி அவற்றுக்காகக் கல்லூரியில் அச்சிட்டு வைத்திருக்கும் சீட்டுக்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெந்நீர் சீட்டுக்களுக்கும், பால் சீட்டுக்களுக்கும், எண்ணெய் நீராடுகிற தினங்களில் எண்ணெய்க்காக வழங்கப்படும் 'ஆயில் டிக்கெட்டு'களுக்கும் - 'காலேஜ் கரென்ஸி' என்று பெயர் சூட்டியிருந்தார்கள் குறும்புக்கார மாணவர்கள். ஒவ்வொரு மாதமும் இருபது தேதிக்கு மேலாகிவிட்டால் இந்தக் 'கரென்ஸி'க்கு மதிப்பு அதிகமாகிவிடும். 'வெந்நீர்க் கரென்ஸி' தீர்ந்து போனவன் அடுத்த அறைப் பையனிடம் நாலணாக் கரெண்ஸியை எட்டணாவுக்கு உயர்த்திப் 'பிகு' செய்வான். அவசரத் தேவைக்காக மாணவர்கள் இந்தக் 'கரென்ஸி'யை விற்பதும் உண்டு. "ஒரு 'மில்க் கரென்ஸி'க்கு நாலணா கொடுத்து வாங்குகிறோம் சார்! முக்கால்வாசி நாட்கள் திரிந்து போன பாலைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். சில நாட்களில் சர்க்கரை போட மறந்து போகிறார்கள். இன்னும் சில நாட்களில் அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் போது பாலாக இருந்தது நாங்கள் பருகுவதற்குக் கையில் எடுக்கும் போது தயிராக மாறி விடுகிற விந்தையைக் காண்கிறோம்" என்று கோபமாகவும், அந்தக் கோபத்தில் பிறந்த நகைச்சுவையுடனும் சத்தியமூர்த்தியிடம் வந்து குறை சொல்லிக் கொண்டு நின்றார்கள் அந்த மாணவர்கள். "இதை நீங்கள் ஏன் 'வார்டனிடம்' போய்ச் சொல்லக் கூடாது?" என்று கேட்டான் சத்தியமூர்த்தி. "வார்டனிடம் நாலைந்து முறை சொல்லி அலுத்துப் போச்சு சார்! அதிகம் சொன்னால், 'சரிதான் போங்கப்பா... ஒரு நாள் திரிந்த பாலைக் குடித்தால் தான் என்ன? குடியா முழுகிவிடும்?' என்று அவரே பதில் சொல்லி விடுகிறார் சார்" என்று சத்தியமூர்த்திக்குச் சொல்வதற்குத் தயாராகப் பதில் வைத்திருந்தார்கள் அந்த மாணவர்கள். "வர வர மல்லிகைப் பந்தல் 'காலேஜ் கரென்ஸி'யின் மதிப்பு அதல பாதாளத்துக்குக் கீழே இறங்கிப் போய்விட்டது சார்" என்று சத்தியமூர்த்தி தங்களைத் தவறாகப் புரிந்து கொள்கிற ஆளில்லை என்ற நம்பிக்கையோடும், உரிமையோடும் சிரித்துக் கொண்டே வேடிக்கையாகச் சொன்னான் மற்றொரு மாணவன். அன்று பிற்பகலில் அவன் மாணவர்கள் சார்பில் வார்டனிடம் இதை எடுத்துக் கூறச் சென்ற போது முதல் நாள் நிகழ்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு அவர் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. இரண்டாம் தரம் சற்றே அழுத்திக் கேட்ட போதும் "இதெல்லாம் நீங்களே பார்த்து ஏற்பாடு செய்யலாமே? என்னைக் கேட்பானேன்? நிர்வாகியையே நேரில் சந்தித்துக்கூட இதைப்பற்றி விவாதிப்பீர்கள் நீங்கள். உங்களால் முடியாத காரியமும் உண்டா?" என்று குத்தலாக மறுமொழி கூறினார் 'வார்டன்'. சத்தியமூர்த்திக்கு எதற்காக இவரைத் தேடி வந்தோம் என்று வெறுப்பாகி விட்டது. காலையில் கல்லூரிக்குள் நுழையும் போது மனம் விட்டுப் பழகுவதற்கு உண்மை நண்பர்கள் இல்லாத பாலைவனமாக அது தோன்றியதே, அதே போன்றதொரு தனிமையை மீண்டும் உணர்ந்தவனாக அரை நாளைக்கு லீவு எழுதிக் கொடுத்துவிட்டு அறைக்குத் திரும்பி விட்டான் அவன். கல்லூரிக் காம்பவுண்டிலிருந்து அவன் வெளியேறு முன் ஊழியன் பிற்பகல் தபாலில் அவன் பெயருக்கு வந்திருந்த கனமான கடித உறை ஒன்றைப் பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். முகவரி எழுதியிருந்த கையெழுத்து குமரப்பனுடையதாக இருக்கவே மனம் சிறிது ஆறுதலடைந்தது. அறையில் போய் அந்த உறையைப் பிரித்து நண்பனையே நேரில் சந்தித்தது போன்ற மகிழ்ச்சியோடு அவனுடைய கடிதத்தைப் படிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே சத்தியமூர்த்தி வேகமாக நடந்தான். அன்றிருந்த மனநிலையில் குமரப்பனின் கடிதம் வந்தது அவனுக்குப் பெரிய ஆறுதலாயிருந்தது. அறைக்குப் போய் எதிரே மலைகளும் அமைதியான ஏரி நீர்ப் பரப்பும் தெரிகிறாற் போல் மாடி வராந்தாவில் சாய்வு நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு அந்தக் கடித உறையைப் பிரித்த போது அவன் எதிர்பாராத வேறு மகிழ்ச்சியும் அந்த உறைக்குள்ளே இருந்தது. மோகினி நாட்டியமாடும் கோலத்தில் எடுத்த புதிய புகைப்படங்களிரண்டும் உறைக்குள் இருந்தன. ஒரு படத்தில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்தே சிரிப்பது போலிருந்தது அந்த அழகிய படம். குமரப்பன் எதற்காக எப்படி இந்தப் படங்களை எடுத்து அனுப்பினான் என்று அறிந்து கொள்ளத் தவிக்கும் மனத்தோடு அவனுடைய கடிதத்தைப் படிக்கத் தொடங்கினான் சத்தியமூர்த்தி. உண்மை நண்பனின் அந்தக் கடிதம் அன்று அவனுக்கு ஏற்பட்டிருந்த எல்லாவிதமான கவலைகளையும் மறக்கச் செய்தது. பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|